name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (10) வடமொழி மயமான ஊர்ப் பெயர்கள் !

சனி, செப்டம்பர் 07, 2019

சிந்தனை செய் மனமே (10) வடமொழி மயமான ஊர்ப் பெயர்கள் !

வடமொழி மேலாண்மையில் சிக்கித் தவிக்கிறது தமிழ்நாடு 


மனிதன் குடியிருப்பதற்கு ஒரு வீடு தேவை. கூடி வாழ்வதற்கு ஒரு ஊர் தேவை. இவ்விரண்டையும் தனக்கு நன்மை பயக்கும் வகையில் அவன் வடிவமைத்துக் கொள்ளவேண்டும் !

எனக்கு வீடு தேவைப்படுகையில், அதன் வடிவமைப்பை நான் தான் முடிவு செய்ய வேண்டும். இன்னொருவன் தன் விருப்பத்தை அதில் புகுத்த அனுமதிக்கக் கூடாது. உற்றார் உறவினரோடு நான் உறைகின்ற ஊர் எப்படி இருக்க வேண்டும் என்பதை என் ஊர் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வேறு ஊரினர் இதில் தலையிட உரிமை இல்லை !

பண்டைய தமிழர்கள் பல குடும்பங்களகச்  சேர்ந்து பல ஊர்களைக் கட்டமைத்தனர். நீர்நிலைகளை உருவாக்கினர். கரம்பு நிலங்களை வயல்களாகப்  பக்குவப் படுத்தி வேளாண்மையை அறிமுகப்படுத்தினர். அந்த ஊர்களுக்கு அவர்கள் தனித் தனிப் பெயர்களையும் சூட்டினர். மருதவனம், நல்லூர்,  மாங்குடி, ஆலங்குடி, ஆற்றூர், இடையூர், கடிநெல்வயல், எழிலூர், திருவாலங்காடு, திருப்புத்தூர் எனக் காரணங்களுடன் கூடிய அழகிய தமிழ்ப் பெயர்களாக அவை அமைந்தன !

காலப்போக்கில், நாடோடிகளாய் வந்த நச்சுக் கும்பலொன்று தமிழ் மக்களிடையே பொல்லாங்குக் கருத்துகளைப் புனை கதைகளாக யாத்து, ஊர்ப்பெயர்களை மாற்றி அமைக்கலாயினர்.  கற்பனைக் கதைகளில் மனம் மயங்கிய மக்கள், விழிப்பின்றி இருந்த சூழலில், தமிழில் இருந்த ஊர்ப் பெயர்கள் வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்டன !

தூங்கியவன் தொடையில் திரித்தவரை ஆதாயம் என்று ஒரு சொலவடை ஊர்ப்புறங்களில் உண்டு. எந்தெந்த ஊர் மக்கள் விழிப்புக் குறைந்தனரோ அந்த ஊர்ப் பெயர்களெல்லாம் வடமொழிப் பெயர்களாயிற்று. தமிழன் எப்போதெல்லாம் விழிப்பின்றி இருந்தானோ அப்போதெல்லாம் தமிழும், தமிழர் பண்பாடும், பழக்க வழக்கங்களும் சிதைக்கப்பட்டன !

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்க வேண்டும்  என்று சொன்னான் ஒருமேலை நாட்டு அரசியல் அறிஞன். அதுதான் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழர் அல்லாத வேற்றாரின் கவடத்தால் தில்லையூர் சிதம்பரம் ஆயிற்று. திருவரங்கம் ஸ்ரீரங்கம் ஆயிற்று; திருத்தவத்துறை இலால்குடி ஆயிற்று. திருமுதுகுன்றம் விருத்தாசலம் ஆயிற்று;  பெயர் மாற்றப்பட்ட ஊர்களின் பட்டியல் வாலியின் வாலைவிட ஐந்நூறு மடங்கு நீளமானது !

பல நூற்றாண்டுகளாக உறக்கத்தில் இருக்கும் தமிழன் இன்னும் விழித்து எழவில்லை. தமிழில் இருந்த தனது ஊர்ப் பெயர்களைப் பறிகொடுத்தான்; தனக்கு அடையாளம் தரும் தனது தமிழ்ப் பெயரையே பறிகொடுத்தான். தான் வணங்கும் கடவுளரின் தமிழ்ப் பெயர்களை எல்லாம் பறி கொடுத்துவிட்டான். தமிழ்ப் பண்பாட்டையே பறிகொடுத்து அறுவடைத் திருநாளை மகரசங்கராந்தி என அழைக்கத் தலைப்பட்டு விட்டான் !

இன்று தமிழன் பெயரில் தமிழ் இல்லை. மாதங்களின் பெயரில் தமிழ் இல்லை. பிறந்த நாளின் பெயரில் (நட்சத்திரம்) தமிழ் இல்லை. உண்ணும் உணவின் பெயரில் தமிழ் இல்லை. உடுக்கும் உடையின் பெயரில் தமிழ் இல்லை. கொண்டாடும் திருநாளின் பெயரில் தமிழ் இல்லை. உள்வாங்கும் மூச்சுக் காற்றின் பெயரில் தமிழ் இல்லை. இந்த அழகில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் கூக்குரலுக்கும் குறைவில்லை !

! தமிழா ! அன்று உறங்கத் தொடங்கிய நீ இன்னும் விழித்துக் கொள்ளவில்லை.  விழித்தெழுவாய் என்று நம்பிக்கை வைக்கவும் இயலவில்லை. இந்த நிலையில் தமிழனென்று சொல்லடா ! தலை நிமிந்து நில்லடா ! என்று பாடுவது தவறல்லவா ?

எனவே தான் சொல்கிறேன், ! தமிழா ! உன்னைத் தமிழனென்று சொல்லாதே ! நீ தலை நிமிர்ந்தும் நில்லாதே !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
.[தி.:2049, நளி,21.]
(07-12-2018)

------------------------------------------------------------------------------------------------------------
     
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .