தமிழில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு இளைய தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது !
சிந்தனை
தான் அறிவின் ஊற்றுக் கண் ! ஒரு மனிதன் சிந்திக்கச் சிந்திக்கத்
தான் அவனுக்குத் தெளிவு பிறக்கிறது ! சிந்திக்கத் தெரிந்த மனிதன்
அதைத் தன் வாழ்க்கை வளத்திற்கும் குமுகாய முன்னேற்றத்திற்கும் பயன் படுத்த வேண்டும்
!
மனிதனின்
வாழ்க்கைத் தேவைகள் அவன் வாழும் சூழல் மற்றும் செல்வ நிலைக்குத் தக்கபடி மாறுபடுகிறது. தெருவோரத்தில் வாழ்பவனுக்கு அடுத்த முதன்மையான தேவை குடியிருக்க ஒரு வீடு
! ஓலைக் குடிசையில் வாழ்பவனுக்கு அடுத்த முதன்மையான தேவை பிள்ளைகளுக்கு
இலவயக் கல்வி. இவ்வாறே ஒவ்வொரு மனிதனுக்கும் முதன்மைத் தேவைகளின்
பட்டியல் மாறு படுகிறது !
ஒவ்வொரு
மனிதனுக்கும் அடுத்த முதன்மைத் தேவை எது என்பதில் மாறுபாடு இருக்கலாம் ஆனால் அனைத்து
மனிதர்களுக்கும் மாறுபாடு இல்லாமல் அடிப்படைத் தேவையாக இருப்பது உண்பதற்கு உணவு ! தேவையான உடை, வசதியான உறையுள், அருகில் அமைந்துள்ள பள்ளி, பயணம் செய்யச் சீருந்து என
எத்துணை வசதிகளை ஒரு மனிதன் பெற்றிருந்தாலும் அடிப்படைத் தேவையான உணவு இல்லையேல்,
வாழ்க்கை என்பதற்குப் பொருளே இல்லாமல் போய்விடும் !
கல்வியும்
அப்படித்தான் ! இக்காலத்தில் சிறார்கள் மூன்றாம் அகவையிலிருந்தே
பள்ளிகளுக்கு அனுப்பப் படுகிறார்கள். மழலையர் பள்ளியிலிருந்து
பிறமொழிகள் கற்பிப்புத் தொடங்கி விடுகிறது. குறிப்பாக ஆங்கிலம்
கற்பிப்பது இங்கு தான் தொடங்குகிறது ! தமிழ்க் குழந்தைக்கு
“ஏ ஃபார் ஆப்பிள்”. “பி ஃபார் பால்”, “சி ஃபார் கேட்” என்று சொல்லிக் கொடுத்து குழந்தைகளின்
தொண்டைக்குள் ஆங்கிலம் வலுக் கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது !
மழலையர்
பள்ளியில் ஈராண்டுகள் கழிந்த பின்பு தொடக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார்கள். இங்கும் ஆங்கிலம் கற்பிப்புத் தொடர்கிறது. மேல் வகுப்புக்குச் செல்லச் செல்ல
கணிதம், அறிவியல், நிலவியல், சூழலியல், சமூகவியல் என்று கற்பிக்கப்படும் பாடங்கள்
அனைத்தும் ஆங்கில வழியில் ! ஆங்கில வழியில் அனைத்துப் பாடங்களையும்
கற்பித்தல் மட்டுமன்றி, இரண்டாவது மொழிப் பாடமாகத் தமிழைப் புறக்கணித்துவிட்டு இந்தி, பிரஞ்சு
போன்ற பிறமொழிகள் கற்பிப்பும் இங்கு தொடங்கிவிடுகிறது !
இந்தக்
கல்வித் திட்டத்தில் இரண்டு பெருங் குறைகள் இருக்கின்றன ! அவை, (01) தாய்மொழிக் கல்விப் புறக்கணிப்பு
(02) நல்லொழுக்கக் கல்வி இல்லாமை !
தமிழ்நாட்டுக்
குழந்தைகளுக்கு முதலில் தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டும் ! தமிழைத் தெளிவாகப் பேசவும், எழுதவும் கற்றுக் கொடுக்க
வேண்டும். இப்போது பின்பற்றப்படும் கல்வி முறையில் தாய்மொழிக்
கல்வி முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகிறது !
மழலையர்
பள்ளிகள் நடத்தப்படுவதே மாபெறும் தவறு ! பெற்றோருடன்,
உற்றார் உறவினர்களுடன் பேசிப் பழகி அன்பையும் அவர்கள் பால் ஈர்ப்பையும்
கற்றுக் கொள்ள வேண்டிய பருவத்தில் மழலையர் பள்ளி என்னும் சிறைகளுக்குள் இளங் குழந்தைகளை
அடைத்து வைப்பது குமுகாயக்
குற்றம் ! இந்த நிலையில் “அ, ஆ, இ, ஈ...” எனத் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டிய பருவத்தில் “ஏ பாஃர்
ஆப்பிள்” என்று ஆங்கிலம் புகட்டுவது அறநெறி வழுவிய செயலாகும்
!
கொலை
செய்வது குற்றம்; கொலைக்கு உடந்தையாக இருப்பதும் குற்றம் என்று சட்டம்
இயற்றத் தெரிந்தவர்களுக்கு தாய்மொழிக் கல்வியைச் சொல்லித் தராமல் மழலையர் பள்ளியுள்பட அனைத்துப் பள்ளிகளும்
புறக்கணித்து வருவது குற்றம் என்பதும் அதற்கு உடந்தையாக மாநில அரசு செயல்படுவது அதைவிடக் குற்றம்
என்பதும் ஏன் தெரியவில்லை ?
தமிழைப்
புறக்கணித்து விட்டு, ஆங்கிலத்தையும், இந்தியையும், பிரஞ்சையும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகள்,
சேவை நோக்கிலிருந்து விலகி வணிக நோக்கில் செயல்படுகின்றன என்பதை மாநில
அரசு ஏன் உணரவில்லை ? பிரஞ்சு படிக்கும் பள்ளிக் குழந்தைகள் எல்லாம்
வேலை வாய்ப்பிற்காக பிரான்சு நாட்டுக்கா செல்லப் போகிறார்கள் !
தமிழைத்
தள்ளி வைத்து விட்டு, இந்தியைக் கற்றுக் கொடுக்கும் பள்ளிகள்,
இந்தக் குழந்தைகளின் எதிர்கால வாழ்வுக்கு மாபெரும் தீங்கு செய்கின்றன
என்பதை மாநில அரசு ஏன் உணரவில்லை ? இந்தி கற்றுக் கொள்ளும் பிள்ளைகள்
எல்லாம் இந்தி பேசும் மாநிலங்களில் குடியேறித் தங்கள் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக்
கொள்ளவா போகிறார்களா ?
மக்களுக்கு
நல்ல வழிகாட்டியாக விளங்க வேண்டிய பள்ளிகளும், மாநில அரசும்
குழந்தைகளின் எதிர்கால வாழ்வுடன் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருக்கின்றன ! அறிவு என்னும் விளக்கை ஒளித்து வைத்துவிட்டு, அறியாமை
என்னும் இருளில் உழலும் பெற்றோர்கள், தம் குழந்தைகளின் எதிர்கால
வாழ்வுக்கு வலிவான அடித்தளத்தை இடுவதாக நினைத்துக்கொண்டு, அவர்களுக்குச்
சோளத்தட்டையைக் கொண்டு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள் !
தமிழில்
எழுதப் படிக்கத் தெரியாத ஒரு இளைய குமுகாயம் தமிழ் நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறது. நாடோடி இனத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் மொழியில் பேசுவார்கள்;
ஆனால் அவர்கள் பேச்சை எழுத்து வடிவில் எழுதத் தெரியாது, யாராவது
எழுதி இருந்தாலும் அதைப் படிக்கத் தெரியாது ! தமிழ் இனத்தை,
தமிழ் மக்களை, நாடோடிக் கும்பல்களாக உருமாற்றம்
செய்யும் பணியை, அனைத்துத் தனியார் பள்ளிகளும் செய்து வருகின்றன;
அதைத் தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது !
இரண்டாவதாக, இன்றைய கல்வித் திட்டத்தில் நல்லொழுக்கக் கல்விக்கு முற்றிலும் இடம் இல்லாமற்
போய்விட்டது ! மனிதனின் வாழ்க்கை, கணிதம்,
அறிவியல், சூழலியல் போன்ற பாடங்களைக் கற்றுக் கொள்வதால்
மட்டும் முழுமை அடைந்து விடுவதில்லை. நல்லொழுக்கத்தையும் அவன்
கற்றுக் கொண்டால் தான், அவனது வாழ்வு சிறக்கும் !
“திருடாதே”, பொய் சொல்லாதே”, மது
அருந்தாதே”, சூதாட்டத்தில் ஈடுபடாதே”, பிற
உயிர்களைத் துன்புறுத்தாதே”, “அனைவரிடமும் அன்பு செலுத்து”,
”பெரியோர்களை மதித்து ஒழுகு”’, என்பதையெல்லாம்
இளம் பருவத்திலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்களைப் பண்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு பள்ளிகளுக்குத் தான்
இருக்கிறது. !
பள்ளிகளின்
பாடத் திட்டத்தில் இதற்கான வகுப்புகள் அன்றாடம் ஒரு பாடவேளையாவது இருக்க வேண்டும். இதற்கானப் பாடப் புத்தகங்கள்
எழுதப்படவேண்டும். நல்லொழுக்கக் கல்வியைக்
கற்றுத் தருவதற்கென தனி ஆசிரியர் இருக்க வேண்டும். கல்லூரிப்படிப்பு
வரை நல்லொழுக்கக் கல்வி ஒரு பாடமாக வைக்கப்படவேண்டும் !
மூன்று
அகவையிலேயே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்ற பண்பாடு நிலவுகின்ற நம் நாட்டில், நல்லொழுக்கக் கல்வி, பெற்றோர்களால் கற்றுத் தரப்படும்
வாய்ப்பு அடைபட்டுப் போய்விட்டது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை
மறைந்துபோய், சிறகு முளைத்த கிளிகளாய் ஆடவர்கள் எல்லாம்,
திருமணமான பிறகு தனிக் குடித்தனம் செல்கின்ற நம் நாட்டில், இளங்குழந்தைகள், தாத்தா பாட்டியிடமிருந்து சுவையான கதைகள்
மூலம் நல்லொழுக்கக் கல்வியைப் பெறுகின்ற
வாய்ப்பு சிறிது கூட இல்லாமற் போய்விட்டது
!
பணத்தை
மட்டுமே தம் இலக்காகக் கொண்டு நடைபெற்று வரும் தனியார் பள்ளிகள் நல்லொழுக்கக் கல்வியைப் பற்றிச் சிந்திக்க மறுக்கின்றன.
தனியார் பள்ளிகளுக்கும் பாடத் திட்டத்தை வகுத்துக் கொடுத்து,
அவர்களை ஒழுங்கு படுத்திக் கண்காணிக்க வேண்டிய மாநில அரசும் தன் கடமையிலிருந்து
வழுவி நிற்கிறது !
“அரசு” என்றால் என்ன என்பதற்கு இலக்கணம் தெரிந்தவர்கள்
ஆட்சிக்கு வரும் வரை இத்தகைய தாழ்வு நிலை தமிழகத்தை விட்டு நீங்கப் போவதில்லை
! தமிழ்க் குழந்தைகளின் எதிர்காலமும் ஒளிபெறப் போவதில்லை ! தமிழினம் நாடோடிக் கும்பல்களின் நிலைக்குத் தள்ளப் படுவதிலிருந்தும் மீளப்
போவதில்லை !
சிந்தனை
செய்யுங்கள், மக்களே, சிந்தனை செய்யுங்கள்
! சிந்தித்தால்தான் தெளிவு பிறக்கும் !
-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் +
இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),14]
{28-06-2020}
-------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .