name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக்கடிகை (14) பல்லினால் நோய் செய்யும் பாம்பெலாம் !

வியாழன், மார்ச் 04, 2021

நான்மணிக்கடிகை (14) பல்லினால் நோய் செய்யும் பாம்பெலாம் !

ஊடலால்  நோகடிக்கும் நூலிழையர் !

------------------------------------------------------------------------------------------------------------

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக் கடிகை, கடைச்சங்க காலத்திய நூல். இதில் கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன ! இந்நூலிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------------------

பாடல்:எண்.(14).

------------------------------------------------------------------------------------------------------------

பல்லினான் நோய் செய்யும்  பாம்பெலாங்கொல்லேறு

கோட்டால் நோய்செய்யுங்  குறித்தாரை ஊடி

முகத்தான் நோய்செய்வர்  மகளிர்  முனிவர்

தவத்தால்  தருகுவர் நோய்.

------------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------------------

பல்லினால்  நோய்செய்யும்  பாம்புஎலாம்; – கொல் ஏறு

கோட்டால்  நோய்செய்யும்  குறித்தாரை;   ஊடி

முகத்தால் நோய்செய்வர்  மகளிர்;  முனிவர்

தவத்தால் தருகுவர் நோய்.

------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

--------------

பாம்புகள்  தம் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் , பிற உயிர்களுக்குத் தம் நச்சுப்  பற்களால்  துன்பம் தரும் !

சீண்டப் பெறும் காளை, தான் குறி வைத்துவிட்டால், குறிப்பிட்ட மனிதருக்குத் தன் கூரிய கொம்புகளால் துன்பம் தரும் !

பெண்மக்கள், ஊடல் கொண்டு பிணங்கி, தம் முகக் குறிப்பினால் ஆடவர்க்குத் துன்பம் தருவர் !

அதுபோல், முனிவர்கள் சினம் கொண்டால், தம்மை இகழ்ந்தவர்களுக்குத்  தமது தவ வலிமையால், துன்பம் தருவர்  !

-------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------

நோய் செய்யும் = துன்பம் தரும்;  கொல் + ஏறு = கொல்லேறு = குத்திக் கொல்லும் குணம் படைத்த காளை ;  கோட்டால் = தன் கொம்புகளால் ; குறித்தாரை = தான் குறிவைப்பவரை ; ஊடி = பிணக்குக் கொண்டு ; முகத்தால் = முகக் குறிப்பால் ; தவத்தால் = தவ வலிமையால்.

----------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம் (மாசி),20]

{04-03-2021}

---------------------------------------------------------------------------------------------------------------------

பல்லினால் நோய் செய்யும் !

கொல் ஏறு கோட்டால் நோய் செய்யும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .