கொத்து (01) மலர் (058)
----------------------------------------------------------------------------------
திருத்துறைப்பூண்டி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
(சத்திரம் நடு நிலைப் பள்ளி)
18-04-2017 அன்று
நடைபெற்ற
பணிநிறைவுப் பாராட்டு விழாவின்போழ்து
நிறை பணித் தலைமை ஆசிரியர்
இ.இராமலிங்கம் B.Sc.,M.Ed
அவர்கள்
ஆற்றிய நன்றியுரை
[ கவிதை ஆக்கம் வை.வேதரெத்தினம் ]
[ கவிதை ஆக்கம் வை.வேதரெத்தினம் ]
அவைத்தலைமைப் பொறுப்பேற்று அணிசெய்யும் பெருந்தகையே !
அருந்தமிழில் உரையாற்றி அமர்ந்திருக்கும் புரவலர்காள் !
நவையிருளில் வழிகாட்டும் நன்மதியீர் ! இளந்தலையோர் !
நற்கல்வி அமுதுபெற நாள்தோறும் உழைப்பவர்காள் !
குவைபொலியும் பொற்காசாய்க் குழுமியுள நண்பர்களே !
கோதையரே ! ஆடவரே ! கூர்மதியீர் ! அரங்கத்தீர் !
சுவைமிகுந்த சொல்மாலை ! சூட்டுதற்கு யான்வந்தேன் !
சோதனையாய்க் கருதாமல் சுவைத்திடுக ! வணங்குகிறேன் !
மதுமலர்கள் வளம்பெருகும் மயல்மதுக்கூர் ஒன்றியத்தில்
மனங்கவரும் சிற்றூராம்
மதுரபா ஷானிபுரம் !
விதுப்புடனே ஈங்குவந்தேன் ! வேலருளால் பணிஏற்றேன் !
வேலைதனில் சேர்ந்ததுநான் எண்பத்து எட்டலவோ !
குதுகுதுப்பாய்ப் பணியாற்றிக் கொற்றவரின் உதவியினால்
கோரினேன்;
இடம்பெயர்ந்தேன் குலவுஆண்டாங் கரையினிலே !
சதுப்புநிலம் நெல்வயல்கள் சலசலக்கும் மடைப்பாய்ச்சல் !
சலிப்பின்றி நித்தநித்தம் சார்பள்ளிப் பணிபுரிவேன் !!
பயிற்றுவிக்கும்
ஆசிரியர்ப் பணிநிலையில் நிறைவின்மை !
பரிந்துபெற்று தீவாம்பாள்
பள்ளிநாடிப் பறந்தனனே !
துயில்பொழுதும் ஆழ்மனதில் துல்லியமாய்க் கனவுபல !
தூயகல்விப் பயிர்வளர்க்க தூவும்மழை தேடினனே !
வாயிலிலே வாய்ப்புஒன்று வந்துநின்று அழைத்தது காண் !
வாஞ்சையுடன் ஈங்குவந்தேன் வளர்பயிர்க்கு நீர்தரவே !
கோயிலினுள் புகுந்ததுபோல் குளிர்ச்சியுற்றது எனதுஉள்ளம் !
கூடும்கல்விச் சாலையெல்லாம் கோயில்தானே
உண்மையுண்மை!
!
@@@@@@@@@@@@@@@
இடைநிலையில் ஆசிரியர்ப் பணியிடத்தில் அமர்வுபெற்று,
எழிலார்ந்த மதுக்கூரின் மதுரபா ஷானிபுரம்,
குடைதொடங்கி ஆண்டாங் கரையடுத்து, தீவாம்பாள்
குறிஞ்சிமுதல் இப்பள்ளி ஈறாகப் பலநிலையில்
அடைந்தபணிப் பட்டறிவால் அரசினரின் தண்ணளியால்
அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணீயிடத்தில்
மிடைப்புற்றேன் தொண்ணூற்று ஒன்பதிலே உயர்வுற்றேன் !
மென்மேலும் ஊக்கமுடன் செயலாற்றும் உரம்பெற்றேன்
!
ஆறாண்டு, பட்டதாரி ஆசிரியர்
பணிக்காலம்,
அதன்பின்பு எழிலூரில் நடுநிலைப் பள்ளிதனில்
ஈராண்டு தலைமைநிலை ஆசிரியர்ப் பணியேற்பு !
இரண்டாயிரத் தேழுமுதல் இவண்தலைமை ஆசிரியர்,
நூற்றிருபான் திங்கட்கும் மேலதிக மாதங்கள்
நுதற்கண்ணன் ஆசியுடன் நுழைபுலமும் துணைசெய்ய
போற்றரிய ஆசிரியப் பெருமக்கள் ஒத்துழைப்பால்
புரிதலுடன் பணியாற்றி பணிநிறைவும் எய்திவிட்டேன் !
@@@@@@@@@@@@@
இனிமைகள் நிறைந்தவை இவ்வுலகம் - அவை
எல்லைகள் கடந்தவை நாமறிவோம் !
கனிகளைத் தேடுதல் நம்மியல்பு
! - வெறும்
காய்களை நாடுதல் பிழையலவோ !
பனிமலர் போன்றவை பிள்ளைமனம் - அதைப்
பக்குவப் படுத்துதல் நம்கடமை !
நுனிக்கழிக் கன்னல் இனித்திடுமோ !
- நம்
நுகர்ச்சியில் தவறுக்கு இடமில்லை !
குருத்தோலை போன்றவர்கள் மாணாக்கர்கள் ! - அவரைக்
கோபுரமாய் உயர்த்துதலில் நமக்கும்இன்பம் !
விருப்புடனே கற்கையிலே விடலைக்கின்பம் ! - பிள்ளை
வெற்றிபல குவிக்கையிலே தந்தைக்கின்பம் !
முருக்கிதழின் சொற்பொழிவால் அன்னைக்கின்பம் ! – ஊர்
முரசொலித்துப் போற்றுகையில் உறவுக்கின்பம் !
அருந்திறலால் சாதனையால் நாட்டிற்கின்பம் ! - உலகு
அவர்புகழைப் பாடுகையில் பள்ளிக்கின்பம் !
@@@@@@@@@@@@@
ஆசிரியப் பணிஎனக்கு பெருமை தந்தது ! - பல
ஆண்டுகளாய் எனதுழைப்பு நிறைவைத் தந்தது !
மாசிலாத வீணைபலவும் தேடித் தந்தது ! - கல்வி
மாண்புதனை உலகுணர்த்த வாய்ப்புத் தந்தது !
வீசுகின்ற தென்றலாக உணர்வைத் தந்தது ! - ஒளி
விளக்குகளை ஏற்றிவைக்கும் உரிமை தந்தது !
தேசுமிக்க அறிஞர்களைத் தேடித் தந்தது ! - இனிய
தேன்றமிழில் ஆர்வம்தந்து முழுமை தந்தது !
@@@@@@@@@@@@
வரையோடு உறவாடி வானின்று தரைவீழும்
வாரியைக் காண்பதினிது !
கரையோடு விளையாடி நுரையோடு எழில்சிந்தும்
கடல்நீரைக் காண்பதினிது !
மரையோடு உறவாடி மணமோடு
இசைபாடும்
மலரூதி காண்பதினிது !
நரையோடு திரைசூழ்ந்த நல்லோர்தம் உளமார்ந்த
நல்லாசி காண்பதினிது !
@@@@@@@@@@@@
புதுப்புனல் காண்பதினிது ! - மலரும்
பூவிதழைக் காண்பதினிது !
பொன்னிலவைக் காண்பதினிது ! - மழலைப்
புன்னகையக் காண்பதினிது !
மதுக்குயில் காண்பதினிது ! – ஓடும்
மான்மறியைக் காண்பதினிது !
மாந்தளிரைக் காண்பதினிது ! – தோகை
மயிலினம் காண்பதினிது !
செம்பரிதி காண்பதினிது ! – துள்ளும்
செம்மீன்கள் காண்பதினிது !
செழிமுகில் காண்பதினிது ! – வானில்
செவ்வில்லைக் காண்பதினிது !
அம்புயத்தைக் காண்பதினிது ! – வீழும்
ஐந்தருவி காண்பதினிது !
ஆலயத்தை காண்பதினிது ! – மாணவர்கள்
அலர்முகம் காண்பதினிது !
@@@@@@@@@@@@
சுவையோங்கு வாழ்வுக்கு வித்திட்ட முன்னோர்க்குச் சொல்லுவேன்
நன்றியுரையை ! - கல்வி
அவையத்தில் எனையேற்றி ஒளிவீசச் செய்தோர்க்கு அணிவிப்பேன்
நன்றிமலரை !
@@@@@@@@@@@@
அறிவுக் கண்களைத் திறந்து வைத்தஎன் அரசே குருவே மிகநன்றி ! – நீவிர்
அளித்த கல்வியால் விளைந்த பயிரிது அய்யா குருவே மிகநன்றி !
செறிந்த கல்வியை அறிந்து சொரிந்தனை அருட்திரு அரசே மிகநன்றி ! – நீவிர்
செதுக்கிய சிலையிது கல்விக் கோயிலில் சீர்பெற வைத்தனை மிகநன்றி !
பறித்த மலர்களை உரித்த சுளைகளை அளித்து மகிழ்ந்த என் குருகுலமே ! –நிவிர்
பற்றிய கரமிது முற்றிய கனியிது அத்துணை பெருமையும் உமதருளே !
குறித்த இலக்கினை மறித்த தடைகளை உடைத்து எறிந்திட உரம் தந்தோய் ! –நீவிர்
கொடுத்த அறிவொளி விலக்கும் இருளினை துடைத்து எறிகுவன் மிகநன்றி !
@@@@@@@@@@@@
பாராட்டிச் சீராட்டிப் பாலூட்டி விழிகளில்
பாசத்தைப் பொழிந் தூற்றித் தந்தவர் – என்
பார்வைகு ஒளிதந்து நேசித்து அளிதந்து
பரிவோடு அமுதூட்டி வந்தவர் !
ஆராரோ இசைபாடி விழிமூடித் துயில்சூழ
ஆட்கொண்ட என்காவல் தெய்வதம் ! - என்
அகத்தோடு உறவாடி நிலைபெற்ற எனதன்னை
அகத்தோடு உறவாடி நிலைபெற்ற எனதன்னை
அ றச்செல்வி !
வணக்கமம்மா !
@@@@@@@@@@@
எளிய குடும்பம் ! உயர்ந்த பார்வை !
இன்சொல் ! வலிமை ! ஏர்மதிமை !
எங்கள் குலத்தின்
கலங்கரை விளக்கு !
எனதுதந்தை என்
ஒளிவிளக்கு !
குளிர்மதி நிலவின் அழகிய ஒளியே !
குழகன் எனதிரு விழிகளின் மணியே !
குருவே ! மறைந்தஎன் தந்தாய் ! வணக்கம் !
குழவியென் வாழ்வுநின் அருளே ! வணக்கம்
!
@@@@@@@@@@
அன்னைக்கும் தந்தைக்கும் நன்றி சொல்லல் முறையில்லை !
அவர்களது அன்புக்கு இணையெதுவும் ஈங்கில்லை !
என்றைக்கும் என்வாழ்வில் ஒளிவிளக்காய்த் திகழ்பவர்கள் !
இருவரையும் வணங்கியெந்தன் நன்றியுரை தொடர்கின்றேன் !
@@@@@@@@@@
எங்களது இல்லத்தின் இயக்குவிசை ! பொதிசுமந்து
எந்நாளும் எமைக்காக்கும் சுமைதாங்கி ! கற்பலகை !
தங்கமென யாம்மதிக்கும் தாம்பூலம் ! எனது அத்தை
தங்களுக்கு என்நன்றி
! வணங்குகிறேன் வாழ்த்திடுக !
@@@@@@@@@@
திக்கெதுவும் தெரியாமல் திகைத்திருந்த போழ்தினிலே
!
தெய்வம்போல் வந்துநின்று திசையறிந்து வழிகாட்டி
வக்கணையாய் ஆசிரியப் பயிற்சிபெற செய்தவர், நான்
வணங்கிடும் என் மாமனார்
வாலறிவ ! மிகநன்றி !
@@@@@@@@@@
வாழ்க்கைத் துணைஎனக்கு வரமாக அமைந்ததனால்
வாழ்வாங்கு வாழுகின்ற வாய்ப்பெனக்கு வந்ததுகாண் !
காழ்மரமாய் நின்றெனக்குக் கைகொடுத்த
திலகவதி
காரிகையாள் என்துணைக்குக் கழறுகிறேன் நனிநன்றி !
@@@@@@@@@@
உற்றார்க்கும், உறவினர்க்கும், ஊரார்க்கும், உளம்நிறைந்த
உவகையுடன் நலன்செய்த நண்பர்கட்கும், உடன்வதியும்
வெற்பனைய ஆசிரியப் பெருமக்கள், அலுவலர்கள்,
வீரியத்தை வித்தாக்கி விளைவிக்கும் மாணவர்கள்,
அற்புதமாய் ஆசிரியப் பணிப்படகில் பயணிக்க
ஆதரவாய் நின்றவர்கள், அனைவர்க்கும், ஈசனுக்கும்,
நெற்றுதமிழ்ச் சொல்லெடுத்து நேயமுடன் நானுரைப்பேன் !
நெஞ்சார்ந்த நன்றிஅய்யா ! நன்றி! நன்றி !! மிகு நன்றி !!!
வணக்கம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
-: அருஞ்சொற்பொருள்:-
நவையிருள் = கடுமையான இருள் இளந்தலையோர் = மாணவர்கள்
குவை = கிண்ணம் விதுப்பு = ஆசை
குதுகுதுப்பு = ஆவல் கொற்றவரின் = அரசினரின்
குலவு = கொண்டாட்டம் சதுப்பு நிலம் = சேற்று நிலம்
குடை தொடங்கி = ஆட்சி எல்லை தொடங்கி குறிஞ்சி = சிற்றூர்
தண்ணளி = கருணை மிடைப்பு = பணியேற்பு
இவண் = இங்கு நூற்றிருபான் = நூற்று இருபது
நுதற்கண்ணன் = சிவன் நுழைபுலம் = நுண்ணறிவு
கன்னல் = கரும்பு நுகர்ச்சி = அனுபவம்
விடலை = பள்ளிப் பிள்ளைகள் முருக்கிதழ் = சிவந்த உதடுகள்
வீணை பல = நல்ல மாணவர்கள் பலர் தேசுமிக்க = புகழ் மிக்க
வரை = மலை வாரி = மழை
மரை = தாமரை மலரூதி = வண்டு
புதுப்புனல் = புதிய வெள்ளம் மதுக்குயில் = இனிய குயில்
மான்மறி = மான்குட்டி செழிமுகில் = மழைமேகம்
சேய்வில் =
சிவந்த வானவில் அம்புயம்
= தாமரை
வக்கணை = ஒழுங்கு, சாதுரியம் காழ்மரம் = வைரம் பாய்ந்த மரம்
வெற்பு = மலை வீரியம் = தைரியம், வீரம்
ஈசன் = இறைவன் நெற்று = முற்றிய கனி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பாடல் படித்தேன் சத்தமாக !
பதிலளிநீக்குஅனைத்து உறவுகளுக்கும் புகழ்ச்சி பாடல் ஒத்திப் போவதாய் இருந்தது !
எனக்கு இப்பக்கத்தை விட்டு வெளியே வர மனமில்லை !
படிக்க படிக்க தேன் ஊறுகிறது !
தங்கள் கருத்துரை கதலியின் கனிந்த உள்ளீடா, பலாவின் பழுத்த சுளையா, மாவின் மணம் கமழும் கதுப்புகளா ? எத்துணை நேர்த்தியான கருத்துரை ! எத்துணை இனிமையான கருத்துரை ! மிக்க மகிழ்ச்சி ! மிக்க நன்றி ! கவிதை எண் (59) -ல் உள்ள என் மறுமொழியைப் பாருங்கள் ! முகநூலில் கணக்கு இருந்தால் அந்தப் பெயரைப் பதிவு செய்யுங்கள்; கணக்கு இல்லையேல், பெயரை மட்டும் பதிவு செய்யுங்கள் ! தங்கள் கருத்துரை இனி தங்கள் பெயருடன் இணைந்து வரட்டும் !
பதிலளிநீக்கு