களங்கம் நேர்ந்தால் சான்றோர் உயிர் துறப்பர் !
-----------------------------------------------------------------------------------------------------------
விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்
கடிகை பல கருத்தான பாடல்களைக் கொண்ட இலக்கியம் ! முத்து முத்தான
101 பாடல்களைக் கொண்ட நீதி நூல் ! அதிலிருந்து
ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
------------------------------------------------------------------------------
பறைபட வாழா அசுணமா; உள்ளம்
குறைபட வாழார் உரவோர் – நிறைவனத்து
நெல்பட்ட கண்ணே
வெதிர்சாம் தனக்கொவ்வா
சொல்பட்டால் சாவதாம்
சால்பு !
-----------------------------------------------------------------------------
பொருள்
------------------------------------------------------------------------------------------------------------
அசுணமா என்னும் கேகயப் பறவைக்கு பறையொலி பிடிக்காது; பறையொலியைக் கேட்டால் அஃது உயிர் நீத்துவிடும் !
அறிவார்ந்த மக்கள் தமது மதிப்புக்கு மாசு நேர்வதை விரும்பமாட்டார்; நேர்ந்தால் உயிர் வாழத் துணியார் !
மூங்கில் தூர்களில் அதன் வாணாளில் ஒருமுறைதான் அரிசி விளையும்; விளைந்த பின் அவை உயிர் வாழாது பட்டுப் போகும் !
அதுபோல், நிறையுடைய சான்றோர் தம்மீது பழிச்சொல் ஏற்படுவதைப் பொறுக்க மாட்டார்; ஏற்பட்டால் அக்கணமே உயிர் துறப்பர் !
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்:
---------------------------------------
அசுணமா = கேகயப் பறவை (இதை மயில் என்கின்றனர் சிலர் ) உரவோர் = அறிவுடையோர் ; நிறைவனத்து = காட்டிலுள்ள ; வெதிர் = மூங்கில் ;
சாம் = மடிந்து போகும் ;
சால்பு = நிறையுடைய சான்றோர்
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,மடங்கல்(ஆவணி),31]
{17-09-2019}
-------------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .