தாயாக மதிக்கப் பட வேண்டியவர்கள் !
மகளிர் அனைவருமே தாய்மையின் வடிவங்கள் ! எனினும் தாய்மை என்னும் பண்பு வேறு; தாய் வேறு ! யார் யாரை எல்லாம் நாம் தாயாகக் கருத வேண்டும் ? ஒரு புலவர் பட்டியலிடுகிறார் பாருங்கள் !
------------------------------------------------------------------------------------------------------------
தன்னை யளித்தாள் தமையன் மனைகுருவின்
பன்னி யரசன் பயில்தேவி - தன்மனையைப்
பெற்றாள் இவரையே பேசில் எவருக்கும்
நற்றாயர் என்றே நவில்
!
-------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல் !
------------------------------------------------------------------------------------------------------------
தன்னை அளித்தாள், தமையன் மனை, குருவின்
பன்னி , அரசன் பயில்தேவி, - தன்
மனையைப்
பெற்றாள், இவரையே பேசில் எவருக்கும்
நற்றாயர் என்றே நவில்
!
--------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
--------------------------
தன்னை அளித்தாள் = தன்னைப் பெற்றவள் : தமையன் மனை = தமையன் மனைவியாகிய அண்ணி; குருவின் பன்னி = தனக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் மனைவி; அரசன் பயில் தேவி = அரசனின் மனைவியாகிய அரசியார்; தன் மனையைப் பெற்றாள் = தன் மனைவியைப் பெற்றவள்; இவரையே பேசில் = ஆகியோரைப் பற்றிச் சொல்வோமானால்; எவருக்கும் = எல்லா ஆடவர்க்கும்; நற்றாயர் என்றே நவில் = இவர்கள் தாய் போன்றவர்கள் ஆவர் !
-------------------------------------------------------------------------------------------------------------
தன்னைப் பெற்றவள்,
தன் அண்ணி, தன் ஆசிரியரின் மனைவி, நாட்டின்
அரசியார், தன் மாமியார் ஆகிய ஐவருமே “தாய்” என்னும்
உயர்ந்த இடத்தில் வைத்து ஒவ்வொரு
ஆடவராலும் வணங்கத் தக்கவர்கள் ஆவர்
!
-------------------------------------------------------------------------------------------------------------
இந்த அரிய பாடலை எழுதிய புலவர் யார் ? அவர்
பெயரைப் பதிவு செய்ய வரலாறு தவறிவிட்டது !
வரலாறு தன் கடமையில் இருந்து தவறினாலும், நாம்
இந்த ஐந்து தாயரையும் உயர்ந்த இடத்தில் வைத்து மதிப்பதில் தவறு செய்யலாகாது !
-------------------------------------------------------------------------------------------------------------
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, துலை (ஆவணி),06]
{22-10-2020}
------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .