name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கீழ்க்கணக்கு (13) ஆசாரக்கோவை !

புதன், அக்டோபர் 02, 2019

கீழ்க்கணக்கு (13) ஆசாரக்கோவை !

வைகறைத் துயில் எழுதல், காலைக் கடன், நீராடல், உண்ணல், உடுத்தல், உறங்கல் போன்ற பல  ஒழுக்கங்கள் வலியுறுத்தப் படுகின்றன ! 


ஆசாரக் கோவை என்னும் தொடருக்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருள். ‘ஆசாரங்களினது கோவைஎன்றோ, ‘ஆசாரங்களைத் தொகுத்த கோவைஎன்றோ இத்தொடருக்குப் பொருள் கூறலாம். இப் பெயர் நூலுள் பொதிந்துள்ள பொருள் பற்றி அமைந்தது !

கி.பி. 7 – ஆம் நூற்றாண்டு வாக்கில்  இந்நூல் தோன்றியதாக அறிஞர்கள் பலர் கருதுகின்றனர்.  தமிழ்நாட்டில் வடமொழி மேலாண்மை மிகுந்திருந்த காலகட்டத்தில், எழுந்த நூலாகையால், இந்நூற் பெயரிலும், வடமொழிச் சொல்; பாடல்களிலும் வடமொழிச் சொற்கள்  ! 

பொது வகையான ஒழுக்கங்களைத் தொகுத்தது தவிர, நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டிய கடமைகள் அல்லது நித்திய ஒழுக்கங்களையும் மிகுதியாக ஆசிரியர் தந்துள்ளார். அகத் தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும் புறத் தூய்மையை வற்புறுத்திக் கூறும் பகுதிகள் பலவுள்ளன !

வைகறைத் துயில் எழுதல், காலைக் கடன் கழித்தல், நீராடல், உடுத்தல், உண்ணல், உறங்குதல் முதலிய பல நிகழ்ச்சிகளிலும் ஒழுகும் நெறிகள் வற்புறுத்தப் படுகின்றன. மேற்கொள்ளத் தக்கன இவை, விலக்கத் தக்கன இவை, எனச் சில ஒழுக்கங்களை விதித்தும், சிலவற்றை விலக்கியும் செல்லும் முறை கருத்திற் கொள்ளத் தக்கது !

இந்நூல் வடமொழி சுமிருதிக் கருத்துகளைப் பின்பற்றி எழுந்தது என்பது பல அறிஞர்களின் கருத்து. வடமொழி சுமிருதிகளின் அடிப்படையில் தொகுக்கப் பெற்றுள்ள இந்நூலிற் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்களில் சில இக்காலத்திற்கு ஒவ்வாது இருக்கலாம். சிலவற்றை இன்றைய சூழ்நிலையில் பின்பற்ற முடியாமலும்  இருக்கலாம். ஆயினும் இவை எல்லாம் முன்னோர் கண்ட ஒழுக்க நெறிகளே !

இந்நூலை இயற்றியவர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்  என்பதாகும். இந்நூலுள் சிறப்புப் பாயிரம் நீங்கலாக நூறு செய்யுள்கள் உள்ளன.  வெண்பாவின் வகையாகிய குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலை வெண்பா என்பனவெல்லாம் இதில் உள்ளன !

எப்பொழுதெல்லாம் நீராட வேண்டும் என்பது பற்றி ஆசிரியர் கூறும் கருத்து வருமாறு :- (01) இறை வணக்கம் செய்வதற்கு முன்பு (02) தீய கனவு கண்டு விழிப்பு அடைந்த பின்பு (03) ஏதாவதொரு காரணத்தால் உடலில் தூய்மையின்மை ஏற்பட்ட பின்பு (04) உண்டதைக் கக்கிவிட்டால், அதன் பின்பு (05) முடி திருத்தம் செய்து கொண்ட பின்பு (06) உணவு உண்பதற்கு முன்பு (07) எப்பொழுது உறங்கினாலும், உறங்கி எழுந்த பின்பு (08) உடலுறவு கொண்ட பின்பு (09) தூய்மைக் குறைவானவர்களைத் தொட நேர்ந்த பின்பு (10) மலங் கழித்த பின்பு ! இப்பத்து நேர்வுகளிலும் தவறாது நீராட (குளிக்க) வேண்டும் ! இதோ அப்பாடலைப் பாருங்கள் !

-----------------------------------------------------------------------------------------

தேவர்  வழிபாடு,  தீக்கனா, வாலாமை,
உண்டது  கான்றல், மயிர்களைதல்,  ஊண்பொழுது,
வைகுதுயிலோடு, இணைவிழைச்சு, கீழ்மக்கள்
மெய்யுறல், ஏனை  மயலுறல், - ஈரைந்தும்
ஐயுறாது ஆடுக நீர் !

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

வாலாமை = அழுக்கு, தீட்டு, தூய்மையின்மை; கான்றல் = கக்குதல் (வாந்தி எடுத்தல்); ஊண் = உணவு; வைகு துயில் = துயிலெழுதல்; இணைவிழைச்சு = உடலுறவு; ஏனை மயல் உறல் = மலம், நீர் கழித்தல்; ஈரைந்து = இப் பத்தும்; ஐயுறாது = ஐயத்திற்கு இடம் கொடுக்காமல்; ஆடுக நீர் = நீராடுக !

---------------------------------------------------------------------------------------------------------

இன்னொரு பாடலில் பெருவாயின் முள்ளியார் சொல்வதைக் கேளுங்கள் !
---------------------------------------------------------------------------------------------------------

இருகையால் தண்ணீர் பருகார்; ஒருகையால்,
கொள்ளார், கொடாஅர், குரவர்க்கு; இருகை
சொறியார், உடம்பு மடுத்து !

----------------------------------------------------------------------------------------------------------

இரு கைகளாலும் அள்ளித் தண்ணீரைப் பருகலாகாது ! (ஏனெனில் இடக்கையால் உண்ணும் பொருளைத் தொடலாகாது ! ) பிறரிடமிருந்து ஏதாவதொன்றை நாம் பெறுகையில் அதை ஒரு கையால் வாங்கலாகாது ! நம்மைவிட உயர் நிலையில் உள்ள அரசர், ஆசிரியர், தந்தை, மூத்தோர், வழிபடத்தக்க பெரியோர் ஆகியோருக்கு நாம் எதைத் தந்தாலும் அதை ஒரு கையால் தரலாகாது ! உணவு உண்கையில் (உடலில் அரிப்பு ஏற்பட்டால்) இரு கைகளாலும் சொறிந்து கொள்ளலாகாது !

---------------------------------------------------------------------------------------------------------

இவ்வாறு பல நித்திய ஒழுக்கங்கள் இந்நூலில் சொல்லப்படுகின்றன ! படித்தறிந்து பயனுள்ள கருத்துகளைப் பின்பற்றி நலமெய்துக !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கன்னி(புரட்டாசி),03]
(20-09-2019}
---------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .