name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (13) மயங்கிக் கிடக்கும் தமிழன் !

சனி, செப்டம்பர் 07, 2019

சிந்தனை செய் மனமே (13) மயங்கிக் கிடக்கும் தமிழன் !

மயங்கிக் கிடக்கும் மறத்தமிழனே ! ”தமிழன்” என்னும் அடையாளத்தை இழந்த பின்புதான் உன் மயக்கம் தெளியுமா ?



உலகத்தில் உள்ள ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உண்டு. தமிழனுக்கும் இத்தகைய தனிச் சிறப்பு இருக்கிறது. உலகத்திலேயே மிகத் தொன்மையான மொழிக்குச் சொந்தக்காரன்; இலக்கிய, இலக்கண வளங்கள் மிக்க மொழிக்குச் உரிமையாளன்; வீரத்திற்கும் கொடைக்கும், நாகரிகத்திற்கும்  எடுத்துக் காட்டாக விளங்குகின்ற இனத்தினன், என்று பல சிறப்புகள் இருந்தன !

இன்றைய தமிழன் இத்தகைய சிறப்புகளைத் தக்க வைத்துக் கொண்டு உலக அரங்கில் முன்னிலை பெறும் ஆற்றல்களைப் பெற்றிருக்கிறானா என்பதை எண்ணிப் பார்த்தால், நெஞ்சம் சோர்வடைகிறது; நினைத்துப் பார்க்கையில் உள்ளம் கனற்புற்று  நீறாகிறது !

மதிமயக்கம் தரும் புலனங்கள் நாட்டில் பல்கிப் பெருகிவிட்டன. அதிலும் தமிழ் நாட்டில் அவற்றின் எண்ணிக்கை அளவிடமுடியாதவை. சரி ! மதி மயக்கம் அப்படி என்ன தான் தீங்கு செய்கிறது ?. வேறொன்றுமில்லை, மனிதனது சிந்திக்கும் ஆற்றலை முற்றிலுமாக முடக்கிப் போட்டு, அவனை மூளையற்ற மூடனாக்கி விடுகிறது !

குறிப்பாகச் சொல்லப் போனால், தமிழன் இன்றைக்கு, ஆறு வகையான மதி மயக்கங்களுக்கு  (போதைக்கு) அடிமையாகிக் கிடக்கிறான். பகுத்தறிவைத் துறந்து பண்புகளை இழந்து விலங்கினும் கீழாக வீழ்ந்து கிடக்கிறான். அவை பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம் !

(01)    மது மயக்கம் : மதுவிலக்கு நடைமுறையில் இருந்த தமிழகத்தில், மதுக் கடைகளைத் திறந்து வரலாற்றுப் பிழையை செய்தது ஒரு ஆட்சி. இதே ஆட்சி, பின்பு இதன் தீய விளைவுகளை உணர்ந்து, மதுவிலக்கை மீண்டும் நடைமுறைப் படுத்தியது. பின்னர், அடுத்து வந்த ஆட்சி, மீண்டும் மதுவிலக்கை நீக்கியது. பட்டிதொட்டி எங்கும் மதுக்கடைகளைத் திறந்து, அதன் வருவாயிலிருந்து ஆட்சி நடத்தும் போக்கு, இன்றும் தொடர்கிறது. இரண்டு தலைமுறைத் தமிழர்கள் மதுவுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். மது அடிமைகள் தம் அறிவைத்  தொலைத்ததுடன், வாழ்க்கையையும் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் !

(02)    பதவி மயக்கம் : பதவிக்கு ஆசைப்படும் தமிழனின் எண்ணிக்கை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, மிகவும் அரிதாக இருந்தது. அரசியல் கட்சிகளின் ஆட்சி பீடப் போட்டியின் விளைவாக, கட்சி வளர்ப்புக்கு, ஒரு அரசியல் கட்சி, தன் தொண்டர்களுக்கு பல்லாயிரக் கணக்கில்  கட்சிப் பதவிகளையும், மாநில, மாவட்ட, வட்ட அளவில் நூற்றுக் கணக்கில் ஆட்சிப் பதவிகளையும்  உருவாக்கி, அவற்றில் தொண்டர்களை நியமித்து, முதன் முதலாகப் பதவி ஆசையைக் கட்சித் தொண்டர்களான தமிழர்களிடையே பற்ற வைத்தது. இந்த அரசியல் கட்சி பற்ற வைத்த தீ, எங்கும் பரவி, அனைத்துக் கட்சிகளையும் தனது நெருப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து, இன்று எல்லாக் கட்சிகளிலும் பதவிக்காக முட்டி மோதிக் கொண்டு முன் வரிசையில் இடம் பிடிப்போர் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில் நெடு நெடுவென்று வளர்ந்து நிற்கிறது. பதவி கிடைத்த பின்பு,  அதனால் கிடைக்கும் பலன்களைத் துய்க்கும் (அனுபவிக்கும்) ஆசையில், தன்மானம்  இழந்து கட்சித் தலைமையிடம் கொத்தடிமைகளாகக் கூனிக் குறுகி முதுகெலும்பு ஒடிந்து கிடக்கிறார்கள். பதவியினால் கிடைக்கும் மயக்கம், அவர்களிடமிருந்து மனிதப் பண்புகளையும் பறித்துக் கொண்டு போய்விடுகிறது !

(03)    திரையுலக மயக்கம் : திரைப்பட நடிகர்கள் தங்கள் வளர்ச்சிக்காகசுவைஞர்மன்றங்களை உருவாக்கி, அதில் பொறுப்பாளர்களை அமர்த்தி, தேங்காய்ச் சில்லுகளைப் போலச் சில நயப்புகளைத் (சலுகைகளை) தந்து, தங்கள் படம் வெளியாகும் போது திரையரங்க வாயிலில் கொடிகட்டவும், தோரணம் மாட்டவும் பயன்படுத்தலாயினர். இதில் சுவை கண்ட நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சுவைஞர் மன்றஉறுப்பினர்கள் ஆயினர். தனியார் தொலைக்காட்சிகள் வணிகப் போட்டியால் ஒவ்வொரு நாளும் பல  திரைப்படங்களை இலவயமாக ஒளிபரப்பத் தொடங்கின.  அச்சு ஊடகங்கள் திரையுலகச் செய்திகளை நிரம்பவும் வெளியிட்டன. இதன் விளைவாக இன்று தமிழக மக்களில்தமிழர்களில் 70 % எண்ணிக்கையினர் திரையுலக மயக்கத்தில் மூழ்கித் திளைக்கின்றனர். திரைப்பட நடிகர்களுக்கு அட்டையுரு (CUT-OUT) வைத்து பால்முழுக்காட்டிச் சூடம் காட்டிச் சுற்றிப் போடும் அருவருப்பான போக்குக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். இம்மயக்கம் அவர்களின் சிந்தனைத் திறனைச் செயலற்றதாக்கி விட்டது. பகுத்தறிவை இழந்த இந்தப் பாமரர்கள் திரைப் பட நடிகர்களுக்குப் பல்லக்குத் தூக்கும் ஊதியமில்லா ஊழியர்களாக இன்று உலா வருகின்றனர் !

(04)    ஆங்கில வழிக் கல்வி மயக்கம் : ஆங்கில வழிக் கல்வி மீதான  ஆசை, மது குடித்த குரங்கு போல இன்று மக்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. கல்வி வணிகர்களின் கவர்ச்சி மிக்க விளம்பரங்களில் மனதைப் பறி கொடுக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளை பதின்மப் பள்ளிகளில் (MATRICULATION SCHOOLS) சேர்த்து தமது  சொத்துகளை  எல்லாம் இழந்து கொண்டிருக்கின்றனர். ”அம்மா”, “அப்பாஎன்னும் விளிச்சொற்களில்  மனம் களிக்காத தமிழன்டேடி”, “மம்மிஎன்னும் விளிப்புகளைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்து மயங்கிப் போகிறான். ஆங்கில வழிக் கல்வி தனது குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கப் போகிறது என்று பகலிலேயே கனவு காணும் தமிழன், தன் தாய்மொழி தமிழ் என்பதைத் துப்புரவாக மறந்து ஆங்கில வழிக் கல்விக்கு அடிமையாகிப் போய்விட்டான். ஆங்கில வழிக் கல்வி மீதான இந்த மயக்கம் அவனது பகுத்தறிவுத் திறனைப் பழுதுபடுத்தி  விட்டது !

(05)    இறைமயக்கம் : இறை மயக்கம் என்பது அச்சத்தின் அடிப்படையில் ஏற்படுவது. ஒவ்வொரு மனிதனும் தனது நலன் மற்றும் தன் குடும்பத்தார் நலன் பற்றிய அக்கறையுடனேயே வாழ்கிறான். இது இயல்பான ஒன்றே ! இந்த அச்ச உணர்வைப் பயன்படுத்தி, தன்னலச் சார்புடைய ஒரு வகுப்பினர், ”ஒன்றே குலம், ஒருவனே தேவன்என்னும் திருமூலர் கோட்பாட்டுக்கு மாறாகப் பல கடவுள்களை உருவாக்கி, அதை நிறுவுவதற்கு வாய்ப்பாகப் பல புராணக் கதைகளை உருவாக்கி மக்களிடையே பல நூற்றாண்டுகளாகப் பரப்பி வந்திருக்கின்றனர்; இன்னும் பரப்பியும் வருகின்றனர். இறைவனை நம்பினால் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்றும், நம்பாதோர் நிரயத்தில் (நரகத்தில்) தண்டிக்கப் படுவர் என்றும் கதை சொல்லி மக்களை நம்ப வைத்துவிட்டனர். இறை நம்பிக்கை என்பது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு, இன்று மூட நம்பிக்கையாக உரு மாறிவிட்டது. நேர்த்திக் கடன் என்ற பெயரில் மனிதன் தன்னைத் தானே வருத்திக் கொள்ளுதல், வரம்பு கடந்து போய்க்கொண்டிருக்கிறது. அச்சத்தின் வயப்பட்ட இந்த ஆன்மிகம் தமிழர்களைச் சிந்திக்க விடாமல் செய்து விடுகிறது. கோயில் கருவறைக்குள் செல்ல முடியவில்லை; தமிழில் வழிபட முடியவில்லை;  நமக்குப் புரியும் மொழியில் நமது கோரிக்கைகளை அந்தப் பூசாரி இறைவனிடம் சொல்வதும் இல்லை. ஒரு சில பூசாரிகள்  கருவறைக்கு உள்ளே ! – ஓராயிரம் பக்தர்கள்  வாயிற்படிக்கு வெளியே ! இறைவன் திருமுன்பே தீண்டாமை ! இந்த உண்மைகள் புரிந்தாலும், அச்சத்தின் குரங்குப் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும்  தமிழன் இறையுணர்விலிருந்து விடுபட முடிவதில்லை. இத்தகைய இறை மயக்கதிலிருந்து தமிழன் விடுபடுகின்ற காலமும் இன்னும் வரவில்லை !

(06)   அரசியல் மயக்கம் : தமிழ்நாட்டில், மக்கள் 24 மணி நேரமும் அரசியல்  மயக்கத்திற்கு ஆட்பட்டுப்  பகல் கனவுகளுக்குப் பலியாகி வருகின்றனர். அத்துணை அரசியல் கட்சிகளும் ஆளுக்குக் கொஞ்சமாகக் கூறு போட்டுத் தேர்தல் களத்தில் தமிழர்களை விற்பனைப் பொருளாக்கி விலை பேசி வருகின்றனர். ஒவ்வொரு தமிழனும் ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்குச் சார்பு உடையவாக மாறிப் போய்விட்டான். அந்த கட்சியின்பால் அவன் கொண்டிருக்கும் மயக்கத்திலிருந்து அவனால் விடுபட முடிவதில்லை. தமிழர்களிடையே ஒற்றுமை உடைந்து போனமைக்கு இந்த அரசியல் சார்பு மயக்கமே முதன்மைக் காரணம்.

மடல் விளையாட்டு (CRICKET) மயக்கம், தொலைக் காட்சித் தொடர் மயக்கம், போன்ற வேறு சில மயக்கங்கள் தமிழனை அடிமைப் படுத்தி வந்தாலும்,  அவற்றின் தாக்கம் ஓரளவு மட்டுப் பட்டதே என்பதால், அவை பட்டியலிடப் படவில்லை !

பட்டியலிடப்பட்ட அறுவகை மயக்கங்களிலிருந்தும்  தமிழன் விடுபட்டு விட்டால், வீழ்ந்து கிடக்கும் தமிழன் தனது  அறிவுக் கண்களைத் திறந்து எழுந்து விட்டால், மதுக் கடைகள் இழுத்து மூடப்பட்டு விடும்; பதவி நாற்காலிகள் மதிப்பிழந்து பரண்களுக்கு இடம் பெயரும்.; திரைப் படங்கள் தடை செய்யப்படும்; தமிழ் வழிக் கல்வி தமிழகத்தில் மீட்சி பெறும்; பதின்மப் பள்ளிகள்  தமிழ்ப் பள்ளிகளாக மாற்றப்படும்; ; கோயில்களில் வடமொழிப் பூசாரிகள் காணாமற் போவர்; தமிழில் மட்டுமே வழிபாடு நடக்கும்; அரசியல் கட்சிகள் பல கலைக்கப்படும் !

இத்தகைய நற்பேறுகள் வாய்க்கும் நாள் எந்நாளோ என்று ஏங்கித் தவிக்கிறது தமிழுணர்வாளர்களின் உள்ளம் !  ஆனால் அதற்கான விடிவெள்ளி இன்னும் முளைக்கவில்லையே ! இந்த அறுவகை மயக்கங்களிலிருந்தும் தமிழன் விழிப்பதாகவும் தெரியவில்லையே !

ஏ ! தமிழா ! தன்னிலை மறந்து. தாழ்நிலை உற்று உழலும் தமிழா ! இனி நீ உன்னைத் தமிழனென்று சொல்லாதே ! வீணே  தலை நிமிர்ந்தும் நில்லாதே !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை :
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, மீனம்,06]
{20-03-2019} 

-------------------------------------------------------------------------------------------------------
       
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற்குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .