பிற மாநிலத்தவருக்கு நமது செலவில் மருத்துவர் பயிற்சியா ? ஏனிந்த நிலை ?
தமிழ்நாட்டில்
அரசு மருத்துவக் கல்லூரிகள் 24 உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் 3250 இளநிலை மருத்துவ மாணவர்கள்
(M.B.B.S) சேர்ந்து பயில்கின்றனர். இந்தியாவில்
உள்ள வேறு எந்த மாநிலத்திலும் இத்துணைப் பெரிய எண்ணிக்கையில் அரசு மருத்துவக் கல்லூரிகள்
கிடையாது !
மாணவர்கள் 12-ஆம் வகுப்புத் தேர்வில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் பெறும் மதிப்பெண்ணுடன்
நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணும் சேர்த்துக் கணக்கில் கொள்ளப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை
முந்தைய அ.தி.மு.க
ஆட்சிக் காலத்தில், நடைபெற்று வந்தது. இந்த
நுழைவுத் தேர்வு முறை பல அரசியல்வாதிகளைப் பணக்காரர்கள் ஆக்கியது !
அடுத்து
வந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில், நுழைவுத்
தேர்வு நீக்கப்பட்டு, +2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ
மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இம்முறையால், கிராமப்புற மாணவர்களும் ஏழை மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேரமுடிந்தது.
பணம் கொடுத்து இடம் வாங்கும் தவறான முறை ஒழிந்தது !
மேட்டுக்
குடியினர் சிலரின் திட்டமிட்ட சதிச் செயல்களால், முந்தைய நடுவணரசு ஆட்சிக் காலத்தில் மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கு அனைத்திந்திய
அளவில் தகுதித் தேர்வு (NEET) அறிமுகப்படுத்தப்பட்டது.
நகர்ப்புறங்களில் பள்ளிக் கல்வி பெறும் மாணவர்கள், தகுதித் தேர்வுக்காக நிரம்பப் பணம் செலவு செய்து தனிப்பயிற்சி பெற்று,
மருத்துவக் கல்வியில் சேர்ந்துவிட முடிந்தது. ஆனால்,
கிராமப்புற ஏழை மாணவர்கள் அவர்களுடன் போட்டிபோட முடியாமையால் அவர்களது
வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்டது !
தகுதித்
தேர்வுச் சிக்கல் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. திரு. அல்டாமஸ் கபீர் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதியாக
இருந்தபோது, அவருடன், தீபக் மிஸ்ரா,
மற்றும் இன்னொரு நீதிபதி மூவரும் சேர்ந்து வழக்கினை ஆய்வு செய்து,
தகுதித் தேர்வினால் கிராமப்புற மாணவர்களின் வாய்ப்பு பறிபோகும் என்ற
உண்மையைச் சொல்லி, தகுதித்
தேர்வு ”தேவையில்லை” என 2 நீதிபதிகள் அறிவித்தனர். தீபக் மிஸ்ரா என்னும் நீதிபதி மட்டும் ”தகுதித்
தேர்வு தேவை” என அறிவித்தார் !
பெரும்பான்மைத்
தீர்ப்பின் அடிப்படையில் தகுதித் தேர்வு நீக்கப்பட்டது. இதனால் கிராமப்புற மாணவர்களும் ஏழை மாணவர்களும் மீண்டும் மருத்துக் கல்லூரிகளில்
சேர முடிந்தது. சில ஆண்டுகள் சென்றபின், “தகுதித் தேர்வு தேவை” என்று முன்பு தீர்ப்பெழுதிய அதே
தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியானார் !
மேட்டுக்
குடியினர் மீண்டும் சதியில் ஈடுபட்டனர். அவர்களுக்காக
இயங்கி வரும் ஒரு அமைப்பின் சார்பில் “தகுதித் தேர்வு தேவை”
எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வேறு இரு நீதிபதிகளை
இணைத்துக் கொண்டு, முன்பே உச்ச நீதி மன்றத்தால் விசாரித்து தீர்ப்பு
சொல்லப்பட்ட வழக்கினை மீண்டும் தோண்டியெடுத்து விசாரிக்கத் தொடங்கினார் !
நடுவணரசின்
கருத்து கேட்கப்பட்டது. தகுதித் தேர்வு கட்டாயம் தேவை என்றும் இந்தத் தேர்விலிருந்து எந்த மாநிலத்துக்கும்
விலக்கு அளிக்க முடியாது என்றும் வாதிட்டது தாமரை அரசு. தகுதித்
தேர்வு மூலம் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று ”இறுதித் தீர்ப்பு” எழுதி கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு ஆப்பு வைத்தார் தீபக் மிஸ்ரா
!
இதன்
விளைவு என்ன தெரியுமா ? தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள், பிற்பட்ட, மிகப்
பிற்பட்ட வகுப்பு மாணவர்கள் தகுதித் தேர்வில் போதுமான அளவில் தேர்ச்சிபெற முடியவில்லை
! பொது ஒதுக்கீட்டில் (OPEN COMPETITION) முற்பட்ட
வகுப்பினர் மட்டுமே பெருமளவில் தேர்வு பெற்றனர். மொத்த மக்கள்
தொகையில் 90 % அளவுக்கு உள்ள பிற்பட்ட, மிகப் பிற்பட்ட வகுப்பினர் பொது ஒதுக்கீட்டில் தேர்வு பெற முடிய வில்லை.
3250 இடங்களை முழுமையாக நிரப்ப முடியவில்லை !
இதைக்
காரணங்காட்டி தமிழக
அரசால் நடத்தப் பெறும் 24 மருத்துவக் கல்லூரிகளிலும், நூற்றுக் கணக்கில், உத்தரப் பிரதேசம், பீகார், பஞ்சாப்,ஒடிசா, ஆந்திரா,
போன்ற வெளி மாநில மாணவர்கள் சேர்க்கப்பட்டு இன்று பயிற்சி பெற்று வருகின்றனர்
!
தமிழக
அரசின் மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள்
75% அளவுக்கே சேரமுடிகிறது. எஞ்சிய 25
% பிற மாநில மாணவர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. தமிழர்களாகிய நாம் கொடுக்கும் வரிப்பணம் நம் பிள்ளைகளை மருத்துவராக்கப் பயன்படாமல்
வேறு மாநிலத்தவரை மருத்துவராக்கப் பயன்படுகிறது என்றால், இது
என்ன நீதி ?
கிராமப்புற
மாணவர்கள் தகுதித் தேர்வில் நகர்ப்புற மாணவர்களுடன் எந்நாளும் போட்டி போடவே முடியாது. ஆகையால் கிராமப்புறத் தொழிலாளியின் பிள்ளை இனி தன் தந்தையின் தொழிலைத் தான் செய்து வரவேண்டும்.
சலவைத் தொழிலாளியின் மகன் இனி மருத்துவர் ஆக முடியாது. சவரத் தொழிலாளியின் மகன் இனி சவரத் தொழிலாளியாகவே வாழவேண்டும் !
தமிழா ! ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தமிழா ! உறங்கு
! உன் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோகின்றனவே ! நீ
எப்போது தான் விழித்துக் கொள்ளப் போகிறாய் ?
\----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050, மீனம்,29]
{12-04-2019}
----------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப்பணி மன்றம்”
முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .