name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: எட்டுத்தொகை (05) பரிபாடல் !

சனி, அக்டோபர் 05, 2019

எட்டுத்தொகை (05) பரிபாடல் !

      தீயினுள் தெறல் நீபூவினுள் நாற்றம் நீ !
      கல்லினுள் மணியும் நீசொல்லினுள் வாய்மை நீ !



பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டமையால், இந்நூல் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. இந்நூல் எழுபது பாடல்களைக் கொண்டிருந்தது. அவற்றுள் அழிந்தன போக, இன்று இருப்பவை இருபத்து இரண்டு பாடல்களே !

     
எனினும், பழைய உரைகளிலிருந்தும், புறத் திரட்டுத் தொகை நூல்களிலிருந்தும் இரண்டு முழுப் பாடல்களும், சில பாடல்களின் உறுப்புக்களும் தெரியவந்துள்ளன.  இவை பரிபாடல் திரட்டு என்னும் தலைப்பில் பரிபாடல் நூலுடன் இணைத்து பதிப்பாளர்களால் வெளியிடப்படுகிறது !
     
பரிபாடலில் திருமாலைப் பற்றி ஆறும், செவ்வேளைப் பற்றி எட்டும், வையையைப் பற்றி எட்டுமாகப் பாடல்கள்  உள்ளன. பரிபாடல் திரட்டில் உள்ள இரண்டு முழுப் பாடல்களுள் ஒன்று திருமாலைப் பற்றியும் மற்றொன்று வையையைப் பற்றியும் அமைந்தவை. மதுரை, வையை ஆறு, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை என்பன பற்றிய செய்திகளையும், அக்கால மக்களின் பழக்க வழக்கங்களையும், தெய்வ வழிபாட்டு முறைகளையும் இந்நூலிற் காணலாம் !

     
இந்நூற் பாடல்கள், பொருள்களின் இயற்கைத் தன்மையை விளக்குபவை; சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்தவை. ஆற்றில் புது வெள்ளம் பெருகி வரும்போது  நிகழும் செயல்கள், இந்நூலில் நன்கு கூறப்பட்டுள்ளன. மார்கழி நீராட்டுப் பற்றிய செய்தி, இதன்கண் காணப்படுவது குறிப்பிடத் தக்கது !

     
திருமாலின் சிறப்பு பற்றிக் கூறும் ஒரு பாடலின் வரிகள் வருமாறு:-

-------------------------------------------------------------------------------------------

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;

-------------------------------------------------------------------------------------------
     
வையை ஆற்றில் புது வெள்ளம் கடல் போல் பெருக்கெடுத்து வருகிறது. அதைக் காண ஆடவரும் பெண்டிரும் திரண்டு செல்கின்றனர். மகளிர் ஈரணி (SWIMMING SUIT) அணிந்து நீரில் விளையாடி மகிழ்கின்றனர். வையைக் கரையெங்கும் மலர்களின் மணம் காற்றில் கலந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. என்னென்ன மலர்கள் ஆற்றில் மிதந்து வருகின்றன தெரியுமா ?

----------------------------------------------------------------------------------

மல்லிகை, மௌவல், மணம் கமழ் சண்பகம்,
அல்லி, கழுநீர், அரவிந்தம், ஆம்பல்,
குல்லை, வகுளம், குருக்கத்தி, பாதிரி,
நல்லிணர் நாகம், நறவம், சுரபுன்னை,
எல்லாம் கமழும் இருசார் கரை கலிழ,
.....................................
-----------------------------------------------------------------------------------
       
பரிபாடல் நூல் நெடுகிலும் இவை போன்ற இனிய வரிகள் இறைந்து கிடக்கின்றன. படித்துச் சுவைப்பதற்குச் செய்திகள் நிரம்பவும் காணப்படுகின்றன. இலக்கியத்தில் மூழ்கித் திளைக்க விரும்புவோர்க்கு பரிபாடல் உகந்த வாய்ப்பு !

       
அழகிய தமிழ்ச் சொற்கள் பல அணிவகுத்து பாடல்களின் ஊடே காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை மட்டும் தொகுத்து, அவற்றுக்கு இணையான அல்லது புதிதாகப் புனைந்த ஆங்கிலச் சொற்களையும் தந்துள்ளேன். சுவைத்து மகிழுங்கள் !

--------------------------------------------------------------------------------------------------------

FAST....................................= ஒல்லை (பரி.6:72)
HELLO.................................= எல்லா ! (பரி.8:56)
INPUT..................................= உள்ளீடு (பரி.2:12)
JUNIOR...............................= இளையர் (பரி.6:27)
LOTUS................................= கயமுகை (பரி.8:115)
MATING ROOM..................= சுணங்கறை (பரி.9:20,21,22.)
MODEL................................= செய்குறி (பரி.2:15)
NEW MOON........................= இருள்மதி (பரி.11.37)
PLOUGH (கலப்பை).........= நாஞ்சில் (பரி.1:5)
RUBBER..............................= பயின் (பரி.10:54)
SILENCE..............................= வாளாமை (பரி.20:16)
STAGE.................................= அரங்கம் (பரி.8:109)
SWIMMING SUIT.................= ஈரணி (பரி.6:28)
TEEN AGE...........................= முகைப் பருவம் (பரி.10:19)
TIFFIN..................................= சிற்றடிசில் (பரி.10.105)
VIRGINITY............................= கன்னிமை (பரி.11:136)
HEARING.............................= ஓர்தல் (பரி.11.127)
BAZAAR...............................= அங்காடி (பரி.திர.2:9)
CENTRE...............................= நாப்பண் (பரி2:32)
FULL MOON........................= நிறைமதி (பரி.3:52)
BATHING DRESS................= நீரணி (பரி.10:27)
BED......................................= அமளி (பரி.10:34)
BLOOD.................................= குருதி (பரி.16:29)
CAKE....................................= பண்ணியம் (பரி.19:38)
DRAWING.............................= ஓவம் (பரி.21:28)
WIG.......................................= புனைமுடி (பரி.13:2)
PUBERTY..............................= பூப்படைவு (பரி.16:30)
8th DAY(அஷ்டமி).............. = எண்மதி (பரி.11:37)
READY MADE DRESS.........= புனைதுகில் (பரி.7:46)

CONSCIOUS OF THE OUTER WORLD DURING
SLEEP................................. = அறிதுயில் (பரி.13:29)

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,08]
{23-06-2019}

----------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .