பொதுமறை என உலகே போற்றும் புகழுக்குரிய நூல் திருக்குறள் !
தமிழ்
இலக்கிய உலகில் தனிப் பெருஞ் சிறப்புடன் விளங்குவது திருக்குறள். இதனை இளைஞர்
முதல் முதியோர் ஈறாக, அனைவரும் சாதி, மதம்
,பால், வேறுபாடு இன்றிப் போற்றிக் கற்று வருகின்றனர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பாடல்
அளவினாலும், பொருளின் நுட்பத்தாலும் இந்நூல் தலை சிறந்து விளங்குகிறது
!
இதனைக் “குறள்”
என்றும் “திரு” என்னும் அடைமொழி
சேர்த்து, “திருக்குறள்’ என்றும் இப்போது
வழங்கி வருகின்றனர். “முப்பால்” என்று குறிப்பிடும் வழக்குப் பல தனிப்பாடல்களில்
மிகுதியாய்க் காணப்படுகிறது. இஃதன்றி, பொய்யாமொழி,
வாயுறை வாழ்த்து, தெய்வநூல், பொதுமறை, தமிழ்மறை என்று வேறு பல பெயர்களும் இந்நூலுக்கு
உள்ளன !
இந்நூலை
இயற்றியவர் திருவள்ளுவர்.
இவரைச் செந்நாப்புலவர், செந்நாப் போதார்,
பெருநாவலர், முதற்பாவலர், நான்முகனார் என்ற பெயர்களாலும் சில நூல்கள் விளிக்கின்றன !
இவர்
வாழ்ந்த காலம் பற்றி மாறுபட்டக் கருத்துகள் நிலவி வந்தன. கி.பி முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையில் பல காலங்களைப் பலரும் கூறி வந்தனர். திருவள்ளுவர் கி.மு. 31 –ல் பிறந்தவர்
என்று பல சான்றுகளைக் காட்டி மறைமலை அடிகள் நிறுவியுள்ளார் !
திருக்குறளில் 133 அதிகாரங்களும்,
ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பப்பத்து வீதம் மொத்தம் 1330 குறட்பாக்களும் உள்ளன. அறம், பொருள்,
இன்பம் என்று மூன்று பெரும் பிரிவுகளாக இந்நூல் பகுக்கப்பட்டுள்ளது
!
தமிழும்
திருகுறளும் ஒன்றிணைந்தவை.
தமிழை மறந்துவிட்டுத் திருக்குறளைப் படிக்க முடியாது; திருக்குறளைப் புறந்தள்ளி விட்டுத் தமிழைப் பயில முடியாது ! அதனால்தானோ என்னவோ திருக்குறள் “அ” என்று தொடங்கி (“அ”கர முதல எழுத்தெல்லாம்),
“ன்” என்று (கூடி முயங்கப்பெறி”ன்”) முடிகிறது !
ஒன்றேமுக்கால்
அடியில் ஏழு சீர்களினால் இயன்ற திருக்குறள் வெண்பா என்னும் பா வகையைச் சார்ந்தது. அடிகளின் சிற்றெல்லை கருதி,
இவ் வெண்பாக்களைக் “குறள் வெண்பா” என்று அழைக்கிறோம் !
வள்ளுவர்
தொடாத தளங்கள் இல்லை;
சொல்லாத கருத்துகள் இல்லை ! நயத்தக்க நாகரிகம்
என்பதற்கு விளக்கம் சொல்லும் வள்ளுவர், மற்றவர்களிடமிருந்து மாறுபடுகிறார் !
கிரேக்க
நாட்டு அறிஞன் சாக்ரட்டீசு,
அரசனது தீர்ப்பு காரணமாக
நஞ்சுண்டு சாகையில், அங்கு கூடியிருந்த
மக்களைப் பார்த்து எழுச்சியுரை ஆற்றுகிறார். அவரது உரையின் தாக்கத்தினால்
மக்கள் மனம் துன்பப்படுகிறது; கண்கள் நீரைப் பொழிகின்றன.
இளைஞர்கள் அழுது அரற்றுகின்றனர் !
வள்ளுவர்
சொல்கிறார்;
நயத்தக்க நாகரிகம் என்பது நஞ்சுண்டு அமைதியாக உயிரை விடுவதாகத்தான் இருக்க வேண்டும். கூடியிருக்கும் மக்கள் மனம் நொந்து கண்ணீர் வடிப்பதாக இருத்தலாகாது
! எந்தக் காரணத்திற்காகவும், அடுத்தவர் மனம் துன்பப்படச் செய்தல் நயத்தக்க நாகரிகமாக இருக்காது
என்கிறார். இதோ அந்தக் குறள் !
--------------------------------------------------------------------------------------
பெயக்கண்டும்
நஞ்சுண்டு அமைவர் நயத்ததக்க
நாகரிகம்
வேண்டு பவர்.
(குறள்:580)
---------------------------------------------------------------------------------------
எத்துணை
ஆழமாகச் சிந்தித்து இந்தக் குறளை வடித்துள்ளார் பொய்யாமொழிப் புலவர் ! என்னே
அவரது நுண்மாண் நுழைபுலத்தின் திறம் !
திருக்குறளின்
சிறப்புகள் ஏராளம்
! ஏராளம் !!. அவற்றைப் படித்து வாழ்க்கையில் கடைப்பிடித்தல்
நமது கடமை !
அருமையான
கலைச் சொற்கள் பல திருக்குறளில் பரவலாக விரவிக் கிடக்கின்றன ! அவற்றுள்
ஒரு சில மட்டும் உங்கள் பார்வைக்காக !
---------------------------------------------------------------------------------------------------------
மறவி (மறதி) (குறள்.
605)........................= AMNESIA
வெகுளி (கோபம்) (குறள்.029)................=
ANGER
விழுப்பம் (நன்மை) (குறள்.131).............=
BENEFIT
குறியெதிர்ப்பை (குறள்.221)..................=
BORROWED THINGS
எழிலி (மேகம்) குறள்.017)........................=
CLOUD
வைகலும் (குறள். 083)..............................=
DAILY
மோத்தல் (குறள்.090)................................=
DISCERN BY SMELL
விழுமம் (துன்பம்) (குறள்.107).................=
DISTRESS
கடப்பாடு குறள்.211).................................= DUTY
தக்கார் (தகுதி உள்ளவர்)(குறள்.114).....=
FIT PERSON
துப்பு (உணவு) (குறள்.012)........................=
FOOD
துயில் (குறள். 605).................................= INORDINATE SLEEP
நெடுநீர்மை (காலம்தாழ்த்தல்)(605).=
PROCRASTINATION
ஆர்வலர் (ரசிகர்) (குறள்.71)....................=
LOVER
என்பியல் (எலும்பு இயல்) (.072)...............= ORTHOPAEDY
மிச்சில் (மிச்சமுள்ளது) (085)................... = REMAINDER
இடையீடு......................................................=
SANDWICH
ஏமாப்பு (பாதுகாப்பு) (குறள்.126)...........
= SECURITY
இடும்பை (துன்பம்) (குறள்.4,138).......... = SUFFERING
உறுகண் (துன்பம்) (குறள்.261).............. =
SUFFERING
தகவிலர் (தகுதி இல்லாதவர்)(114).........=
UNFIT PERSON
மடிமை (சோம்பல்) (குறள்.
608)..............= LAZINESS
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2050,மடங்கல்(ஆவணி),29]
{15-09-2019)
---------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .