இடிந்த கிணற்றுக்குள் வேரைப் பிடித்துத் கொண்டு தொங்கி !
மனிதனாகப் பிறந்துவிட்டால் வாழ்வில் எதிர்ப்படும் இன்ப துன்பங்களைத் துய்த்துத் தான் ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்க இயலாது ! துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும், இடையியே இன்பமும் எதிர்ப்படும் ! இது தான் வாழ்வு என்கிறார் ஒரு புலவர் !
-----------------------------------------------------------------------------------------------------------
.....வைந்தலை நாகங் காண
இடிகிணற் றருகின் வேரைப்
.....பற்றிநான் றிடவவ் வேரைக்
கடுகவோர் எலியும் வந்து
.....கறித்திட வதில்நின் றோனுக்(கு)
இடைதுளித் தேனக் கின்பம்
.....போலுமிப் பிறவி யின்பம்
-----------------------------------------------------------------------------------------------------------
எளிதில் புரிந்து கொள்ள வாய்ப்பாக. பாடலைச் சந்தி பிரித்து எழுதித் தருகிறேன் !
-----------------------------------------------------------------------------------------------------------
........ஐந்தலை நாகம் காண,
இடிகிணற்று அருகில் வேரைப்
........பற்றி, நான்றிட அவ்வேரைக்
கடுக ஓர் எலியும் வந்து
........கறித்திட, அதில் நின்றோனுக்கு
இடைதுளித் தேன் நக்கு இன்பம்
........போலும் இப்பிறவி இன்பம்
!
----------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருளுரை:
------------------------------
அடுகரி தொடர = கொல்ல வருகின்ற யானை என்னைப் பின் தொடர்ந்து துரத்த ; இடிகிணற்றில் வீழ = இடிந்து பாழடைந்த நீரில்லாத ஒரு கிணற்றில் நான் வீழ்ந்தேன் ;
அருகில் வேரைப் பற்றி = வீழும்போது (நல்வாய்ப்பாக ) கிணற்று விளிம்பில் முளைத்திருந்த ஒரு மரத்தின் வேரை நான் பற்றிக் கொண்டு ; நான்றிட = தொங்கினேன்;
ஐந்தலை நாகம் காண = அப்போது நீரில்லாக் கிணற்றின் தரையில் ஐந்து தலை நாகம் ஒன்று படமெடுத்துச் சீறுவதைக் கண்டேன். (வேரினை விட்டுவிட்டால், கிணற்றுக்குள் வீழ்ந்து பாம்புக்குப் பலியாக நேரும்)
அவ்வேரைக் கடுக ஓர் எலியும் வந்து கறித்திட = அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு எலி நான் பிடித்துக் கொண்டு தொங்கிய வேரினைக் கடிக்கத் தொடங்கியது.
அதில் நின்றோனுக்கு = அப்படி இறப்பின் பிடியில் சிக்கி, வேரைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த எனக்கு ; இடை துளித் தேன் = மேலேயிருந்த மரத்தில் கட்டியிருந்த தேன் கூட்டிலிருந்து தேன் துளி என் வாயில் சொட்டியது.
நக்கு இன்பம் = அந்தத் தேன் துளியை நக்கிச் சுவைக்கின்ற இன்பம் ; போலும் இப்பிறவி இன்பம் = போன்றது தானோ இந்தப் பிறவியில் நான் துய்க்கும் இன்பம் !
------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------
ஒரு யானை என்னைத் துரத்துகிறது ; தப்பித்து ஓடிவரும் நான் கால் இடறி பாழடைந்த ஒரு கிணற்றில் வீழ்கிறேன் ; அப்படி வீழும்போது (நல்வாய்ப்பாக ) கிணற்று விளிம்பில் முளைத்திருந்த ஒரு மரத்தின் வேரைப் பற்றிக் கொண்டு கினற்றுக்குள் தொங்குகிறேன் !
கிணற்றிலோ நீரில்லை; ஆனால் கிணற்றின் தரையில் ஒரு நாகம் சீறிக் கொண்டு இருப்பதைப் பார்க்கிறேன்; வேரிலிருந்து கை நழுவினால் பாம்புக்குப் பலியாவது உறுதி !
மனதில் அச்சம் எழுகிறது. வேரைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறலாம் என்று நினைக்கையில் , எங்கிருந்தோ வந்த ஒரு எலி, நான் பிடித்திருக்கும் வேரைக் கடிக்கத் தொடங்குகிறது !
எந்த நேரத்திலும் வேர் அறுந்து கிணற்றுக்குள் நான் வீழலாம்; பாம்புக்கும் பலியாகலாம்; எதிர்பாராத் திருப்பமாக யாராவது என் உதவிக்கும் வரலாம்; என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத துன்பச் சூழ்நிலை ! கிணற்று மேட்டில் இருக்கும் ஒரு மரக் கிளையில் உள்ள தேன் கூட்டிலிருந்து சொட்டுச் சொட்டாக தேன் துளிகள் என் உதட்டருகில் வீழ்கின்றன!
இறப்பு எந்த நேரத்திலும் என்னைச் சுருட்டி வாரிக் கொள்ளலாம் என்னும் சூழ்நிலையில், என் உதடுகளில் தெறித்து விழும் தேன் துளிகளை நாவினால் நக்குகிறேன் ! ஆகா ! எத்துணைச் சுவை !
இப்பிறவியில் ஒவ்வொரு மனிதனும் எத்துனையோ துன்பங்களை எதிர்கொள்கிறான்; அந்தத் துன்பங்களுக்கு இடையேயும் தேன் துளி போன்ற இன்பமும் அவனுக்குக் கிடைக்கத்தான் செய்கிறது ! இதுதான் மனித வாழ்வு !
இந்த அழகிய பாடலை எழுதிய புலவரின் பெயர் தெரியவில்லை ! வரலாற்றில் அவரது காலடிச் சுவடுகள் பதிந்திருக்கின்றனவே தவிர அவரது பெயர் மட்டும் பதிவாக வில்லை !
-------------------------------------------------------------------------------------------------------------
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, துலை (ஐப்பசி),08]
{24-10-2020}
------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .