திணை ஒன்றுக்கு 14 வீதம் ஐந்து திணைகளுக்கும் மொத்தம் எழுபது பாடல்கள் கொண்டது இந்நூல் !
ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு.
எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்து இருப்பதால், இதற்கு ஐந்திணை எழுபது எனப் பெயர் வழங்கலாயிற்று. குறிஞ்சி, முல்லை, பாலை,
மருதம், நெய்தல் என்னும் வரிசையில் பாடல் திணைகள்
அமைந்துள்ளன !
இந்நூலை இயற்றியவர் மூவாதியார் ! இவரைச் சிலர் சமண மதம் சார்ந்தவர் என்று கூறுவர். ஆனால்,
அதற்குத் தக்க சான்றுகள் ஏதுமில்லை. இவரைப் பற்றிய
வேறு செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை !
செய்யுள் அடிகள் மற்றும்
அவற்றில் வரும் சொற்களின் ஒற்றுமையாலும், வேறு சில குறிப்புகளாலும்,
இவர் ஐந்திணை ஐம்பதை அடியொற்றிப் பாடல்களை அமைத்து இருக்கிறாரோ என்று சிலருக்கு ஐயம் தோன்றக் கூடும்
!
இந்நூலில் உள்ள எழுபது
பாடல்களில் முல்லைத் திணையில் வரும் 25, 26 -ஆவது பாடல்கள்
முற்றிலும் சிதைந்து விட்டன. அதுபோன்றே நெய்தல் திணையில் வரும்
69, 70 -ஆவது பாடல்களும் கிடைக்கப் பெறவில்லை !
இந்நூல், செம்பாகமான தெள்ளிய நடையை மேற்கொண்டுள்ளது. அக்காலப்
பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் முதலியனவும் இந்நூலால் புலனாகின்றன
!
இந்நூலில், குறிஞ்சித் திணையில் ஒரு பாடல்; தலைவனைப் பற்றித் தலைவி
தோழியிடம் எடுத்துரைக்கிறாள். “என் அருமைத் தோழியே ! நான் ஒன்று சொல்கிறேன் ! கேள் ! நற்பண்புகள் நிறைந்த சான்றோர்களின் நட்பினை அடைதல் நமக்குக் கிடைக்கும் பெரும்பேறு ஆகும்
! அந்த நட்பானது நமக்குச் சிறந்த துணையாகி, மிகுந்த
வலிமையையும் தரும் ! அது மட்டுமன்றி, அளவுகடந்த
நன்மைகளையும் நமக்குத் தரும் !
அதுபோல, நீர் வளமும் நிலவளமும் நிறைந்து, எங்கெங்கு காணினும்
பூஞ்சோலைகளாகத் திகழும் மலை நாட்டுக்குரிய என் தலைவனின் நட்பானது எவ்வித குறைபாடுகளுக்கும்
இடமின்றி மிகுந்த இன்பத்தை மட்டுமே
தருவதாக அமையும் என்று என் நெஞ்சம் சொல்கிறதடி என் இனிய தோழி !”
என்று தலைவன் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப் படுத்துகிறாள்
!
-------------------------------------------------------------------------------------------------------
இதோ அந்தப் பாடல் !
--------------------------------------------------------------------------------------------
சான்றவர் கேண்மை சிதைவின்றாய் ஊன்றி,
வலியாகி பின்னும் பயக்கும்; மெலிவுஇல்,
கயம்திகழ் சோலை மலைநாடன் கேண்மை
நயம்திகழும் என்னும், என்னெஞ்சு !
---------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
---------------------------------------------------------------------------------------------
சான்றவர் = சான்றோர்கள்; கேண்மை = நட்பு;
சிதைவின்றாய் = சிதைவு படாமல்; ஊன்றி = நிலைத்து நின்று; வலியாகி
= வலிமை பெற்று; பின்னும் பயக்கும் = அதன் பின்னும் நன்மைகளைத் தரும்; மெலிவு இல்
= வற்றாத; கயம் = நீர்நிலைகள்
(குளங்கள்); திகழ் = நிறைந்து
காணப்படும்; சோலை = பூஞ்சோலைகள்;
மலைநாடன் = இந்த மலை நாட்டின் தலைவன்; கேண்மை = நட்பாகிய பழக்கம்; நயம்
திகழும் = இன்பங்களைத் தருவதாக; திகழும்
= விளங்கும்; என்னும் = என்று
எனக்குச் சொல்கிறது; என் நெஞ்சு = எனது
நெஞ்சம்.
---------------------------------------------------------------------------------------------------------
இயற்கை வளத்தைப் படம் பிடித்துக் காட்டும் இத்தகைய பாடல்கள் அடங்கிய ஐந்திணை
எழுபது படிக்கும் தோறும் இன்பம் பயப்பதாகும் !
--------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,கன்னி(புரட்டாசி),10]
{27-09-2019}
--------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .