name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புதிய தமிழ்ச் சொல் (17) துச்சில் (GUEST HOUSE )

திங்கள், டிசம்பர் 14, 2015

புதிய தமிழ்ச் சொல் (17) துச்சில் (GUEST HOUSE )

புதுச்சொல் புனைவோம் !


GUEST HOUSE = துச்சில்
-----------------------------------------------------------------------------------------------------
அரசின் உயர் அலுவலர்களோ, அமைச்சர்களோ அலுவல் முறையாக வெளியூர் செல்லும்போது தங்கி ஓய்வெடுப்பதற்கு வசதியாக, அரசின் சார்பில் விருந்தினர் மாளிகைகள் கட்டப்பட்டு இருப்பதை நீங்கள் அறிவீர்கள் !


இந்த ஓய்வு இல்லங்களை ஆங்கிலத்தில் பலவாறாக அழைக்கின்றனர். GUEST HOUSE, REST HOUSE, GUEST ROOM, INSPECTION BUNGLOW, TOURIST HOME, TOURIST BUNGLOW என ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன. இந்த இல்லங்களின் பயன் தான் என்ன ? தங்கி ஓய்வு எடுப்பது தானே ?

தங்கி ஓய்வு எடுக்கும் இல்லங்களுக்குத் தமிழில் “துச்சில்” என்ற சொல் முன்பு பயன்பாட்டில் இருந்தது !


புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு ? *
..................................(குறள்:340)

பிச்சை புக்குண்பான் பிளிறாமை முன்னினிதே

துச்சில் இருந்து துயர்கூறா மாண்பினிதே **
.................................(இனியவை நாற்பது:39)

பூதம் காக்கும் புகலருங் கடிநகர்
தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும்***
.................................(பட்டினப் பாலை:58)....

புற்றுவன் மீகமென்ப புகுமொதுக் கிடமே துச்சில்****
.........................(சூடாமணி நிகண்டு.)


===========================================================

• துச்சில் = தங்கி இருந்த (உயிருக்கு)
** துச்சில் = (சொந்த வீட்டில்) தங்கி இருந்து
*** துச்சில் = தங்குமிடத்தை (அடையும்)
**** துச்சில் = ஒதுக்கிடம்

===========================================================

“துச்சில்” என்னும் தமிழ்ச்சொல் இருக்கையில் நாம் “விருந்தினர் மாளிகை”, ”ஓய்வு இல்லம்”, ”விருந்தினர் அறை”, ”ஆய்வு மாளிகை”, “சுற்றுலா விடுதி”, “சுற்றுலா மாளிகை” என்றெல்லாம் ஆங்கிலச் சொற்களை மொழி பெயர்ப்புச் செய்து கொண்டிருக்கிறோம் !


“துச்சில்” என்ற சொல்லை அரியணையில் அமர்த்துவோம் .” விருந்தினர் மாளிகை” போன்ற நீண்ட வடிவம் உடைய சொற்களுக்கு ஓய்வு கொடுப்போம். முன்னே தலையாட்டிக் கொண்டு செல்லும் செம்மறி ஆட்டினைப் பின் தொடர்ந்து மற்ற ஆடுகளும் அதே போல் தலையாட்டிக் கொண்டு செல்வதைப் போல, நாமும் செல்ல வேண்டாமே !


===========================================================

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.

==========================================================



3 கருத்துகள்:

  1. மிகச் சிறந்த மொழியாக்கம் ! துச்சில் மிக அருமை !

    பதிலளிநீக்கு
  2. இலக்கியச் சான்றுகளை இயைபுடன் எடுத்துப் புதுச்சொல்லைப் புனைந்துள்ளீர்கள்! மிக அருமை!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .