தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும் !
-------------------------------------------------------------------------------------------------
பறம்பு நாட்டை ஆண்டு வந்த பாரி, வள்ளன்மையில் வலியவனாகத் திகழ்ந்தான். தமிழ்ப்
புலவர்களுக்கும், தம்மை நாடி வரும்
பாணர்களுக்கும் வரையாது வழங்கிப் பெரும்புகழ் எய்தினான். அவனது புகழ் கண்டு
பொறாமை கொண்ட சேர சோழ பாண்டிய மன்னர்கள், கூட்டாகப் படையெடுத்து வந்து பறம்பு மலையை முற்றுகையிட்டு, வஞ்சகமாய்ப் பாரியைக் கொன்றுவிட்டனர் !
செங்கோல் சீர்பெருக, நாட்டை ஆண்டு வந்த பாரி மன்னன், உயிரோடு இருந்தவரை, பறம்பு நாடு வளமுடன் திகழ்ந்தது. பாரியின் மறைவுக்குப் பின் முறையாக ஆள்வோரின்றி மக்கள்
துன்பப்படலாயினர். மழைப் பொழிவு அற்றுப்
போயிற்று; நாட்டின் வளம் குன்றியது !
பறம்பு நாட்டின் நிலை கண்டு கபிலர் பெருமான் மனம் கலங்கினார்; தன் மனத்துயரை ஒரு பாடல் வழியாக வெளிப்படுத்தினார். இதோ அந்தப் பாடல் !
-------------------------------------------------------------------------------------------------------------
மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயலகம் நிறையப் புதற்பூ மலர
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடுநிரை நன்புல்லாரக்
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்
பெயல் பிழைப் பறியாப் புன்புலத் ததுவே
பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே !
-------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-------------------------------------------------------------------------------------------------------------
மைம்மீன் புகையினும் , தூமம் தோன்றினும்,
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,
வயல் அகம் நிறைய, புதல் பூ மலர,
மனைத் தலை மகவை ஈன்ற அமர்க் கண்
ஆமா நெடு நிரை நன் புல் ஆர,
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி,
பெயல் பிழைப்பு அறியாப் புன் புலத்ததுவே –
பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே !
-------------------------------------------------------------------------------------------------------------
பொழிப்புரை:
-----------------------
கரிய நிறக் கோளான காரி (சனி) தனது இயல்பான மங்கிய ஒளியுடன்
தோன்றாமல் சற்று மாறுபட்டுப் புகைப் படலத்துடன் தோன்றினாலும், புடவியில் (பிரபஞ்சம்) அரிதாகத்
தோன்றும் வால்மீன் (வால் நட்சத்திரம் ) விண்ணில் தோன்றி உலா வந்தாலும், சூரியப் பாதைக்கு அருகிலேயே எப்போதும் இயங்கி
வரும் வெள்ளிக் கோள் (சுக்கிரன்) அதிலிருந்து
விலகி சற்றுத் தென் திசை ஓரமாக வலம் வந்தாலும் நாட்டில்
வறுமை நிலவும், வறட்சி
மிகும், வளம் குறையும் என்று சான்றோர்
கூறுவர் !
இத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் போது கூட பறம்பு
நாட்டில் நெல்
விளைச்சல் மிகுந்திருக்கும்; நிலமெங்கும்
பூக்கள் மலர்ந்திருக்கும் ! தலைச்சன்
கன்றை ஈன்ற பசுக்கள்
கூட்டம் நிரம்பப்
புல் கிடைப்பதால் ஆர அமர மேய்ந்து
கொண்டிருக்கும் !
பாரியின் செங்கோல் கோடாச்
செவ்விய ஆட்சியால் சான்றோர்கள் எண்ணிக்கை பெருகி வளர்ச்சியடையும். நிலங்கள்
எல்லாம் வான்மழை பொய்த்தறியா வளமையால் தவசங்கள் (தானியங்கள்) செழித்து
விளையும். இத்தகைய பெருமை மிக்கது பறம்பு
நாடு !
ஆனால், பாரி இன்று
நம்மிடம் இல்லை; அவன்
மறைந்துவிட்டான்.
அவனது பெண்களான அங்கவை, சங்கவை ஆகியோரின் தந்தை நாடான
பறம்பு நாடு அவனின்றி வளம் குன்றிவிட்டது . வான்மழை பொய்த்துவிட்ட்து ! இனி
பறம்பு நாடு என்னவாகுமோ என்பதை நினைக்கையில் மனதைப் பெரும் துன்பம் சூழ்ந்து கொள்கிறது !
-------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருளுரை:
--------------------------------
மை = கருமை நிறம்; மைம்மீன் = சனி; புகைதல் = இயல்பான மங்கிய ஒளி விலகி புகைப்படலம் போல் தோன்றுதல் ; தூமம் = வால்மீன் (வால் நட்சத்திரம்) ; மருங்கு = பக்கம்; வெள்ளி = சுக்கிரன். வயலகம் = நன்செய் நிலம் ; புதற்பூ = நிலப்பூ ; தலை மகவு = தலைச்சன் கன்று ; அமர் = அமைதி, விருப்பம்.; ஆமா = பால் கொடுக்கும்
பசு ; நெடு நிறை நன்புல் = எங்கும் செழித்து வளர்ந்திருக்கும் புல் ; ஆர்தல் = புசித்தல் .; பல்குதல் = மிகுதல் ; பெயல் = மழை; பிழைப்பு = பொய்த்தல் ; புன்புலம் = புன்செய்
நிலம், தரிசு நிலம் ; வெருகு = பூனை; முள் எயிறு = கூர்மையான பல்; புரைய = போன்ற ; பாசிலை = பசுமையான இலை ; முகை = மலரும்
பருவத்தில் உள்ள அரும்பு ; ஆய் = அழகு ; தொடி = கைவளை; அரிவையர் = பெண்கள் ; தந்தை நாடு = தந்தையாகிய பாரியின்
நாடு.
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”புறநானூறு” வலைப்பூ,
தி.பி: 2052, நளி (கார்த்திகை),28]
{14-12-2021}
-------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .