name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக்கடிகை (15) பறை நன்று பண்ணமையா யாழின் !

வியாழன், மார்ச் 04, 2021

நான்மணிக்கடிகை (15) பறை நன்று பண்ணமையா யாழின் !

இனிமை தராத யாழிசையை விடப் பறையொலியே மேல் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை உள்ளடக்கியது நான்மணிக் கடிகை ! கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் !. இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்.(15)

-----------------------------------------------------------------------------------------------------------

பறைநன்று  பண்ணமையா  யாழின்நிறைநின்ற

பெண்ணன்று  பீடிலா  மாந்தரின்பண்ணழிந்து

ஆர்தலின் நன்று பசித்தல்பசைந்தாரின்

தீர்தலின்  தீப்புகுதல்  நன்று.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

-------------

செவிகளுக்கு இனிமை உணர்வைத் தரும் பண்ணிசை அமையாத யாழைவிடப் பேரோசை எழுப்பும் பறை நல்லது !

பெருந்தன்மை என்னும் பேராண்மை இல்லாத ஆண் மக்களைவிட, அடக்கம் மிகுந்த கற்பரசிகளான பெண் மக்கள் நல்லவராவார் !

ஆக்கிய உணவு ஆறிப் பதனழிந்த பிறகு அதை  உண்பதைவிடப் பசியால் வருந்தித் துன்பப்படுதல் நல்லது   !

அதுபோல், நம்மை விரும்பி  அன்பு செலுத்துபவர்களை விட்டு நீங்கி வாழ்வதைவிட எரியில் வீழ்ந்து உயிர்விடுதல் மிகவும் நல்லது !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------

பறை = ”தப்புஎன்று வழங்கப்படும் பறையானது ; (பண் + அமையா =) பண்ணமையா = இனிய இசை தரவியலாத ; நிறை நின்ற = அடக்கம் மிகுந்த கற்பரசிகள் ; (பீடு + இலா = ) பீடிலா = பெருந்தன்மை என்னும் பேராண்மை இல்லாத ; மாந்தரின் = ஆடவரை விட ; (பண் + அழிந்து =) பண்ணழிந்து = உண்பதற்கேற்ற  பொருத்தமான பதன் அழிந்து ; ஆர்தலின் = உண்பதை விட ; பசைந்தாரின் = நம்மை விரும்பி அன்பு செலுத்துபவரை ;  தீர்தலின் = விட்டு விலகி வாழ்வதை விட ; தீப்புகுதல் = எரியும் தீயில் விழுந்து உயிர் விடுதல்.

-----------------------------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052, கும்பம் (மாசி),20]

{04-03-2021}

---------------------------------------------------------------------------------------------

பறையொலியே மேல் !

பதனழிந்த உணவு  பாழ் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .