name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (49) குழந்தைகளின் நேரத்தைக் கொள்ளையடிக்கும் பள்ளிகள் !

சனி, அக்டோபர் 12, 2019

சிந்தனை செய் மனமே (49) குழந்தைகளின் நேரத்தைக் கொள்ளையடிக்கும் பள்ளிகள் !

கல்வி நிலையங்களின் நேரத் திருட்டு !



ஒருநாளில் 24 மணி நேரம் இருக்கிறது. இந்த நேரம் மனிதனின் பல்வேறு செயல்களுக்காக இயற்கையால் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. உழைப்பதற்காக 8 மணி நேரம்; உறக்கத்திற்காக 8 மணி நேரம்; எஞ்சிய 8 மணி நேரம் பிற தேவைகளுக்காக !

வளர்ந்த மனிதனின் நேரத் தேவையிலிருந்து வளரும் குழந்தைகளின் நேரத் தேவை நிரம்பவும் மாறுபடும். உறக்கம், படிப்பு, விளையாட்டு, பெற்றோர்களுடன் பற்றையும் அன்பையும் பரிமாறிக் கொண்டு  இல்லத்தில்பால் ஈர்ப்பை வளர்த்துக் கொள்ளல், உற்றார் உறவினர்களுடன் பழகிப் பொது அறிவையும் நல்ல பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்ளல், உலகியல் அறிவு ஈட்டல், ஆகிய தளங்களுக்காக வளரும் குழந்தகளுக்குப் போதுமான நேரம் தேவை !

ஆனால், இக்காலத்தில், பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளின் நேரம் கல்வி நிலையங்களால் கொள்ளையடிக்கப் படுகிறது. காலையில் எழுந்து குளித்து உணவருந்தி, சீருடை அணிந்து பள்ளி ஊர்தியில் பயணித்துப் பள்ளிக்குச் செல்வதற்கு முன் அந்தக் குழந்தையும் சரி, அதன் பெற்றோரும் சரி, சந்திக்கின்ற நெருக்கடிகள் ஏராளம் ! ஏராளம் !

சீருடைகளை அழலி (IRON BOX) கொண்டு தேய்த்து, சுருக்கம் நீக்கி, காலணிகளுக்கு மெருகேற்றி, புத்தகப் பொதியை அணியம் செய்து அளித்து, குழந்தையை உண்பித்து, நண்பகல் உணவு, குடிநீர் ஆகியவற்றைத்  தந்து, அந்தக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பும் வரை அதன் தாய் தந்தையர் படுகின்ற அல்லல்கள் சொல்லி மாளா !

அந்தக் குழந்தை, அம்மா ஊட்டுகின்ற சோற்றை ஒரு கவளம் வாயில் வாங்கிக் கொண்டு, அதை மென்று விழுங்கக் கூட நேரமில்லாமல். முதல்நாள் பள்ளியில் தந்த வீட்டுப் பாடத்தைச் (HOME WORK),  செய்து முடிப்பதற்குள் விழி பிதுங்கிப் போகிறது !

முப்பது கிலோ எடையுள்ள புத்தகப் பைத் திணியலை  முதுகில் சுமந்துகொண்டு, தெருமுனையில் உறுமிக் கொண்டு நிற்கும் பள்ளிப் பேருந்தை நோக்கி ஓட்டமும் நடையுமாக ஓடிச் செல்லும் அந்தக் குழந்தையின் இளமைக் காலத்தின் இனிய நேரத்தைக் கொள்ளையடிக்கும் பள்ளிகளைக் கண்டிக்க வேண்டியது யார் ?

ஏறத்தாழ ஏழு மணி நேரத்திற்கும் மேல் வகுப்பறைகளில் நேரத்தைச் செலவிடும் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு நேரமே கிடைப்பது இல்லை. உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி ஊட்டும் விளையாட்டும் அதற்கான நேரமும் இக்குழந்தைகளுக்கு மறுக்கப்படுகின்றன ! கல்வி நிலையங்களின் இந்த நேரத் திருட்டைக் கண்டிக்க வேண்டியது யார் ?

பள்ளி நேரம் முடிந்து, மாலை வீடு திரும்பும் குழந்தை, அம்மா தருகின்ற சிற்றுண்டியை அருந்தக்கூட நேரமில்லாமல்தனிப் பயிற்சி” (TUITION CLASS) வகுப்புக்கு விரைந்து ஓடுகிற துன்பியல் காட்சியை காண்கையில்நெஞ்சு  பொறுக்குதில்லையே !” என்னும் பாரதியின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன !

பள்ளிதானே படிப்புச் சொல்லிக் கொடுக்குமிடம் ! கல்விக் கண்களைத் திறந்து வைக்குமிடம் ! அங்கு படிப்பை முறையாகச் சொல்லிக் கொடுத்தால்தனிப் பயிற்சிவகுப்புகளுக்குத் தேவை இருக்காதே ! ”மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா !” என்று பாடிய பாரதியின் கனவு என்னவாயிற்று ?

இரவு 8-30 மணியளவில்தனிப் பயிற்சிவகுப்பு முடிந்து  இல்லம் திரும்பும் குழந்தைகள், மனதிலும் சோர்வு ! உடலிலும் சோர்வு ! பெற்றோருடன் 5 நிமிடம் பேசுவதற்குக் கூட அவர்களுக்கு நேரமிருப்பதில்லை !. ஆங்கிலம், கணிதம், அறிவியல், தமிழ் என்று அனைத்து ஆசிரியர்களும் வீட்டுப் பாடம் தந்திருப்பர். அவற்றை முடிக்காமல் மறு நாள் பள்ளிக்குச் சென்றால் ஆசிரியர்களின் தண்டிப்புக்கு ஆட்பட நேரிடும் !

ஐந்து பாடங்களில் இரண்டைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து மூன்றையாவது முடிக்கவேண்டுமே என்று இரவு 10-00 மணி வரை  கண்விழித்து கல்விக் கூடங்களின் நெருக்குதலுக்கு ஈடு கொடுக்கப் போராடும் இக்காலப் பள்ளிப் பிள்ளைகளின் துன்ப நிலைக்கு யார் காரணம் ? பள்ளிப் பிள்ளைகளின் நேரத்தைக் கொள்ளையடிக்கும் கல்வி நிலையங்களைக் கண்டிப்பது யார் ?

பள்ளிப் பாடத்திட்டங்களைக் கல்வியாளர்கள் தான் வகுக்க வேண்டும். ஆனால் கல்வியாளர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. யார் யாரோ இப்பணிகளுக்காக அமர்த்தப்படுகிறார்கள். குழந்தைகளின் உளவியல் அறியாத கோமான்கள் கல்வித் திட்டத்தை வடிவமைக்கிறார்கள். சொந்தமாகச் சிந்தித்துச் செயல்படவேண்டிய அதிகாரிகள், அரசின் ஏவலர்களாக, எடுபிடிகளாக மாறிவிட்டார்கள். இறுதியில் இன்னற்படுவது என்னவோ இந்தப் பிஞ்சுக் குழந்தைகள்தான் !

கல்வி நிலையங்கள் எல்லாம் அரசியல்வாதிகளின் உடைமைகள் ஆகிவிட்டன. முதலீடு இல்லாத தொழிற்சாலைகளாக இவை மாறிவிட்டன. மக்களாட்சியின் மாண்பு கறிக்கடையில் இரும்புக் கொக்கிகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன ! பள்ளிக் குழந்தைகளுக்கு, கல்விக் கூடங்களே சிறைக் கூடங்களாகி விட்டன ! காந்தி கண்ட கனவு பொய்த்துப் போய்விட்டது ! பாவம் ! இந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்கால வாழ்வும் கானல் நீராகிக் காற்றில் கரைந்து போகாமல் இருக்க வேண்டும் ! அவர்களை எண்ணி நாம் கவலை கொள்வதன்றி வேறு என்ன தான் செய்ய முடியும் ?

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மடங்கல்(ஆவணி),12]
{29-08-2019)

----------------------------------------------------------------------------------------------------------
       “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .