ஒச்சாத் தேவர் என்ற பெயரைக் கேட்டவுடன் எனக்குத்தான் எத்துணை வியப்பு !
என்
வாழ்க்கைப் பயணத்தின் போது புதுமையான பெயருடைய சில ஆட்களைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. அவர்களுள் ஒருவர் தான்
ஒச்சாத் தேவர். இந்தப் பெயர் புதுமையானது மட்டுமன்றி, பொருள் விளங்காததாகவும் இருந்தது. நீண்ட
கால ஆய்வுக்குப் பின்னர் இப்பெயரின் பொருள் விளங்கியது. எனது
ஆய்வு
முடிவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன் !
தமிழில் உகரச் சுட்டு முன்மைக் கருத்தை குறிக்கும். உகரத்தை ஒலிக்கும் போது
இதழ்கள் குவிந்து முன்னோக்குவதால், உகரச் சுட்டு, முதற்கண், பேசுபவரின் முன்னிடத்தைக் குறித்தது. [எ-டு] உவன் = எனக்கு முன் நிற்பவன் !
முன்மையைக் குறித்த உகரச் சுட்டு, காலப்
போக்கில் உயரக் கருத்தையும் குறிப்பதாயிற்று. உ - உங்கு - உக்கு - உக்கம் =
தலை ( உடலின் உயர்நிலையில் (உயரத்தில்) உள்ள
உறுப்பு.) உ - உங்கு - உக்கு -உச்சி - உச்சாணி
= எல்லாவற்றிலும் உயரமானது !
உயரக்
கருத்து ”மேல்” என்னும் கருத்தையும் குறிக்கும். உ - உங்கு - உப்பு - உம்பர் =
மேல், மேலே., மேலிடம். உ - உங்கு - உச்சி - உயர் - உவர் - உவச்சன்
= காளி தேவியை ஏத்திப் போற்றும் பூசாரி ( ஏத்துதல் = உயர்த்திப் போற்றுதல்)
காளியைப் போற்றிப் பூசனை
செய்யும் உவச்சன் என்னும் சொல் தான்
காலப்
போக்கில் ஒச்சன் ஆகிவிட்டது. ஒச்சன்
+ தேவர் = ஒச்சாத்தேவர். தமிழகத்தின் தென்
பகுதியில் ஒரு குலத்தாரிடையே ஒச்சாத் தேவன், ஒச்சாத்தேவர் என்னும் பெயர்கள் பரவலாகக் காணப்படுகின்றன !
-------------------------------------------------------------------------------------------------------
[ஆய்வுக்கு ஆதாரக் கருவளிப்பு ;
பாவாணரின் வேர்ச் சொற்
கட்டுரைகள் என்னும் நூல்]
-------------------------------------------------------------------------------------------------------
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{17-12-2018}
--------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .