கடைச்சங்க காலத்து நூலான நான்மணிக்
கடிகை, கடவுள் வாழ்த்து உள்பட மொத்தம் 106 வெண்பாக்களை
உடையது. விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் படைத்த இவ்விலக்கியம் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று
! இதிலிருந்து ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (24)
--------------------------
புகழ்செய்யும் பொய்யா விளக்கம் – இகந்தொருவர்ப்
பேணாது செய்வது பேதைமை – காணாக்
குருடனாச் செய்வது மம்மர் – இருள் தீர்ந்த
கண்ணராச் செய்வது கற்பு.
-----------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
----------------
பொய்யாமை என்னும் ஒளியில் நடை பயிலத் தொடங்கினால் , அது புகழைக்
கொண்டு வந்து சேர்க்கும் !
முறை கடந்து,
ஒருவரையும் மதியாது, அறியாமை
வழிச் செல்லல் தீமையைக்
கொண்டு வந்து சேர்க்கும் !
கல்வியறிவற்ற மனிதனின் மதி மயக்கம், இரு கண்களிருந்தும்
அவனைக் குருடனாகச் செய்துவிடும் !
ஆனால், கல்வியானது ஒரு மனிதனின் குருட்டுத் தனத்தை அழித்து அவனை அறிவாளி ஆக்கிவிடும் !
-------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------------
பொய்யா விளக்கம்
= பொய்யாமையாகிய ஒளி; புகழ்
செய்யும் = எங்கும் புகழை உண்டாக்கும்; பேதைமை
= அறியாமை; இகந்து
= முறை கடந்து ; ஒருவர்ப் பேணாது = ஒருவரையும்
மதியாமல்; செய்வது
= தீயவை செய்வதாம்; மம்மர்
= கற்றறிவில்லா மயக்கம்; காணா = வழி காணாத; குருடனாச் செய்வது = குருடனாகச்
செய்வதாம்; கற்பு
= கல்வியறிவு; இருள்
தீர்ந்த = குருடு நீங்கிய; கண்ணராச்
செய்வது = கண்ணொளி
உடையராகச் செய்வதாம்.
------------------------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
--------------------------------
பொய்யாமை புகழையும், அறியாமை தீயவை செய்தலையும், கல்லாமை
அறியாமையையும், கல்வியானது அறிவையும் உண்டாக்கும் !
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2052, ஆடவை (ஆனி) 16]
{30-06-2021}
-------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .