கொத்து (01) மலர் (051)
-------------------------------------------------------------------------------------------------------------
நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்
மின்னிணைப்பியல் பிரிவு பயிற்சி
நிறைவு விழாவின் போது நான் ஆற்றிய
உரை !
(ஆண்டு 1975)
------------------------------------------------------------------------------------------------------------
தலைமைப் பொறுப்பேற்ற தகுதிசால் பெருந்தகையே !
தளிர்த்துவரும் செடிகளுக்கு நீர்வார்க்கும் பயிற்றுநர்காள் !
கலைமகள் அருள்பெற்ற கரம்பொலியும் நண்பர்களே !
கவின்சுவை உணவளித்த காஞ்சிவிளை அரும்புகளே !
விலைதந்து பெறற்கரிய வெண்ணிலவாம் பேழைகளே !
வெற்றித் திருவாசல் விரைந்தணுகும் வேங்கைகளே !
உலையிட்ட அரிசியென உள்மலர்ந்த வாலைகளே !
உரிமையுடன் அழைத்தோரே ! உளங்கனிந்த நல்வணக்கம் !
மின்னிணைப்பு இயல்பயின்ற மெய்யறிவுச் சிட்டுகளே !
மிடிமைத் தளையுடைத்து மேலெழுந்த மொட்டுகளே !
மென்கரத்தில் கலைச்செல்வம் துயில்கொள்ளும் ஏந்தல்களே !
மைபிடித்த கரமுடையோன் மனதார வாழ்த்துகிறேன் !
ஈராண்டுப் பயிற்சியிலே இறுதிநிலை எய்திவிட்டீர் !
இனிய எதிர்காலம் இமைவலிக்க நோக்குகிறீர் !
ஆராவமு தடைய அடையாளம் தேடுகிறீர் !
அருங்கலையின் துணைகொண்டு ஆல்போல வாழியவே !
இனியகன வெல்லாம் இலங்கட்டும் நனவாக !
எடுக்கின்ற நெய்யடிசில் எழில்பெறட்டும் அமுதாக !
கனிந்துவரும் எதிர்காலம் கைவரட்டும் களிப்பாக !
கைவினைஞர் நும்வாழ்வு கரைமலிக தீம்புனலாய் !
உழைப்புதான் நல்வாழ்வின் உருத்துலக்கும் கண்ணாடி
உந்தல் உணர்வொன்றே வளம்பெருக்கும் தேன்மாரி !
பிழைப்பின் கடைக்கால்தான் பீடுடைய நல்லறிவு !
பெருஞ்செல்வம் மண்டியிடும் பிழையில்லா இலக்குஎனில் !
இனிய சுவையுண்டி ஈங்களித்த மாணவர்காள் !
இன்றமிழில் கவிதையிலே அழைப்புவிட்ட இளவல்களே !
கனித்தமிழில் சொல்லெடுத்துக் களங்கமின்றி வாழ்த்துகிறேன் !
கலைஞர்களே வாழியநீர் ! கடல்மணியீர் என்நன்றி !
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------
ஐயா மேலே உள்ள தலைப்பில் பொறுப்பேற்று என்பதில் பெறுப்பேற்று என வந்துள்ளது
பதிலளிநீக்குஎழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது ! சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி !
பதிலளிநீக்கு