கொத்து (01) மலர் (023)
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நினைவிற்கு உளம் கேட்டார் ! மணம்
மிக்க மலர் தந்தேன் !
[மாணவர்களின் நெட்டெழுத்து ஏட்டில் எனது
சொல்லோவியம்]
(ஆண்டு 1974)
-----------------------------------------------------------------------
(ஒன்று)
இப்படித்தான் வாழவேண்டும் என்றநல்லோர்
இயல்பான வரையறைக்குக் கட்டுப்பட்டுச்
செப்பனிட்ட பாதையிலே தடம்மாறாமல்
சீராகச் செலுத்திடுக வாழ்க்கைத்தேரை !
ஒப்பரிய நற்றவனாம் அண்ணாபோல
ஒளிவிளக்காய் வாழ்ந்திடுக ! உலகம்போற்றும்
செப்புகலை யாவையும்நின் சிந்தைகொண்டு
செந்தமிழாம் உயிர்போற்றி நிலவாய்வாழ்க !
-------------------------------------------------------------------------------------------------------
(இரண்டு)
வெள்ளைச் சிறகடித்து விண்ணுயர வட்டமிடும் ,
வீட்டுப் புறாவொன்று விதிபிறழ்ந்து காக்கையுடன் ,
உள்ளத்து மயல்கொண்டு உறவாடப் புகுந்தக்கால் ,
ஒண்சிறகு நிறம்மாறா ! உள்ளந்தான் மாறிவிடும் !
---------------------------------------------------------------------------------------------------------
(மூன்று)
உலகத்து மாந்தரெலாம் உயிர்வாழ, நடமாட,
உதவுங்கால் தடுமாறின் ஒருநொடியே இடராகும் !
அலகொத்த வெண்பற்கள் அரண்மிகுந்த ஆழிதனில்,
அளைந்தாடும் நாவிடரின் அந்நொடியே கூற்றுவரும் !
-----------------------------------------------------------------------------------------------------------
(நான்கு)
வெள்ளிப் பணம்தனது விழிதிறந்து நோக்குங்கால்,
விசும்பனைய நீதியெலாம் வெண்மணலாய் ஆகிவிடும் !
கள்ளமனம் உடையோர்பால் காசுதான் மந்திரக்கோல் !
காசினியின் நியதியிது
! கருத்துடனே வாழ்ந்திடுக !
------------------------------------------------------------------------------------------------------------
(ஐந்து)
நலமுள்ள வாழ்விற்கு வித்து
! - நாட்டில்
நாலா யிரமென்று சொன்னவர் கூற்று
!
பொலமென்று எண்ணிநாம்
மின்னல் - நாடிப்
போகின்ற தடமாகும் பெறுவதோ இன்னல் !
------------------------------------------------------------------------------------------------------------
(ஆறு)
இல்லைக்கு இடமில்லா இல்லம் ! – என்றும்
இனிமையும் செல்வமும் பொலிவோடு துள்ளும் !
முல்லைப்பூ மணமாக வாழ - வாழ்க்கை
முனியாத பசியென்ற உணர்வொன்றே போதும் !
------------------------------------------------------------------------------------------------------------
(ஏழு)
பொய்யென்ற நிலையாமைப் போது ! - இந்தப்
புவிமீது மலராகும் ஒருகாலின் மீது !
மொய்வண்டு தேனுண்டு ஓடும் ! – உடன்
முகம்வாட மலரங்கு சருகாகி வாடும் !
மெய்யென்ற உயர்வான வித்து !
- கனியில்
மீளாது துயில்கொள்ளும் மதிப்புள்ள சொத்து !
பெய்கின்ற நீருண்டு மணலில் ! – இயற்கையின்
பிள்ளையாய் உருவாகி இருகாலில் வாழும் !
-----------------------------------------------------------------------------------------------------------
(எட்டு)
உழுதுண்டு வாழாத வாழ்க்கை ! - உண்ண
உப்பில்லா உணவாகும் உழவர்தம் வேட்கை !
பழுதென்று இகழாது போற்றி !- பழனம்
பயில்வோரே பெறுவார்கள் பார்மீது வெற்றி !
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
Very fine
பதிலளிநீக்குஆகா !
பதிலளிநீக்குஎத்துணை கருத்துச் செறிவு கொண்ட பாடல் !
படிக்கப் படிக்கச் சுவை மாறா
அமிழ்து !!