name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புறநானூறு (195) பல்சான்றீரே ! பல்சான்றீரே!

வெள்ளி, ஜனவரி 22, 2021

புறநானூறு (195) பல்சான்றீரே ! பல்சான்றீரே!

நுண்மாண் நுழைபுலம் மிக்க சான்றோர்களே !


------------------------------------------------------------------------------------------------------------

இப் பாடலைப் புனைந்த நரிவெரூஉத் தலையார் காலத்துச் சான்றோர் சிலர் பரிசில் பெறவேண்டி மன்னர்களை  வீணாகப்  புகழ்ந்தும்போர் புரிய  ஊக்குவித்தும் தங்கள் புலமை வளத்தைத் தவறாகப்  பயன்படுத்தி வந்தனர்அதைக் கண்டு வருந்திய இவர்தங்கள் சிந்தனையையும் அறிவையும்  நல்வழியில் பயன்படுத்துமாறு அவர்களை அறிவுறுத்தி இயற்றிய பாடல் இது !

 

----------------------------------------------------------------------------------------

புறநானூறு - பாடல்.195.

----------------------------------------------------------------------------------------

 

பல்சான்  றீரே  பல்சான்  றீரே !
கயன்முள்  ளன்ன  நரைமுதிர்  திரைகவுட்
பயனின்  மூப்பிற்  பல்சான்  றீரே !
கணிச்சிக்  கூர்ம்படைக்  கடுந்திற  லொருவன்
பிணிக்குங்  காலை  யிரங்குவிர்  மாதோ;
நல்லது  செய்த  லாற்றீ  ராயினும்
அல்லது  செய்த  லோம்புமி  னதுதான்
எல்லாரு  முவப்ப  தன்றியும்
நல்லாற்றுப்  படூஉ  நெறியுமா  ரதுவே.

 

----------------------------------------------------------------------------------------

 சந்தி பிரித்து எழுதப்பட்ட பாடல்

------------------------------------------------------------------------------------------

 

பல் சான்றீரேபல் சான்றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயன்இல் மூப்பின் பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்,
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ!
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் ! அதுதான்
எல்லாரும் உவப்பதுஅன்றியும்
நல்ஆற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!

 

-------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

---------------------------------------------------------------------------------

நூல்கள் பலவும் கற்று நுண்மாண் நுழை புலம் மிக்கவர்களாகத் திகழ்வதாக ஊரார் மெச்சும் சான்றோர்களே !கெண்டை மீனின் முள் போல விறைத்து நிற்கும் நரை முடியும்முதுமை எய்தியதால் கன்னங்களில் வரி வரியாகச் சுருக்கமும் ஏற்பட்டு. பயன் இல்லாத முதுமையை அடைந்துவிட்ட சான்றோர்களே ! உங்களுக்கு  ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் !

 

இறப்பு உங்களைத் தழுவும் தருணத்தில்ஐயகோ ! தவறு செய்து விட்டோமே ! என்று வருத்தப்படுவதால் பயனில்லை ! நீங்கள் பிறருக்கு நன்மை தரும் செயல்களைச் செய்யாவிட்டாலும் கூடப் பாதகமில்லைதீமை விளைவிக்கும் செயல்களைச்  செய்யாமல் தவிர்த்திட வேண்டும்.. அதைத்தான் இந்த உலகமே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறதுஅதுமட்டுமன்றி,  உங்களது பிறவிப் பயனை அடைவதற்கு இட்டுச் செல்லும் நன்னெறியும் அதுவொன்றேதான் !

 

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:

-----------------------------------------------------------------------------------------

 பல்சான்றீரே:- பலகுணங்கள் அமைந்த;   சான்றீரே - சான்றோர்களே!கயல் - கெண்டை மீன்முள் – முள்அன்ன - போல (உவம உருபு) ;நரை - நரைத்த தலைமுடிமுதிர் – முதிர்ந்ததிரை கவுள்திரை - முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கம்கவுள் – கன்னம்பயன் இல் - பயன் இல்லாத (இல் - இல்லாத)மூப்பின் – முதுமையின்பல் சான்றீரே:  பல குணங்கள் அமைந்தசான்றீரே - சான்றோர்களே!

 

கணிச்சி-மழு,கோடரி;கூர் கூர்மையான; படை - படைக் கலன்கடுந்திறல்

(கடுமை + திறல்): கடுமை - கடுமைமிகுதிதிறல் - திறம்வலிமை கொண்ட ; ஒருவன் – ஒருவன் (காலன்கூற்றுவன்யமன்)பிணிக்கும் - கயிற்றால் பிணைத்து இழுத்திச் செல்லும்காலை - நேரத்தில் (காலை - பொழுதுநேரம்) இரங்குவிர் மாதோஇரங்குவிர் - வருந்துவீர் (மாதோ - அசைச்சொல்)நல்லது செய்தல் - நன்மை செய்தல்ஆற்றீர் - தளர்ந்து விலகுவீர் (ஆற்று -; தளர்த்து)ஆயினும் – ஆனாலும்அல்லது செய்தல் - தீமை செய்தல் (அல்லது - நன்மை அல்லாதது)ஓம்புமின் - தவிர்க்கவிலகுகஅது தான் - அந்த செயல் தான்எல்லாரும் - எல்லாரும்அனைவரும்உவப்பது - மகிழ்வது ; அன்றியும் – மட்டுமல்லாமல்நல் ஆற்று - நல்ல வழி (ஆற்று - ஆறு - வழி)படூஉம் – படுவதும்நெறியுமார் (நெறியும் + ஆர்): நெறியும் - நீதிஅறம்ஒழுக்கம்; (ஆர்அசைச் சொல்)அதுவே - அதுதான்

 


----------------------------------------------------------------------------------------------------------
          ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை

----------------------------------------------------------------------------------------------------------
  ஆக்கம் + இடுகை:


வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்

[தி.: 2050,மடங்கல்(ஆவணி,19]

{05-09-2019}

------------------------------------------------------------------------------------------------------------

பல்சான்றீரே !


9 கருத்துகள்:

  1. நன்றி... வாழ்க உங்கள் தமிழ் தொண்டு... ஏனோ திடீரென்று பள்ளி பருவத்தில் மனப்பாட பாடலாக இருந்த இப்பாடல் நினைவில் வர, பொருள் அறியும் ஆவலில் உலாவினேன்.. பலன் கிட்டிற்று... தொடரட்டும் தமிழ் தொண்டு

    பதிலளிநீக்கு
  2. அருமையான விளக்கம்... நன்றி

    பதிலளிநீக்கு
  3. தெளிவான விளக்கம்.நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  4. தங்கள் விளக்கம் புரிந்து கொள்ள மிகவும் எளிமையாக இருந்தது நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி ! பழைய இலக்கியங்களில் உள்ள பாடல்களை எனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தித் தரவேண்டும் என்பதே என் நோக்கம் ! தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி !

      நீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .