மனதைத் தன்வயப்படுத்தும் வல்லமை உடையவன் யார் ?
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வகைப்படுத்தப் பெற்ற இலக்கியங்களைத் தவிர்த்து, எஞ்சிய பல இலக்கியங்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வகைப்படுத்தப் பெற்றுள்ளன; அவற்றுள் ஒன்று தான் நான்மணிக் கடிகை ! ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை எடுத்துரைப்பதால் இந்நூல் நான்மணிக் கடிகை என வழங்கப்பெறுகிறது ! இதிலிருந்து ஒரு பாடல் !
-------------------------------------------------------------------------------------------
பாடல் எண்
(18).
-----------------------------
கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்குந் - தோமில்
தவக்குட்டந் தன்னுடையான் நீந்தும் அவைக்குட்டம்
கற்றான் கடந்து விடும்.
-------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-------------------------------------------------------------------------------------------
கடல்குட்டம் போழ்வர் கலவர்; படைக்குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்கும்; - தோம்
இல்
தவக்குட்டம் தன்உடையான் நீந்தும்; அவைக்குட்டம்
கற்றான் கடந்து விடும்.
-------------------------------------------------------------------------------------------
குட்டம் = ஆழம்; ஆழம்
உடைய கடல்
-------------------------------------------------------------------------------------------
பொருள்:
---------------
படகு, தோணி,
நாவாய், போன்ற
மரக்கலம் உடையவர்கள் ஆழமான கடலாக இருந்தாலும் கூட, அதன்
நீரைப் பிளந்து கொண்டு செல்வார்கள்
!
காற்று போல் கடிது செல்லும் படைக் குதிரையை உடைய வீரன், பகைவரது
படை என்னும் கடலின் கரையை உடைத்துக்
கொண்டு செல்வான் !
மனதைத் தன்வயப்படுத்தும் வல்லமை உடையவன், குற்றங்
குறைகளற்ற தவம் என்னும் ஆழ்கடலை நீந்திக்
கரையேறுவான் !
அதுபோல், தெள்ளத் தெளிவாகக் கல்வி கற்றவன், கற்றறிந்த
அறிஞர்கள் நிறைந்த அவை
என்னும் ஆழ்கடலை எளிதில் எதிர்கொண்டு கடந்து செல்வான் !
-------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------
கலவர் = மரக்கலம் உடையவர் ; கடல்
குட்டம் = கடலின் ஆழமான நீரை ; போழ்வர் = பிளந்து
செல்வர் ; பாய்மா உடையான் = காற்று
போல் கடிது செல்லும் வலிமையான குதிரையை உடைய வீரன் ; படைக்குட்டம் = படை
என்னும் ஆழ்கடலின் கரையை
; உடைக்கிற்கும் = போரிட்டு
உடைத்து விடுவான் ; தன் உடையான் = தன் மனதைத் தன்வயப்படுத்தியவன் ; தோம்
இல் = குற்றமில்லாத ; தவக்குட்டம் = தவம்
என்னும் ஆழ்கடலை ; நீந்தும்
= நீந்திக் கரையேறுவான் ; கற்றான் = தெளியக்
கற்றவன் ; அவைக்குட்டம் = கற்றறிவுடையோர் நிரம்பிய அவை என்னும் கடலை ; கடந்துவிடும் = எதிர்கொண்டு
கடந்து செல்வான்.
-------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2052,கும்பம் (மாசி),21]
{05-03-2021}
-------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .