குடிநீருக்கு அல்லாடும் மக்கள் வாயார வாழ்த்துவார்கள் !
இந்தியத்
திருநாட்டில் எதற்குப் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ, கோடிச்
செல்வர்களுக்குப் (கோடீசுவரர்களுக்கு) பஞ்சமே
இல்லை. தமிழ்நாட்டை மட்டும் எடுத்துக் கொண்டால், இங்கு கோடிச்செல்வர்கள், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கின்றனர்
!
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
அரசியல் கட்சித் தலைவர்கள், ஆலை உடைமையாளர்கள்,
தொழிற்சாலை நிறுவனர்கள்,
கல்விக் குழும உரிமையாளர்கள், நகைக் கடைச்
சீமான்கள், துணிக் கடை வேந்தர்கள், செய்தித்
தாள் செல்வர்கள், தொலைக் காட்சி ஊடக உரிமையாளர்கள், திரையுலகப் பெருமக்கள் எனக் கோடிச் செல்வர்களுக்குக் குறைவே இல்லை !
இந்தியப்
பேராயக் கட்சியைச் சேர்ந்த எச்.வசந்தகுமார், ப.சிதம்பரம், தமிழ் மாநில பேராயக்
கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், ஞானதேசிகன், அகில இந்திய அண்ணா தி.மு.க. வைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி,
ஓ.பன்னீர்ச் செல்வம், வைத்தியலிங்கம்,
நத்தம் விசுவநாதன், தி.மு.கவைச் சேர்ந்த கனிமொழி, தயாநிதி மாறன், சகத் ரட்சகன், டி.ஆர்.பாலு, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், ஐ.ஜே.கே. தலைவர் பாரி வேந்தர்,
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, பாட்டாளி மக்கள்
கட்சி நிறுவனர் மரு.இராமதாசு, பா.ஜ.க. வைச் சேர்ந்த சி.பி.இராதாகிருஷ்ணன், பொன்.இராதா கிருஷ்ணன்,
தமிழிசை சௌந்தர்ராசன், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் போன்றோர்
கோடிச் செல்வர்களே !
திரையுலகப்
பெருமக்களான நடிகர்கள் இரசனிகாந்த், விசய்,
சூர்யா, அசீத் குமார், விசால்,
நடிகைகள் நயன்தாரா, திரிசா, இயக்குநர்கள் சங்கர், முருகதாசு, இசையமைப்பாளர் இளையராசா, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்றோரும் கோடிச்செல்வர்களே
!
தினத்தந்தி
உரிமையாளர் பாலசுப்ரமணிய ஆதித்தன், தினமலர் உரிமையாளர்
இராமசுப்பு, இந்து குழும உரிமையாளர் இராம் போன்றோரும் கோடிச்செல்வர்களே
!
பல கல்லூரிகளை
நடத்தி வரும் தம்பிதுரை, பெரம்பலூர் சீனிவாசன், ஐசரி கணேசு, வேலம்மள் கல்விக் குழுமத் தலைவர் முத்துராமலிங்கம்,
சேலம் பாவை கல்விக் குழுமத்தினர், கோவை பி.எஸ்.ஜி.கல்விக் குழுமத்தினர் போன்றோரும்
கோடிச்செல்வர்களே !
கல்யாண் சுவல்லர்சு, சோசு ஆலுக்காசு, சாய் ஆலுக்காசு, மலபார் சுவல்லர்சு, லலிதா சுவல்லர்சு, குமரன் சுவல்லர்சு, பிரின்சு சுவல்லர்சு போன்ற நகை மாளிகை
உரிமையாளர்களும் கோடிச்செல்வர்களே !
சென்னை
சில்க்சு,
போத்தீசு, ஆனந்தம் சில்க்சு, மகாராசா சில்க்சு, போன்ற துணிக் கடை உரிமையாளர்களும்,
அடையாறு ஆனந்த பவன், ஓட்டல் சரவணபவன், ஓட்டல் அன்னபூர்ணா, ஓட்டல் சூனியர் குப்பண்ணா,
போன்ற உணவக உரிமையாளர்களும் கோடிச்செல்வர்களே !
அப்போலோ
மருத்துவமனை, போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, சேலம் கோகுலம் மருத்துவமனை,
கோவை கே.ஜி.பி. மருத்துவமனை, மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை போன்ற
மருத்துவமனை உரிமையாளர்களும் கோடிச் செல்வர்களே !
சன் தொலைகாட்சிக்
குழுமத் தலைவர் கலாநிதி மாறன், சயா தொலைக் காட்சிக் குழுமத்
தலைவர் டி.டி.வி.தினகரன்,
இராசு தொலைகாட்சிக் குழுமத் தலைவர் இராசேந்திரன் மெகா தொலைக் காட்சிக்
குழுமத் தலைவர் தங்க பாலு போன்றோரும் கோடிச்செல்வர்களே !
ஒரு சோற்றுப்
பதமாக ஒவ்வொரு வகையிலிருந்தும் ஒரு சிலர் பெயர் மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டது. விரிவாகப் பட்டியல் இடப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள கோடிச்செல்வர்களின் எண்ணிக்கை
பத்து இலக்கத்தை விடக் கூடுதலாக அமையும் !
கோடிக்கணக்கில்
செல்வம் படைத்துள்ள இப்பெருமக்கள் ஒவ்வொருவரும், ஆளுக்கொரு
ஊரைத் தத்தெடுத்து, அவ்வூரில் உள்ள ஒரு ஏரியை அல்லது இரண்டு மூன்று
குளங்களைத் தமது சொந்தச் செலவில் தூர் வாரி ஆழப்படுத்தி, கரைகளை வலுப்படுத்தி, நாற்புறமும் படிக்கட்டுகளை அமைத்து,
ஏரி, குளத்திற்கு நீர் வரத்துக் கால்வாய்,
நீர் போக்குக் கால்வாய் அமைத்துக்
கொடுத்தால், ஏழை எளிய மக்கள், குடிநீருக்கு
அல்லாடும் மக்கள் வாயார வாழ்த்துவார்கள் ! இப்போது நிலவி வரும்
குடிநீர்ப் பஞ்சம் வெகுவாகத் தீரும்; எதிர்வரும் மழைக் காலத்தில்
இந்நீர்நிலைகள் நிரம்பி வழிந்து ஊரையும் செழிப்பாக்கும் !
கோடிச்செல்வர்களே ! கொடையுள்ளத்துடன் முன் வாருங்கள் ! மக்களின் குடிநீர்ப் பஞ்சத்தைப்
போக்கி அவர்களின் வாழ்த்துகளை வாரிக்கொள்ளுங்கள் ! உங்கள் குலமும்
தழைக்கும் ! தமிழகமும் பிழைக்கும் !
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2050,விடை,29]
{12-06-2019}
----------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
-
----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .