name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கீழ்க்கணக்கு (07) ஐந்திணை ஐம்பது

புதன், அக்டோபர் 02, 2019

கீழ்க்கணக்கு (07) ஐந்திணை ஐம்பது

திணையொன்றுக்கு பத்து வீதம் ஐம்பது பாடல்களைக் கொண்ட  நூல் !


இது முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற வரிசையில் பப்பத்துப் பாடல்களைப் பெற்றுள்ள நூலாதனின், இதனை ஐந்திணை ஐம்பது என்று குறிப்பிடுகின்றனர்.  கி.பி. 6 – ஆம் நூற்றாண்டில் இந்நூல் தோன்றியிருக்கலாம் என்பது பல அறிஞர்களின் கருத்து !

இந்நூற் பாடல்கள் சிறந்த நடை உடையனவாயும், கருத்து வளம் செறிந்தனவாயும் உள்ளன.  இந்நூலுக்கு உரிய பாயிரம், “ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார், செந்தமிழ் சேராதவர்”, என்று கூறுகின்றது. எனவே செந்தமிழ்ப் புலமைக்கு இந்நூற் பயிற்சி மிகவும் அகத்தியம் என்பது தெளிவு !

இதன் ஆசிரியர் மாறன் பொறையனார். இப் பெயரில் மாறன் என்பது பாண்டியனைக் குறிப்பதாயும், பொறையன் என்பது சேரனைக் குறிப்பதாயும் உள்ளன. எனவே, இவர் இந்த இரு பேரரசரோடும் தொடர்புடையராய், இவர்களுக்கு நட்பினராய் இருத்தல் கூடும் !

இந்நூலின் முதற் செய்யுளில் உவமையாக மாயோன், முருகன், சிவன் மூவரையும் குறித்துள்ளார். இதனால் இவரை வைதிக சமயத்தவர் என்று கருதற்கு இடமுண்டு !

திருக்குறள் முதலிய கீழ்க் கணக்கு நூல்களிற் பயின்றுள்ள சொற் பொருள் மரபுகள் சில இந் நூலகத்தும் உள்ளன. “கொற்சேரி நுண் துளைத் துன்னூசி விற்பாரின்...” என்னும் 21 –ஆவது பாடலின் கருத்து  கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல்என்னும் பழமொழி நானூற்றில் வரும் 50 – ஆவது பாடல் கருத்தையும் வரிகளையும் ஒத்து இருக்கின்றன !

-------------------------------------------------------------------------------------------------------

இந்நூலில் நெய்தல் திணையில் வரும் பாடற் காட்சி ஒன்றைப் பாருங்கள் ! நெய்தல் திணை என்பது இரங்கல் உணர்வை உரிப் பொருளாகக் கொண்டதன்றோ ? இரங்கல் உணர்வை அழகாக வெளிப்படுத்தும் பாடலைப் பாருங்கள் !

--------------------------------------------------------------------------------------------------------

தலைவியைப் பிரிந்து, தலைவன் தன் நாட்டிற்குச் சென்றுவிட்டான். விரைவில் திரும்பி வருகிறேன் என்று கூறிச் சென்றவன் இன்னும் வரவில்லை. தலைவனின் நினைவால், தலைவி வாடுகிறாள்; உணர்ச்சிப் பிழம்பாகத் திகழ்கிறாள் ! 

தன் தலைவன் ஏறிச் சென்ற தேரின் காலடித் தடத்தை (தேர்க் காலடித் தடம் = தேர்ச் சக்கரம் பதித்துச் சென்ற தடம்) கண்டேனும் ஆறுதல் பெற விரும்புகிறாள். எனவே, தேர் சென்ற வழித்தடத்தில்  அங்குமிங்கும் ஊர்ந்து  திரிகின்ற நண்டினைப் பார்த்து, “ ! நண்டே ! வளைந்த கால்களை  உடைய நண்டே ! என்றும் ஆரவாரம் அடங்காத, அலைகளை  உடைய  கடற்கரை ஓரம் அமைந்துள்ளது எம் காதலனின் நாடு ! விரைவில் திரும்பி வருகிறேன் என்று கூறிச் சென்றவன் இன்னும் வந்து சேரவில்லை !

அவன் நினைவால் என் உள்ளம் வாடுகிறது ! என் அழகிய உடல் பசலை பூத்துப் பொலிவிழந்து விட்டது !  அவன் ஏறிச் சென்ற தேரின் காலடித் தடங்களைக் கண்ணாரக் கண்டாலாவது எனக்கு ஆறுதலாக இருக்கும் ! எனவே உன்னை யான் ஒன்று வேண்டுகிறேன் ! அவன் ஏறிச் சென்ற தேரின் காலடித் தடங்களை அழித்து விடாதே ! தேர்க்கால் தடம் பதிந்த மணல் வெளியில்  அங்குமிங்கும் நீ நடந்து, அத் தடங்களை அழித்து விடாதே !” என்று வேண்டுகிறாள். என்னே புலவரின் கற்பனைத் திறம் !

---------------------------------------------------------------------------------------------------------

இதோ அந்தப் பாடல் !
------------------------------------------------------------------------------------------

கொடுந்தாள்  அலவ !  குறையாம்  இரப்போம் !
ஒடுங்கா  ஒலிகடற்  சேர்ப்பன்  நெடுந்தேர்
கடந்த  வழியைஎம்  கண்ணாரக்  காண,
நடந்து சிதையாதி, நீ !

-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்:
--------------------------------------------------------------------------------------------------------

கொடுந்தாள் = வளைந்த கால்; அலவன் = நண்டு; குறை = எம் மனக் குறையை;  இரப்போம் = உன்னிடம் சொல்லி வேண்டிக் கேட்கிறேன்; ஒடுங்கா ஒலி கடல் = எப்பொழுதும் ஆரவாரம் அடங்காத அலைகளை உடைய கடல்;  சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவனாகிய எம் காதலன்; சிதையாதி = சிதைத்து அழித்துவிடாதே !

---------------------------------------------------------------------------------------------------------

இது போன்ற பாடல்களைக் கொண்ட இந்நூல், மாந்த இனத்தின் அக உணர்வுகளை அழகுபடச்  சித்திரிக்கிறது !

--------------------------------------------------------------------------------------------------------

அடுத்து ஒரு பாடல் ! பாலைத் திணையைப் பின்னணியாகக் கொண்ட பாடல் ! வாழ்ந்த சூழலின் வசதிகளையும், பசுமையான நினைவுகளையும் விடுத்துக் காதலனுடன் வறண்ட பாலை நிலப் பகுதி ஊடாகச் செல்கிறாள் தலைவி ! பாலை நிலத்திற்கே இயல்பான கடுமை வாட்டும்; எனினும் காதல் வயப்பட்ட உள்ளங்களுக்கே இயல்பான விட்டுக் கொடுப்புகள், அவர்களை மேலும் நெருக்கமாக்கும். இக்கருத்தை விளக்கும் அழகிய பாடலைப் பாருங்கள் !

------------------------------------------------------------------------------------------------

சுனைவாய்ச்  சிறுநீரை,  எய்தாது  என்றெண்ணி,
பிணைமான்  இனிதுண்ண  வேண்டி  கலைமாதன்
கள்ளத்தின்  ஊச்சும்   சுரம்என்பர்,  காதலர்
உள்ளம்  படர்ந்த  நெறி !

-----------------------------------------------------------------------------------------------

ஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்தில் அரிதாகக் காணப்படும் நீர்ச் சுனை ஒன்றில் நீர் அருந்தச் செல்கின்றன ! ஆனால் அதில் இருக்கும் நீரோ மிகக்குறைவு ! இரண்டு மான்களுக்கும் பொதுமானதாக இல்லை ! தான் அருந்தாவிட்டால், பெண் மானும் அருந்தாது என்று ஆண் மானுக்குத் தெரியும் ! எனவே பெண்மான்  அருந்தட்டும் எனத் தான் அருந்துவது போல பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான் !  இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர் !

----------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்:
--------------------------------------------------------------

சுனை வாய் = சுனையில் உள்ள; சிறு நீரை = மிகக் குறைவாக இருக்கும் நீரை; எய்தாது = பெண்மான் அருந்தாது; என்றெண்னி = என்று கருதி; பிணைமான் = பெண்மான்; இனிதுண்ண வேண்டி = அருந்தட்டும் என்று விரும்பி; கலைமா தன் = ஆண்மான் தன்னுடைய; கள்ளத்தின் = பாசாங்கு செய்தல்; ஊச்சும் = உறிஞ்சுதல்; சுரம் = பாலைநிலம்; நெறி = ஒழுக்கம்

---------------------------------------------------------------------------------------------------------

இத்தகைய கருத்துச் செழுமை வாய்ந்த பாடல்களை படித்து, உள்வாங்கி ஒழுகுகின்ற மக்கள் நற்பேறு பெற்றவர்கள் என்றால் அது மிகையில்லை !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2050,கன்னி(புரட்டாசி),06)
{23-09-2019}
---------------------------------------------------------------------------------------------------------
       ”தமிழ்ப் பணிமன்றம் முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

2 கருத்துகள்:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .