name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புறநானூறு (85) என்னைக்கு ஊர் இஃது அன்மையானும் !

வெள்ளி, ஜனவரி 22, 2021

புறநானூறு (85) என்னைக்கு ஊர் இஃது அன்மையானும் !

இது என் தலைவனின் ஊருமன்று ! அவன்  நாடும் அன்று !

                                                               **********

சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர் நக்கண்ணையார். இவர் பெருங்கோழியூர்    நாயகனின்     மகள்.    பெருங்கோழியூர்     என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில்  உள்ள பெருங்களுர்  என்று    வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர் !

 

இந்த ஊருக்குப் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்னும் சோழ இளவரசன் வந்து சேருகிறான். உறையூரில் இருக்கும் தன் தந்தையிடம் முரண்பாடு கொண்டு பெருங்கோழியூருக்கு வந்து சில மாதங்களாகத் தங்கியிருக்கிறான் !

 

அப்போது மற்போரில் வல்லவனான ஆமூர் மல்லன் என்பவன் அவ்வூருக்கு வருகிறான். தன்னுடன் மற்போரிட இந்த ஊரில் யாருக்காவது துணிச்சல் உண்டா என்று அறைகூவல் விடுக்கிறான். போரவை கோப்பெரு நற்கிள்ளி முன்வருகிறான். இருவருக்கும் மற்போர் கடுமையாக நடக்கிறது. சண்டையில் வென்றவர் யார் என்பதை ஊரார் சொல்ல முன்வரவில்லை. இருவரும் சமவல்லமையுடன்  மற்போர் புரிந்தனர் !

 

கிள்ளியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவன்  மீது காதல் வயப்பட்டிருந்த நக்கண்ணையார் இருவருக்குமான மற்போரினைத்  தொலைவில் மறைந்திருந்தபடியே கவனிக்கிறார் !

 

கிள்ளி பெருங்கோழியூரைச் சார்ந்தவன் அன்று என்பதால் ஊரார் அவன் பக்கம் சார்பு நிலை எடுக்காமல் வாளா நிற்கின்றனர் !

 

மற்போரின் முடிவு  புலவர் நக்கண்ணையாருக்கு  உடனடியாகத் தெரியவில்லைமக்களில் ஒரு சாரார், சோழ இளவரசன்  கோப்பெரு நற்கிள்ளி  ஆமூர் மல்லனை வென்றுவிட்டான் என்கின்றனர்; இன்னொரு சாராரோ ஆமூர் மல்லன் தான் வென்றான் என்கின்றனர் !

 

மற்போர்க் களத்திலிருந்து உறுதியான செய்தி வரவில்லைபுலவர் நக்கண்ணையார் சோழ இளவல்  மீது மிகுந்த காதல் கொண்டிருந்ததால் மற்போரின் முடிவைத் தெரிந்து கொள்ளும் ஆவலை அவரால் கட்டுப்படுத்த  முடியவில்லை !

 

மற்போர்க்களம் நோக்கி ஓடுகிறார். வழியில் ஒரு பனைமரத்தடியில் நின்று கொண்டு, நெற்றியின் மேல்  கைகளைக் குவித்து வைத்து விழிகளைக்  கூர்மையாக்கி நோக்குகிறார். சோழ இளவல்  வெற்றிக் களிப்புடன்  நின்றுகொண்டிருப்பது  தொலைவில் இருக்கும் நக்கண்ணையாருக்குத் தெரிகிறது !

 

அவரது  தலைவன் வென்று விட்டான் என்பது அவருக்கு உறுதியாகிறது ! கிள்ளியைத் தன் தலைவன் என்று சுட்டுவதன் மூலம் தன் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் காதற்  குறிப்பை  நக்கண்ணையார்     பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார். இதோ அந்தப் பாடல் !

------------------------------------------------------------------------------------------------------------

                           என்னைக்கு ஊர் இஃது அன்மையானும்,

                           என்னைக்கு நாடு இஃது அன்மையானும்,

                           ஆடு ஆடுஎன்பஒரு சாரோரே;

                           ஆடு அன்றுஎன்பஒரு சாரோரே;

                           நல்லபல்லோர் இரு நன் மொழியே;                 

                           அம் சிலம்பு ஒலிப்ப ஓடிஎம் இல்,

                           முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று,

                           யான் கண்டனன்அவன் ஆடு ஆகுதலே.

 

-----------------------------------------------------------------------------------------------------------

பாடலின் பொருளுரை:

-------------------------------------

 

என் தலைவன் மற்போர் புரிகிறான்;  இது அவன் ஊர் அன்றுஅவனது சோழ நாடும் அன்று. மக்களில்  ஒரு சாரார் அவன் வெற்றி பெற்றான் என்கின்றனர். 

 

மற்றொரு சாரார் வெற்றி பெறவில்லை என்கின்றனர்.  இப்படி இவர்கள் சொல்வது நல்லதாகப் போய்விட்டது. அதனால் தான் , நானே என் சிலம்புகள்  கிண்கிணி  ஓசை எழுப்ப  ஓடோடிச் சென்று பனை மரத்து அடியில் நின்று பார்த்தேன்.  அவன் தான்  வென்றிருக்கிறான்; நானே உணர்கிறேன்; அவன்  கண்டது வெற்றியே !

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

என்னைக்கு = என் தலைவனுக்குஊர் இஃது அன்மையானும் = மற்போர் நடக்கும் இந்த ஊர் அவனது ஊர் அன்று என்பதாலும்நாடு இஃது அன்மையானும் = மற்போர் நடக்கும் அரங்கு  அவனது சோழ நாட்டைச் சேர்ந்தது அன்று என்பதாலும் ; (போரில் யார் வென்றார் என்பதை ஊரார் முறைப்படி  அறிவிக்காத சூழல் நிலவுவதால்ஆடு, ஆடு என்ப = வெற்றி, வெற்றி என்கின்றனர்; ஒருசாரோரே = மக்களில் ஒரு சாரார்ஆடு அன்று = வெற்றி அன்றுஎன்ப ஒரு சாரோரே = மக்களில் இன்னொரு சாரார்;

 

பல்லோர் இரு நன் மொழியே= இவ்வாறு பலரும் மாறுபட்ட மொழிகளைக் கூறுவது; நல்ல = நல்லதாகப் போயிற்று !  (அதனால்) அம் சிலம்பு ஒலிப்ப ஓடி = என் காலில் அணிந்துள்ள சிலம்புகள் கிண்கிணி ஓசை எழுப்பும் வகையில் நான் ஓடி; எம் இல் = என் இல்லத்தில் உள்ள ;  முழாஅரை = முழவைப் போன்ற பருத்த அடிப் பகுதியைக் கொண்ட ; போந்தை  பொருந்தி  நின்று= பனைமரத்தின் அடியில்  நின்று கொண்டு; யான் கண்டனன்= நானே கண்டேன்; அவன் ஆடு ஆகுதலே= அவன் வென்றுவிட்டான் என்பதை.

------------------------------------------------------------------------------------------------------------

சிறப்புக் குறிப்பு:

-----------------------------

அக்காலப் பெண்பாற் புலவர்கள் எத்துணை ஆற்றல் மிக்கவர்களாக இருந்தாலும், காதல் வயப்படுகையில் குழந்தைகளைப்  போலவும் ஒழுகினர் என்பது இப்பாடலால் விளங்குகிறது.  தான் அன்பு செலுத்தும் இளவரசன்  மற்போரில் வென்றானா, அல்லவா என்பதை அறிந்து கொள்வதற்கு நக்கண்ணையார் காட்டிய ஆர்வமும், அதன் விளைவாகப் மற்போர் நடந்த அரங்கு நோக்கிச் சிறிது தொலைவு ஓடிச் சென்று, ஒரு பனைமரத்தடியில் நின்று பார்ப்பதும், இப்புலவரின் காதல் உணர்வைத் தெற்றென  வெளிப்படுத்துகிறது !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.பி:2051, நளி (கார்த்திகை) 28]

(13-12-2020)

-----------------------------------------------------------------------------------------------------------

என்னைக்கு ஊர்



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .