பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே !
இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள 'நாற்பது' எனமுடியும் பெயர்கொண்ட நான்கு
நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்
சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன் ஆவார் !
இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர்
சிவன், திருமால், பிரமன்
முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சமய
நோக்குடையவராக இருந்திருக்க
வேண்டும். இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப்
பிந்தியவர் என்பதோடு, இன்னா
நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அந்நூலாசிரியருக்கும்
பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது !
இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40
செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், 'ஊரும்
கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும்
இன்னிசை வெண் பாவினால் ஆக்கப் பட்டுள்ளது !
இந்நூலில் நான்கு இனிய பொருள்களை
எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை நோக்கத் தக்கது !
வாழ்க்கையில் நன்மை தரும்
கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை
நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது
நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய
நாற்பது' என்றும் உரைப்பர் !
----------------------------------------------------------------------------------------------------
பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே;
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும்
முன் இனிதே;
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.
----------------------------------------------------------------------------------------------------
இனியவை நாற்பதில் இது முதலாவதாக வரும்
பாடல். இப்பாடலின் பொருள்:- பிச்சையெடுத்துப் பொருள் சேர்த்தாவது கல்வி கற்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் நன்மை பயக்கும் (இனிது). அப்படிக் கற்ற கல்வி, அவனது அறிவை மேம்படுத்தி அறிஞர்கள் நிறைந்த அவையில் அவனுக்கு நன்மதிப்பை ஈட்டித் தர உதவினால், அது மிகவும் இனிய பொழுதாக அமையும். முத்துப் போன்ற மாசு மறுவற்ற அழகிய பல்வரிசை அமைந்த மகளிரது பொருள் பொதிந்த, இனிமை தவழும் வாய்ச்சொல்
மிக இனிது. அதுபோல, கற்றறிந்த பெரியோர்களின் கைத்தலம் பற்றி அவர்களை வாழ்வில் முன்னோடியாகக் கொண்டு, அவர்களின் துணையுடன் ஒழுகுதல் இனிதினும் இனிது !
வேறொரு பாடலில் பூதஞ்சேந்தனார்
சொல்கிறார்:- நிறைந்த செல்வம் உடைய மனிதன்,
அருள்மனம் கொண்டு இல்லாதார்க்கு இயன்ற அளவுக்கு ஈந்து, அவரைக் கைதூக்கி விடுதல் இனிய செயலாகும். இல்லற
வாழ்வில் இணைந்திருக்கும் தலைவனின் உள்ளமும், தலைவியின்
உள்ளமும் ஒரே நேர்கோட்டில் அமைந்து, அவர்களது சிந்தனையும்
செயலும் ஒரே வழியில் இணைந்து நடைபயிலுமானால், அவர்தம் வாழ்க்கை
மிக இனியதாக அமையும். இந்தப் பரந்த உலக வாழ்வில் எதுவும்
நிலையானதல்ல என்பதை உணர்ந்து, ஆசைகளைத் துறந்து, அறம் செய்து நேரிய வழியில் வாழ்தல் இனிமை நிறைந்த வாழ்வாக அமையும்.
இதோ அந்தப் பாடல்:-
------------------------------------------------------------------------------------------
உடையான் வழக்கு இனிது; ஒப்ப முடிந்தால்,
மனை வாழ்க்கை முன் இனிது; மாணாதாம் ஆயின்,
நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல்
தலையாகத் தான் இனிது நன்கு.
-------------------------------------------------------------------------------------------
இல்லற வாழ்வானாலும் சரி, துறவற வாழ்வானாலும் சரி, அஃது இனிமை
நிறைந்த வாழ்வாக அமையவே அனைவரும் விரும்புவோம் ! இதற்கு
வழிகாட்டுகிறது இனியவை நாற்பது ! படிப்போம் ! பயனடைவோம் !!
-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,ஆடவை23]
{08-07-2019}
--------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப்பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .