name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கீழ்க்கணக்கு
கீழ்க்கணக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீழ்க்கணக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 02, 2019

கீழ்க்கணக்கு (08) ஐந்திணை எழுபது !

திணை ஒன்றுக்கு 14 வீதம் ஐந்து திணைகளுக்கும் மொத்தம் எழுபது  பாடல்கள் கொண்டது இந்நூல் !



ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும்  பதினான்கு பாடல்களைக் கொண்டு. எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்து இருப்பதால், இதற்கு ஐந்திணை எழுபது எனப் பெயர் வழங்கலாயிற்று. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்னும் வரிசையில் பாடல் திணைகள் அமைந்துள்ளன !

இந்நூலை இயற்றியவர் மூவாதியார் ! இவரைச் சிலர் சமண மதம் சார்ந்தவர் என்று கூறுவர். ஆனால், அதற்குத் தக்க சான்றுகள் ஏதுமில்லை. இவரைப் பற்றிய வேறு செய்திகள் ஏதும்  கிடைக்கவில்லை !

செய்யுள் அடிகள் மற்றும் அவற்றில் வரும் சொற்களின் ஒற்றுமையாலும், வேறு சில குறிப்புகளாலும், இவர் ஐந்திணை ஐம்பதை அடியொற்றிப் பாடல்களை அமைத்து இருக்கிறாரோ  என்று சிலருக்கு ஐயம் தோன்றக் கூடும் !

இந்நூலில் உள்ள எழுபது பாடல்களில் முல்லைத் திணையில் வரும் 25, 26 -ஆவது பாடல்கள் முற்றிலும் சிதைந்து விட்டன. அதுபோன்றே நெய்தல் திணையில் வரும் 69, 70 -ஆவது பாடல்களும் கிடைக்கப் பெறவில்லை !

இந்நூல், செம்பாகமான தெள்ளிய நடையை மேற்கொண்டுள்ளது. அக்காலப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் முதலியனவும் இந்நூலால் புலனாகின்றன !

இந்நூலில், குறிஞ்சித் திணையில் ஒரு பாடல்; தலைவனைப் பற்றித் தலைவி தோழியிடம் எடுத்துரைக்கிறாள். “என் அருமைத் தோழியே ! நான் ஒன்று சொல்கிறேன் ! கேள் ! நற்பண்புகள் நிறைந்த சான்றோர்களின் நட்பினை அடைதல்  நமக்குக் கிடைக்கும் பெரும்பேறு ஆகும் ! அந்த நட்பானது நமக்குச் சிறந்த  துணையாகி, மிகுந்த வலிமையையும் தரும் ! அது மட்டுமன்றி, அளவுகடந்த நன்மைகளையும் நமக்குத் தரும்

அதுபோல, நீர் வளமும் நிலவளமும் நிறைந்து, எங்கெங்கு காணினும் பூஞ்சோலைகளாகத் திகழும் மலை நாட்டுக்குரிய என் தலைவனின் நட்பானது எவ்வித குறைபாடுகளுக்கும் இடமின்றி மிகுந்த இன்பத்தை மட்டுமே  தருவதாக அமையும் என்று என் நெஞ்சம்  சொல்கிறதடி என் இனிய தோழி !” என்று தலைவன் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப் படுத்துகிறாள் !

-------------------------------------------------------------------------------------------------------

இதோ அந்தப் பாடல் !
--------------------------------------------------------------------------------------------

சான்றவர்   கேண்மை   சிதைவின்றாய்   ஊன்றி,
வலியாகி  பின்னும்  பயக்கும்;  மெலிவுஇல்,
கயம்திகழ்  சோலை   மலைநாடன்  கேண்மை
நயம்திகழும் என்னும்என்னெஞ்சு !

---------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
---------------------------------------------------------------------------------------------

சான்றவர் = சான்றோர்கள்; கேண்மை = நட்பு; சிதைவின்றாய் = சிதைவு படாமல்; ஊன்றி = நிலைத்து நின்று; வலியாகி = வலிமை பெற்று; பின்னும் பயக்கும் = அதன் பின்னும் நன்மைகளைத் தரும்; மெலிவு இல் = வற்றாத; கயம் = நீர்நிலைகள் (குளங்கள்); திகழ் = நிறைந்து காணப்படும்; சோலை = பூஞ்சோலைகள்; மலைநாடன் = இந்த மலை நாட்டின் தலைவன்; கேண்மை = நட்பாகிய பழக்கம்; நயம் திகழும் = இன்பங்களைத் தருவதாக; திகழும் = விளங்கும்; என்னும் = என்று எனக்குச் சொல்கிறது; என் நெஞ்சு = எனது நெஞ்சம்.

---------------------------------------------------------------------------------------------------------

இயற்கை வளத்தைப் படம் பிடித்துக் காட்டும் இத்தகைய பாடல்கள் அடங்கிய ஐந்திணை எழுபது படிக்கும் தோறும் இன்பம் பயப்பதாகும் !

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கன்னி(புரட்டாசி),10]
{27-09-2019}
--------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------

கீழ்க்கணக்கு (07) ஐந்திணை ஐம்பது

திணையொன்றுக்கு பத்து வீதம் ஐம்பது பாடல்களைக் கொண்ட  நூல் !


இது முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற வரிசையில் பப்பத்துப் பாடல்களைப் பெற்றுள்ள நூலாதனின், இதனை ஐந்திணை ஐம்பது என்று குறிப்பிடுகின்றனர்.  கி.பி. 6 – ஆம் நூற்றாண்டில் இந்நூல் தோன்றியிருக்கலாம் என்பது பல அறிஞர்களின் கருத்து !

இந்நூற் பாடல்கள் சிறந்த நடை உடையனவாயும், கருத்து வளம் செறிந்தனவாயும் உள்ளன.  இந்நூலுக்கு உரிய பாயிரம், “ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார், செந்தமிழ் சேராதவர்”, என்று கூறுகின்றது. எனவே செந்தமிழ்ப் புலமைக்கு இந்நூற் பயிற்சி மிகவும் அகத்தியம் என்பது தெளிவு !

இதன் ஆசிரியர் மாறன் பொறையனார். இப் பெயரில் மாறன் என்பது பாண்டியனைக் குறிப்பதாயும், பொறையன் என்பது சேரனைக் குறிப்பதாயும் உள்ளன. எனவே, இவர் இந்த இரு பேரரசரோடும் தொடர்புடையராய், இவர்களுக்கு நட்பினராய் இருத்தல் கூடும் !

இந்நூலின் முதற் செய்யுளில் உவமையாக மாயோன், முருகன், சிவன் மூவரையும் குறித்துள்ளார். இதனால் இவரை வைதிக சமயத்தவர் என்று கருதற்கு இடமுண்டு !

திருக்குறள் முதலிய கீழ்க் கணக்கு நூல்களிற் பயின்றுள்ள சொற் பொருள் மரபுகள் சில இந் நூலகத்தும் உள்ளன. “கொற்சேரி நுண் துளைத் துன்னூசி விற்பாரின்...” என்னும் 21 –ஆவது பாடலின் கருத்து  கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல்என்னும் பழமொழி நானூற்றில் வரும் 50 – ஆவது பாடல் கருத்தையும் வரிகளையும் ஒத்து இருக்கின்றன !

-------------------------------------------------------------------------------------------------------

இந்நூலில் நெய்தல் திணையில் வரும் பாடற் காட்சி ஒன்றைப் பாருங்கள் ! நெய்தல் திணை என்பது இரங்கல் உணர்வை உரிப் பொருளாகக் கொண்டதன்றோ ? இரங்கல் உணர்வை அழகாக வெளிப்படுத்தும் பாடலைப் பாருங்கள் !

--------------------------------------------------------------------------------------------------------

தலைவியைப் பிரிந்து, தலைவன் தன் நாட்டிற்குச் சென்றுவிட்டான். விரைவில் திரும்பி வருகிறேன் என்று கூறிச் சென்றவன் இன்னும் வரவில்லை. தலைவனின் நினைவால், தலைவி வாடுகிறாள்; உணர்ச்சிப் பிழம்பாகத் திகழ்கிறாள் ! 

தன் தலைவன் ஏறிச் சென்ற தேரின் காலடித் தடத்தை (தேர்க் காலடித் தடம் = தேர்ச் சக்கரம் பதித்துச் சென்ற தடம்) கண்டேனும் ஆறுதல் பெற விரும்புகிறாள். எனவே, தேர் சென்ற வழித்தடத்தில்  அங்குமிங்கும் ஊர்ந்து  திரிகின்ற நண்டினைப் பார்த்து, “ ! நண்டே ! வளைந்த கால்களை  உடைய நண்டே ! என்றும் ஆரவாரம் அடங்காத, அலைகளை  உடைய  கடற்கரை ஓரம் அமைந்துள்ளது எம் காதலனின் நாடு ! விரைவில் திரும்பி வருகிறேன் என்று கூறிச் சென்றவன் இன்னும் வந்து சேரவில்லை !

அவன் நினைவால் என் உள்ளம் வாடுகிறது ! என் அழகிய உடல் பசலை பூத்துப் பொலிவிழந்து விட்டது !  அவன் ஏறிச் சென்ற தேரின் காலடித் தடங்களைக் கண்ணாரக் கண்டாலாவது எனக்கு ஆறுதலாக இருக்கும் ! எனவே உன்னை யான் ஒன்று வேண்டுகிறேன் ! அவன் ஏறிச் சென்ற தேரின் காலடித் தடங்களை அழித்து விடாதே ! தேர்க்கால் தடம் பதிந்த மணல் வெளியில்  அங்குமிங்கும் நீ நடந்து, அத் தடங்களை அழித்து விடாதே !” என்று வேண்டுகிறாள். என்னே புலவரின் கற்பனைத் திறம் !

---------------------------------------------------------------------------------------------------------

இதோ அந்தப் பாடல் !
------------------------------------------------------------------------------------------

கொடுந்தாள்  அலவ !  குறையாம்  இரப்போம் !
ஒடுங்கா  ஒலிகடற்  சேர்ப்பன்  நெடுந்தேர்
கடந்த  வழியைஎம்  கண்ணாரக்  காண,
நடந்து சிதையாதி, நீ !

-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்:
--------------------------------------------------------------------------------------------------------

கொடுந்தாள் = வளைந்த கால்; அலவன் = நண்டு; குறை = எம் மனக் குறையை;  இரப்போம் = உன்னிடம் சொல்லி வேண்டிக் கேட்கிறேன்; ஒடுங்கா ஒலி கடல் = எப்பொழுதும் ஆரவாரம் அடங்காத அலைகளை உடைய கடல்;  சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவனாகிய எம் காதலன்; சிதையாதி = சிதைத்து அழித்துவிடாதே !

---------------------------------------------------------------------------------------------------------

இது போன்ற பாடல்களைக் கொண்ட இந்நூல், மாந்த இனத்தின் அக உணர்வுகளை அழகுபடச்  சித்திரிக்கிறது !

--------------------------------------------------------------------------------------------------------

அடுத்து ஒரு பாடல் ! பாலைத் திணையைப் பின்னணியாகக் கொண்ட பாடல் ! வாழ்ந்த சூழலின் வசதிகளையும், பசுமையான நினைவுகளையும் விடுத்துக் காதலனுடன் வறண்ட பாலை நிலப் பகுதி ஊடாகச் செல்கிறாள் தலைவி ! பாலை நிலத்திற்கே இயல்பான கடுமை வாட்டும்; எனினும் காதல் வயப்பட்ட உள்ளங்களுக்கே இயல்பான விட்டுக் கொடுப்புகள், அவர்களை மேலும் நெருக்கமாக்கும். இக்கருத்தை விளக்கும் அழகிய பாடலைப் பாருங்கள் !

------------------------------------------------------------------------------------------------

சுனைவாய்ச்  சிறுநீரை,  எய்தாது  என்றெண்ணி,
பிணைமான்  இனிதுண்ண  வேண்டி  கலைமாதன்
கள்ளத்தின்  ஊச்சும்   சுரம்என்பர்,  காதலர்
உள்ளம்  படர்ந்த  நெறி !

-----------------------------------------------------------------------------------------------

ஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்தில் அரிதாகக் காணப்படும் நீர்ச் சுனை ஒன்றில் நீர் அருந்தச் செல்கின்றன ! ஆனால் அதில் இருக்கும் நீரோ மிகக்குறைவு ! இரண்டு மான்களுக்கும் பொதுமானதாக இல்லை ! தான் அருந்தாவிட்டால், பெண் மானும் அருந்தாது என்று ஆண் மானுக்குத் தெரியும் ! எனவே பெண்மான்  அருந்தட்டும் எனத் தான் அருந்துவது போல பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான் !  இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர் !

----------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்:
--------------------------------------------------------------

சுனை வாய் = சுனையில் உள்ள; சிறு நீரை = மிகக் குறைவாக இருக்கும் நீரை; எய்தாது = பெண்மான் அருந்தாது; என்றெண்னி = என்று கருதி; பிணைமான் = பெண்மான்; இனிதுண்ண வேண்டி = அருந்தட்டும் என்று விரும்பி; கலைமா தன் = ஆண்மான் தன்னுடைய; கள்ளத்தின் = பாசாங்கு செய்தல்; ஊச்சும் = உறிஞ்சுதல்; சுரம் = பாலைநிலம்; நெறி = ஒழுக்கம்

---------------------------------------------------------------------------------------------------------

இத்தகைய கருத்துச் செழுமை வாய்ந்த பாடல்களை படித்து, உள்வாங்கி ஒழுகுகின்ற மக்கள் நற்பேறு பெற்றவர்கள் என்றால் அது மிகையில்லை !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2050,கன்னி(புரட்டாசி),06)
{23-09-2019}
---------------------------------------------------------------------------------------------------------
       ”தமிழ்ப் பணிமன்றம் முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

கீழ்க்கணக்கு (06) களவழி நாற்பது !

களவழியை ஊன்றிப் படிப்பவர்கள் போரை வெறுப்பார்கள்; அமைதியையே விரும்புவார்கள் !


கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் நிகழ்ச்சியாகிய போர்ச்செய்தி பற்றியது களவழி நாற்பது ஒன்றே. ஏர்க்களம் பற்றியும், போர்க்களம் பற்றியும் பாடப்பெறும் பாடல்கள் களவழி எனப்படும் !

இந்நூலில் உள்ள செய்யுள்கள் எல்லாம்களத்துஎன்றே முடியும் வகையில் வெண்பாக்களால் யாக்கப்பெற்றுள்ளன. நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பாக்களால் இந்நூல் அமைந்துள்ளது !

சோழன் செங்கண்ணான் என்பவன், சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பவனுடன் போர்புரிந்தான். இந்தப் போர் கழுமலம் என்னும் ஊரிலே நடந்தது. இப்போரில் சேரன் தோற்றான்; சோழன் வென்றான். தோற்ற சேரன் சோழனால் சிறைப்படுத்தப்பட்டான். சேரனுடைய நண்பர் பொய்கையார் என்னும் புலவர். அவர் சோழனுடைய வெற்றியைப் புகழ்ந்து பாடிச் சேரனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார். இதுவே இந்நூல் தோன்றுவதற்குக் காரணமாகக் கூறப்படும் வரலாறு !


இந்நூலிலே யானைப் போரைப் பற்றிய பாடல்களே மிகுதியாகக் காணப்படுகின்றன. சேரமானிடம் யானைப் படைகளே அதிகம். சேரநாட்டில்தான் யானைகள் மிகுதி. ஆதலால், சேரனுக்கும், சோழனுக்கும் நடந்த போரிலே யானைப் படைகளின் சிதைவைப் பற்றிக் கூறுவது வியப்பன்று !


போர்க்களத்தில் நடைபெறும் கொடுமை; போரால் மக்கள் மாண்டு மடியும் குலைநடுங்க வைக்கும் காட்சி; பார்ப்போர் உள்ளத்திலே அச்சத்தை ஊட்டும் போர்க்களக் காட்சி; இவற்றை இக்களவழிப் பாடல்களிலே காணலாம். இந்நூலை ஊன்றிப்  படிப்போர் போரை வெறுப்பார்கள்; அமைதியையே விரும்புவார்கள். இக்கருத்தை இந்நூலின் பாடல்களிலே காணலாம் !

போர்க்களத்தில், மடிந்து வீழ்ந்த வீரர்களின் உறவினர்கள் அவர்தம் உடல்களைத் தேடி அங்குமிங்கும் ஓடுகின்றனர்.; உடலத்தை கண்டு அழுது அரற்றுகின்றனர்; இக்காட்சி, மரங்கள் அடர்ந்த சோலையிலே, பெருங்காற்று புகுந்து சுழன்று சுழன்று அடிப்பதைக் கண்டு, அஞ்சிய மயிலினங்கள், வெவ்வேறு திசைகளிலே சிதறி ஓடுவதைப்போல இருந்தது என்று கூறுகின்றது ஒரு செய்யுள். இதோ அந்தப் பாடல் :-

----------------------------------------------------------------------------------------------------

கடிகாவில் காற்று உற்று எறிய, வெடிபட்டு
  வீற்றுவீற்று ஓடும் மயில் இனம்போல்-நாற்றிசையும்
  கேளிர் இழந்தார் அலறுபவே; செங்கண்
  சினமால் பொருத களத்து.

----------------------------------------------------------------------------------------------------

மற்றொரு பாட்டிலே மரவினைஞர் (தச்சர்) வேலை செய்யும் இடத்தையும், போர்க்களத்தையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார் புலவர். இக்காட்சியைக் காணும்போது யாருடைய உள்ளமும் உருகாமல் இருக்காது. தச்சர் வேலை செய்யும் இடத்தைப் பார்த்தால் அலங்கோலமாகத்தான் காணப்படும். வேலை செய்யும் கருவிகள் பல இடங்களிலே கிடக்கும்; அறுபட்ட மரங்கள்; துளை  இடப்பட்ட சட்டங்கள்; செதுக்கிய சிராய்த் தூள்கள்; இவை எங்கு பார்த்தாலும் சிதறிக் கிடக்கும். 


போர்க்களத்திலும் ஆயுதங்கள் சிதறிக்கிடக்கும்;  பிணங்கள் குவிந்து கிடக்கும்; துண்டிக்கப்பட்ட  கை கால்கள் சிதறிக் கிடக்கும்; சிதைந்த உடல்கள்  உருமாறிக் கிடக்கும். யானை, தேர், குதிரை முதலியனவும் வீழ்ந்து கிடக்கும். இத்தகைய போர்க்களத்திற்குத் தச்சுப்பட்டறையை ஒப்பிட்டது மிகவும் பொருத்தமானது !

-------------------------------------------------------------------------------------------
 ‘
கொல்யானை பாயக் குடைமுருக்கி எவ்வாயும்
 புக்கவாய் எல்லாம் பிணம் பிறங்கத், தச்சன்
 வினைபடு பள்ளியில் தோன்றுமே செங்கண்
 சினமால் பொருத களத்து.

------------------------------------------------------------------------------------------

இதுபோல் போர்க்களத்தின் காட்சியைக் காட்டும் பாடல்கள் பல. அற்றைத் தமிழில் படைக்கப்பெற்ற பாடல்கள் இற்றைத் தமிழர்கள் படித்துப் புரிந்து கொள்வது பெரிதும் கடினமே ! மூலமும் உரையுமாக அமைந்த இக்கால நூல் கிட்டலாம். படித்துப் பண்டைத் தமிழகத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ளுங்கள் !

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,26]
{11-07-2019}
--------------------------------------------------------------------------------------------------------
        ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------


கீழ்க்கணக்கு (05) கார் நாற்பது !

கார்காலப் பின்னணியில்  பாடப் பெற்ற நாற்பது பாக்களால் இந்நூல்   கார்நாற்பது எனப்பெற்றது  ! 


பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஐந்தாவதாக வைத்து எண்ணப்படுவது கார்நாற்பது. சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியத்  தொகுப்பான  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. மதுரையைச்  சேர்ந்த கண்ணங் கூத்தனார்  என்னும் புலவரால்  இயற்றப்பட்டது !

பண்டைக்காலத் தமிழரின்  அகவாழ்க்கையின்  அம்சங்களை, தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக்  கார்காலப் பின்னணியில் எடுத்துக் கூறுகின்ற நூல்  கார் நாற்பது. அகப் பொருள் சார்ந்தது !

கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளையும், அக்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும், தலைவியின் மனநிலையோடு சேர்த்து இந் நூலில் எடுத்துக் கூறப்படுகின்றது !

அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப் படுகின்றமையினாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார்நாற்பது என்னும் பெயர் பெற்றுள்ளது !

தலைவன் பொருள் ஈட்டிவர எண்ணி வெளியூர் செல்கையில், 'கார் காலத்தில் மீண்டு வருவேன்' என்று தலைவியிடம் கூறிப் பிரிந்து செல்கிறான். உரியகாலத்தில் அவன் திரும்பி வாராமை குறித்துத் தலைவி பிரிவு ஆற்றாது மனத் துயருற்று தோழியிடம் புலம்புகிறாள்

தோழி ஆறுதல் மொழி கூறி அவளைத் தேற்றுகிறாள்சென்ற தலைமகன் கார்காலம் தொடங்கியதைக்  கண்டு தன் நெஞ்சினையும் பாங்கனையும் விளித்துப் பேசுகிறான். இச்செய்திகளை உள்ளடக்கி  இந் நூல் இயற்றப் பெற்றுள்ளது. தோழி, தலைமகள், தலைமகன், பாங்கன் ஆகியோரை உறுப்பினராக அமைத்து, ஒரு நாடகம் போல அவர்களை இந் நூலில் பேச வைத்துள்ளார் ஆசிரியர் !

கார்காலத்  திருவிழாக்களில்  ஒன்றான  கார்த்திகை விளக்குத் திருவிழாவின்போது மக்கள் தங்கள் இல்லங்களில் ஏற்றி வைத்துள்ள  அகல் விளக்கு  அணிகளைப்  போல,  நடைபாதை எங்கும் வரிசையாக மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்தக் காட்சி, கார்காலம் தொடங்கிவிட்டது என்பதையும், தலைவன் பொருள் தேடிக்கொண்டு மீண்டு வரும் காலம் வந்துவிட்டது என்பதையும்  அறிவிக்கும் தூதாக  மழை பெய்யத் தொடங்கிவிட்டது  என்னும் பொருளில் கீழ்க்கண்ட பாடல் அமைக்கப்பட்டுள்ளது !
---------------------------------------------------------------------------------

நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை.

----------------------------------------------------------------------------------

கார்காலம் பற்றிய வண்ணிப்பு (வர்ணனை) இப்பாடலில் அழகாக இடம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது !

இதோ இன்னொரு பாடல். கார்காலம் தொடங்கிவிட்டது, தன் தலைவன் இன்னும் திரும்பி வரவில்லையே என்று கலங்கி நிற்கும் தலைவியைப் பார்த்து, அவள் தோழி, ஆறுதல் கூறமுடியாமல் தானும் கலங்குகிறள் !

வேனிற்காலத்தில் பூக்கக் கூடிய பாதிரிப் பூக்கள், கார்காலம் தொடங்கிவிட்டதால் வாடத் தொடங்கிவிட்டன. காட்டின்கண் உள்ள இளமணற் பரப்பின்மீது ஆலங்கட்டிகள் விழுந்து உருள்கின்றன. கரிய நிற முகில்களூடே இடிமுழக்கம் கேட்கிறது. தனித்து இருக்கும் தலைவியை மேலும் வருத்தம் கொள்ளச் செய்யும் முகத்தான், நேற்று முதல் மழையும் பெய்யத் தொடங்கி இருக்கிறதே !.”

(கார்காலம் தொடங்கிவிட்டது. தலைவன் ஏன் இன்னும் வரவில்லை ? என்று மனதிற்குள் மயங்கும் தோழியின் கூற்று இந்த வரிகள்.) அப்பாடல் வருமாறு:-

-----------------------------------------------------------------------------

வரி நிறப் பாதிரி வாட, வளி போழ்ந்து
அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள,
உரும் இடி வானம் இழிய, எழுமே-
நெருநல், ஒருத்தி திறத்து.

-----------------------------------------------------------------------------

கார்காலம் பற்றிய நேர்முக வண்ணனை அளிப்பது போல இயற்றப்பட்டுள்ள கார் நாற்பதுஇலக்கியம் படிக்கப் படிக்கப் இன்பம் பயப்பதாகும்.

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
[தி.:2050,ஆடவை,25]
{10-07-2019}
----------------------------------------------------------------------------------------------------------
        ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்றது !
----------------------------------------------------------------------------------------------------------

கீழ்க்கணக்கு (04) இனியவை நாற்பது !

பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே !


இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள 'நாற்பது' எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன் ஆவார் !

இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால்  சமய நோக்குடையவராக இருந்திருக்க வேண்டும். இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அந்நூலாசிரியருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது !

இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப் பட்டுள்ளது !

இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை நோக்கத் தக்கது !

வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர் !
----------------------------------------------------------------------------------------------------

பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே;
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே;
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.

----------------------------------------------------------------------------------------------------
இனியவை நாற்பதில் இது முதலாவதாக வரும் பாடல். இப்பாடலின் பொருள்:- பிச்சையெடுத்துப்  பொருள் சேர்த்தாவது கல்வி கற்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் நன்மை பயக்கும் (இனிது). அப்படிக் கற்ற கல்வி, அவனது அறிவை மேம்படுத்தி அறிஞர்கள் நிறைந்த அவையில்  அவனுக்கு நன்மதிப்பை ஈட்டித் தர உதவினால், அது மிகவும்  இனிய பொழுதாக அமையும். முத்துப் போன்ற மாசு மறுவற்ற அழகிய பல்வரிசை அமைந்த மகளிரது பொருள் பொதிந்த, இனிமை தவழும் வாய்ச்சொல் மிக இனிது. அதுபோல, கற்றறிந்த பெரியோர்களின் கைத்தலம் பற்றி அவர்களை வாழ்வில் முன்னோடியாகக் கொண்டு, அவர்களின்  துணையுடன் ஒழுகுதல் இனிதினும் இனிது !

வேறொரு பாடலில் பூதஞ்சேந்தனார் சொல்கிறார்:- நிறைந்த செல்வம் உடைய மனிதன், அருள்மனம் கொண்டு இல்லாதார்க்கு இயன்ற அளவுக்கு ஈந்து, அவரைக் கைதூக்கி விடுதல் இனிய செயலாகும். இல்லற வாழ்வில் இணைந்திருக்கும் தலைவனின் உள்ளமும், தலைவியின் உள்ளமும் ஒரே நேர்கோட்டில் அமைந்து, அவர்களது சிந்தனையும் செயலும் ஒரே வழியில் இணைந்து நடைபயிலுமானால், அவர்தம் வாழ்க்கை மிக இனியதாக அமையும். இந்தப் பரந்த உலக வாழ்வில் எதுவும் நிலையானதல்ல என்பதை உணர்ந்து, ஆசைகளைத் துறந்து, அறம் செய்து நேரிய வழியில் வாழ்தல் இனிமை நிறைந்த வாழ்வாக அமையும். இதோ அந்தப் பாடல்:-

------------------------------------------------------------------------------------------

உடையான் வழக்கு இனிது; ஒப்ப முடிந்தால்,
மனை வாழ்க்கை முன் இனிது; மாணாதாம் ஆயின்,
நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல்
தலையாகத் தான் இனிது நன்கு.

-------------------------------------------------------------------------------------------


இல்லற வாழ்வானாலும் சரி, துறவற வாழ்வானாலும் சரி, அஃது இனிமை நிறைந்த வாழ்வாக அமையவே அனைவரும் விரும்புவோம் ! இதற்கு வழிகாட்டுகிறது இனியவை நாற்பது ! படிப்போம் ! பயனடைவோம் !!

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை23]
{08-07-2019}
--------------------------------------------------------------------------------------------------------
          “தமிழ்ப்பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------