name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பல்வகை (12) புத்த ஞாயிறு புகட்டிய அறிவு !

புதன், அக்டோபர் 09, 2019

பல்வகை (12) புத்த ஞாயிறு புகட்டிய அறிவு !

பழங்களைத் திரும்ப எடுத்துக் கொள்வதைப் போல !


மக்கள், வாழ்வின் துன்பங்களைப் போக்க, மன்னர் வாழ்வைத் துறந்தார் சித்தார்த்தர்;  ஒரு அரச மரத்தடியில் (போதிமரம் = அரசமரம்) பல நாள்கள் உண்ணா நோன்பிருந்துசிந்தனையை ஒருமுகப்படுத்தி ஓகமியற்றிபேரொளி பெற்றார்; புத்தரானார் !

ஆசையே துன்பத்திற்குக் காரணம்; ஆசையை விட்டொழியுங்கள்என்று அவர் ஊர்தோறும் சென்று உரையாற்றி வந்தார். சிலர் புத்தரது உரையில் இருந்த உண்மையை ஏற்றுக் கொண்டனர்.  வேறு சிலர் அவரைத் தாக்கிப் பேசி வெறுத்தனர் !

ஒரு முறை ஒரு மனிதன் புத்தரைக் கண்டான்; இழிவான மொழிகளால் புத்தரை ஏசினான்; இல்லாததையும் பொல்லாததையும்  சொல்லி அவரை இழிவு படுத்தினான் !

அவனது ஏச்சையும் பேச்சையும் பொறுத்துக் கொண்டார் புத்தர். அந்த இழிதகையோன் பேசிப் பேசி அலுத்து ஓய்ந்தான் !

பின்னர் புத்தரை நோக்கிய அவன், “பரதேசியே ! நான் இவ்வளவு இழித்தும் பழித்தும் உம்மைத் தூற்றுகிறேனே, உமக்கு மானம், வெட்கம் என்பது ஒன்றும் இல்லையா ?” என்றான் !

அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்த புத்தர், “நண்பா ! அருகில் வாஎன்று அழைத்தார். அவன், அவர் அருகில் சென்றான். “நண்பனே இப்படி உட்கார் !” என்றார்.; அவனும் உட்கார்ந்தான் !

நண்பனே ! நீ யாரையாவது காணச் செல்லும்போது, கையில் ஏதாவது எடுத்துச் செல்வது உண்டா ?” என்று கேட்டார் !

ஆம் ! பழங்கள் எடுத்துச் செல்வேன் !” என்று அந்த மனிதன் மறுமொழி பகன்றான் !

நீ கொடுக்கும் பழங்களை, நீ காணச் சென்றவர் ஏற்க மறுத்தால், பிறகு நீ அப்பழங்களை என்ன செய்வாய் ?” என்று கேட்டார் புத்தர் !

ஏசின மனிதனோதிரும்ப அப்பழங்களை எடுத்துக் கொண்டு வீடு திரும்புவேன் !” என்றான் !

அதைப் போலவே நீ ஏசின ஏச்சு மொழிகளை அப்பொழுது நான் ஏற்றுக் கொள்ளவில்லை; பழங்களைத் திரும்ப எடுத்துக் கொள்வதைப் போல ஏச்சுக்களையும் நீயே எடுத்துக் கொள்.” என்று கூறி புன்னகை காட்டினார் புத்தர் பெருமான் !

பொறுமையின் சிகரமான புத்தரின் பொறுமைக்குத் தான் எல்லை ஏது?  அந்தப் பொறுமை கடலினும் பெரிதாயிற்றே !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,சுறவம், 13.]
{27-01-2019}

---------------------------------------------------------------------------------------------------------

       ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .