name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (48) உடனடி உணவுகளை உதறித் தள்ளுங்கள் !

சனி, அக்டோபர் 12, 2019

சிந்தனை செய் மனமே (48) உடனடி உணவுகளை உதறித் தள்ளுங்கள் !

நாவைக் கட்டுப்படுத்துங்கள்; நோய் நொடிகள் உங்களை நெருங்கா !


உடல் நலத்தின் ஆணி வேர் என்பது நாம் சாப்பிடும் உணவுதான். கடந்த அரை நூற்றாண்டு காலமாகப் பாரம்பரிய உணவுகள் இருந்த இடத்தைப் பிற உணவுகள் வலிந்து பற்றிக் கொண்டு விட்டன.  சுவைக்காக உணவு அருந்துவது முன்னிறுத்தப்பட்டு, நலவாழ்வுக்காக உண்பது பின் தள்ளப்பட்டுவிட்டது !

உடனடி உணவுகளில் (FAST FOOD) கலக்கப்படும் சாயங்கள் அனைத்தும் வேதிப் பொருள்களே ! “பெட்ரோலியம்”, “தார்கெசோலின்போன்ற மூலப் பொருள்களால் ஆனவை. இவை சிறுநீரகத்தைச் செயலிழக்கச் செய்யும் வல்லமை உடையவை ! புற்று நோயை வரவேற்பவை !

உடனடி உணவுக் (FAST FOOD) கடைகளில் சுவைக்காகப் பயன் படுத்தப்படும் மோனோ சோடியம் குளூட்டமேட்மற்றும்சோடாஉப்பில்சோடியம்”மிகுதி. இவைஇளம்அகவையிலேயே  குருதிக்கொதிப்பை (BLOOD PRESSURE) கொண்டுவந்துவிடும் !


கைகளால் பிய்த்தால் புரி புரியாக, அதாவது நார் நாராக வரும்புரியப்பம்” (பரோட்டா) பெரும்பான்மை மக்களுக்குப் பிடித்தமான உணவாகிவிட்டது. அதற்குரியமைதாமாவை, மென்மைப் படுத்துவதற்காகச் சேர்க்கப்படும்அலெக்சான்கணையத்தின் உள்ளபீட்டாநுண்மங்களைத் (CELL) தாக்கி நீரிழிவு நோய் ஏற்பட வாயிலைத் திறந்து வைத்து விடுகிறது !

உடனடி உணவகங்களில் (FAST FOOD CENTERS) பயன்படுத்தப்படும் சுவையூட்டிகள், நிறமூட்டிகள், மணமூட்டிகள் எல்லாமே நலவாழ்வின் அடித்தளத்திற்கு வேட்டு வைப்பவை. எனவே உடனடி உணவுகளை (FAST FOOD) உதறித் தள்ளுங்கள் !

விரைவில் மரணத்தைத் தழுவ ஆசைப்படுவோர், உணவகம் சென்று கோழி வறுவல் (சில்லி சிக்கன்), கோழி வேவை (CHICKEN ROAST), கோழி வெதுப்பல்   (கிரில் சிக்கன்) மீன் வறுவல் (FISH ROAST), என்று எண்ணெய் தோய்ந்த உணவு வகைகளை வாங்கிச் சுவையுங்கள் ! இவை இதயத்தை வழுவிழக்கச் செய்பவை ! நெடுங்காலம் வாழ ஆசைப்படுவோர், இவற்றை வீட்டில் செய்து சாப்பிடுங்கள் !

உடல் குண்டாக ஆசைப்படுவோர், கடைகளில் செய்யப்படும் வடை, உப்பம் (பச்சி), உருள் மசாலா (போண்டா), மடி மசாலா (சமோசா), சீவல் (சிப்சு), ”பீட்சா”, ”பர்கர்,” ஆகியவற்றை உண்டு மகிழுங்கள். உங்கள் நாவைச்  சுண்டியிழுக்கும் தூண்டிற் புழுக்கள் இவை. நிறத்திற்காகவும், சுவைக்காகவும், மணத்திற்காகவும் என்னென்ன வேதிப் பொருள்கள் கலந்து இவை செய்யப்படுகின்றன என்பது உங்களிடம் சொல்லப் படுவதில்லை !

எவையெவை சாப்பிடக் கூடாதவை என்று சொல்லிவிட்டேன்; எவையெவை சாப்பிடத் தகுந்தவை என்றும் பார்ப்போமா !

இப்போது நமது உடல் உழைப்பு பெருமளவு குறைந்து விட்டது; எனவே மாவுச் சத்து அதிகமுள்ள அரிசி மற்றும் கோதுமையைத் தவிர்த்து, புரதச் சத்து அதிகமுள்ள பருப்பு, பயறு சேர்ந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அரிசிச் சோறுக்குப் பதிலாகத் தினைச் சோறு, வரகுச் சோறு, குதிரை வாலிச் சோறு, ஆகியவற்றை உண்டு வந்தால், உடலுக்கு ஆற்றல் கிடைப்பதோடு, நலமும் மேம்படும். மூன்று வேளை இல்லாவிட்டாலும் அன்றாடம் ஒரு வேளையாவது கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, வரகு. சாமை, காடைக்கண்ணி, குதிரைவாலி ஆகியவற்றாலான உணவுகளை உண்ண வேண்டும் !

நண்பகல் உணவின் போது முதலாவதாக, சிறிதளவு நெய் சேர்க்கப்பட்ட பருப்புச் சோறு சாப்பிடுவது நம் முன்னோர்களின் வழக்கம். நெய்யில் உள்ள பிசுபிசுப்புத் தன்மை தொண்டை மற்றும் இரைப்பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு, மெல்லிய காப்புப் படலத்தை ஏற்படுத்துகிறது. அடுத்ததாக உண்ணும் சாம்பார், குழம்பு, வற்றல் குழம்பு ஆகியவற்றின் காரத் தன்மையால் இரைப்பையின் சுவர்களில் அரிமானம் ஏற்பட்டுக் காலப் போக்கில்  குடற்புண் (PEPTIC ULCER) ஏற்படாமல் இப்படலம் பாதுகாக்கிறது !

நீறில்லா நெற்றி பாழ் ! நெய்யில்லா உண்டி பாழ் !” என்னும் முதுமொழியின் காரணத்தை நாம் அறிந்துகொள்ளவில்லை ! மேல்நாட்டு மருத்துவத்தைப் படித்துவிட்டு நம்மைப் பயமுறுத்துகிறார்கள் நம் நாட்டு ஆங்கில மருத்துவர்கள்.   நெய், எண்ணெய், தேங்காய் போன்றவை கூடவே கூடாது ! அவை கெட்ட கொழுப்புச் சத்தைக் (CHOLESTEROL) கூட்டுபவை ! அவற்றைச் ஏறிட்டும் பார்க்காதே ! ” என்னும் மருத்துவர்களின் பயமுறுத்தலுக்குப் பணிந்து நம்மில் பெரும்பாலோர் நெய்யைக் கைவிட்டுக் குடற் புண்ணால் துன்பப் படுவோர் ஆகிவிட்டோம் !

புலால் உணவு நாட்டமுள்ளோர், நம் பாரம்பரிய நாட்டுக் கோழிக் குழம்பு, மீன் குழம்பு சாப்பிடலாம். கோழி முட்டை புரதச் சத்து அதிகம் கொண்டது. எனவே, நாள்தோறும் ஒரு முட்டையாவது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கொழுப்புச் சத்தும் உடலுக்குத் தேவை. எனவே நல்ல கொழுப்பு (H.D.L.CHOLESTEROL) அதிகம் உள்ள முந்திரி, நிலக்கடலை, வாதுமைப் பருப்பு, பாதாம்பருப்பு ஆகியவற்றை சிறிதளவாவது எடுத்துக் கொள்ள வேண்டும் !

நார்ச் சத்து உடல் எடையைக் குறைக்க உதவி செய்வது மட்டுமன்றி, சிலவகைப் புற்று நோய், இதயநோய், நீரிழிவு நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது. நார்ச் சத்து அதிகமுள்ள பனியரிசி (ஓட்சு) வாற்கோதுமை (பார்லி), சீமையவரை (பீன்சு), செம்முள்ளங்கி (கேரட்), முட்டைக்கீரை (முட்டைக் கோசு), கிச்சிலிப் பழம்  (ஆரஞ்சு), அரத்திப்பழம் (ஆப்பிள்), மக்காச் சோளம் ஆகியவற்றை நிரம்ப உண்ண வேண்டும். பழங்களை சாறு பிழிந்து அருந்துவதற்குப் பதில், சுளைகளை அப்படியே சாப்பிடுவதால் அதிக அளவு நார்ச் சத்து நமக்குக் கிடைக்கிறது. வெறும் சக்கை என்று நாம் கருதுவதில்தான் நார்ச் சத்து நிரம்ப உள்ளது என்பதை உணருங்கள் !

இயன்றவரை, சமைக்கப்படாத காய்களை உட்கொள்ள வேண்டும். மாங்காய், புடலங்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், அவரைப் பிஞ்சு ஆகியவை பச்சையாகவே சாப்பிடத் தக்கவை ! பழங்களையும், காய்களையும் நன்கு கழுவிய பிறகு, அதன் மேலுள்ள தோலுடன் சாப்பிடவேண்டும். மெழுகு பூசப்பட்ட அரத்தி (ஆப்பிள்), செந்தாழை (அன்னாசி) பலா, சீத்தா, கிச்சிலி (ஆரஞ்சு)), பப்பாளி, மாதுளை போன்றவை தோலுடன் சாப்பிட முடியாதவை. மா. கொய்யா, கொடிமுந்திரி (திராட்சை), மெழுகு பூசப்படாத அரத்தி (ஆப்பிள்), சீமை இலுப்பை (சப்போட்டா),  போன்றவற்றைத் தோலுடன் சாப்பிட வேண்டும் !

மண்சார்ந்த, மரபு சார்ந்த உணவுகள்தான் நலவாழ்வுக்கு நல்லது ! காலை எழுந்ததும் குளம்பி (COFFEE), தேநீர் போன்றவை அருந்தாமல் சுக்கு மல்லி கற்கண்டுச் சாறு, அருந்தலாம். சிறு தானியங்களில் செய்யப்பட்ட இட்டளி (IDLI), தோசை,  இடியாப்பம், பிட்டு, உப்புமா, மிளகு சீரகம் சேர்த்த வெண்பொங்கல் நல்லது. மாலையில் எண்ணெய்யில் பொரித்த வடை, உப்பம் (பச்சி), உருள் மசாலா (போண்டா) போன்றவற்றுக்குப் பதில் வேர்க்கடலை, பொட்டுக் கடலை, எள்ளுருண்டை. கடலை உருண்டை, அவல் உப்புமா, அவல் கன்னல் (பாயசம்), சுண்டல், வறுத்த பயறு, பழக் கலவை (FRUIT SALAD) போன்றவற்றைச் சாப்பிடலாம் !

சுவரை வைத்துத் தான் சித்திரம் எழுத வேண்டும்; உடலை நலமாகப் பேணித்தான் நெடுங்காலம் வாழ முடியும். நாவைக் கட்டுப்படுத்துங்கள் ! தூண்டிற் புழுவை நாடும் மீன்களாக மனித குலம் மாறி அழிவைத் தேடிக் கொள்ளக் கூடாது !

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2050,மடங்கல் (ஆவணி),23]
{9-9-2019}
--------------------------------------------------------------------------------------------------------
       “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------

1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .