name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வரலாறு பேசுகிறது (24) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் !

ஞாயிறு, பிப்ரவரி 09, 2020

வரலாறு பேசுகிறது (24) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர்


தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.


தோற்றம்:
சென்னை நகரின் ஒரு பகுதியான சிந்தாதிரிப் பேட்டையில், 1901 –ஆம் ஆண்டு, சனவரித் திங்கள் 8 –ஆம் நாள்  மீனாட்சி சுந்தரம் பிறந்தார். தந்தையின்பெயர், பொன்னுசாமி கிராமணியார்; தாயார் பெயர் இணையத்தில் காணக் கிடைக்கவில்லைபொன்னுசாமிக் கிராமணியாருக்குத் தமிழ் மீது இருந்த பற்றின் காரணமாக மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நினைவாக அவர் பெயரைத் தன் மகனுக்குச் சூட்டினார் !
கல்வி:
சென்னையிலேயே தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி இரண்டையும் நிறைவு செய்த மீனாட்சி சுந்தரம், பச்சையப்பன் கல்லூரியில் கலையியல் வாலை (B.A) படிப்பை முடித்தார். பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டவியல் வாலை (B.L) படிப்பை 1922 –ஆம் ஆண்டு நிறைவு செய்தார். அடுத்த ஆண்டே சென்னை உயர் முறை மன்றத்தில் (HIGH COURT) வழக்குரைஞராகத் தன்னைப் பதிவு செய்துகொண்டார். இதே ஆண்டில் கலையியல் மேதை (M.A) பட்டமும்பெற்றார் !
பொதுப் பணி:
பொதுப் பணியில் நாட்டம் கொண்டிருந்த மீனாட்சி சுந்தரம் 1924 –ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இஃதன்றி பெருவங்கத் தொழிலாளர்கள் சங்கத் தலைவராகவும் (ALUMINIUM INDUSTRIAL WORKERS UNION LEADER) 1925 ஆம் ஆண்டு தேர்வு செய்யப் பெற்றுப் பணியாற்றினார் !
தமிழார்வம்:
மீனாட்சி சுந்தரத்திற்கு இருந்த கல்வி ஆர்வம் காரணமாக வரலாறு, பொருளியல் ஆகிய துறைகளிலும் கலையியல் மேதைப் (M.A) பட்டங்களைப் பெற்றார்அதுவுமல்லாமல் தமிழில் கீழ்த் திசை மொழிகளுக்கான வாலைப் பட்டமும் (B.O.L). மேதை பட்டமும் (M.O.L) அடுத்த சில ஆண்டுகளிலேயே அடுத்தடுத்துப் பெற்றார் !
சிறை வாழ்வு:
நாட்டு விடுதலையில் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக, 1941 ஆம் ஆண்டு மீனாட்சி சுந்தரம் மறியல் போராட்டத்தில் கலநது கொண்டு சிறை சென்றார். சிறையிலிருந்து மீண்ட பிறகும் அவர் இந்தியப் பேராயக் கட்சியில் ஈடுபாடு கொண்டு உழைத்து வந்தார்.
பேராசிரியர்:
இவரது தமிழ்ப் புலமையைக் கண்ட அண்ணாமலை அரசர் அவர்கள் இவரை 1944 –ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக அமர்வு செய்தார். 1945 –ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அனைத்திந்திய வரலாற்று மாநாட்டில், புதிதாகத் திராவிடப் பிரிவு அமைக்கப்பட்டபோது, அதற்குத் தெ.பொ.மீ தலைவராக்கப்பட்டார். பிறகு, மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத் துறைத் தலைமைப் பேராசிரியராகப் 1958 –ஆம் ஆண்டு  பொறுப்பேற்றார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா சென்று அங்குள்ள சிகாகோ பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசியராகப் பணியாற்றினார்.
துணைவேந்தர்:
மீனாட்சி  சுந்தரனாரின் தமிழ்ப் புலமையும், ஆளுமைத் திறனும் அவரை மதுரைப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்கச் செய்தது. 1966 முதல் 1971 வரை ஐந்தாண்டுகள் அவர் இப்பணியில் தொடர்ந்தார்.
பிற பணிப் பொறுப்புகள்:
துணைவேந்தர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் திருப்பதி, திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பு ஆய்வளராக 1973, 1974 –ஆம் ஆண்டுகளில் பணி புரிந்தார் !
பன்மொழிப் புலவர்:
தெ.பொ.மீ அவர்கள் தமிழ் மட்டுமல்லாது, ஆங்கிலம், சமற்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரஞ்சு, செருமானியம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற அறிஞராகத் திகழ்ந்தார்.
படைப்புகள்:
தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார். வள்ளுவரும் மகளிரும், அன்பு முடி, கால்டுவெல் ஒப்பிலக்கணம், தமிழா நினைத்துப் பார், நீங்களும் சுவையுங்கள், வள்ளுவர் கண்ட நாடும் காமமும், பிறந்தது எப்படியோ ?, கானல்வரி, தமிழ் மணம், வாழும் கலை, தமிழ் மொழி வரலாறு, பத்துப் பாட்டு ஆய்வு, மொழியியல் விளையாட்டுகள் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார் !
சிறப்புகள்:
இவருக்குத் தருமபுரம் திருமடத்தின் தலைவர்பல்கலைச் செல்வர்என்ற பட்டத்தையும், குன்றக்குடித் திருமடத்தின் தலைவரான  அடிகளார் பன்மொழிப் புலவர்என்னும் பட்டத்தையும் அளித்துப் பெருமைப் படுத்தினர்.  இவையன்றிப் பல்வேறு அமைப்புகள் இவருக்கு பெருந்தமிழ் மணி, நடமாடும் பல்கலைக் கழகம், குருதேவர் ஆகிய பட்டங்கலையும் அளித்துப் பெருமைப் படுத்தின. அத்துடன் தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதினையும், ஒன்றிய அரசு  “பத்மபூசன்விருதினையும் அளித்துப் பெருமைப் படுத்தின !
தெ.பொ.மீ.யின் நம்பிக்கை:
தமிழன் வாழ்ந்தாலன்றித் தமிழ் வாழ முடியாது என்று தெ.பொ.மீ உறுதியாக நம்பினார். தமிழனை விட்டுவிட்டுத் தமிழினைக் காணும் முயற்சி வீண், வீண், வீணென்று அவர் மும்முறை அழுத்திக் கூறினார். எத்துறையினர் ஆயினும் தமிழ்ப் பற்று கொண்டு போற்றுவாராயின் தமிழ் உலக மொழியாகுமென்று அவர் நம்பினார்.
தெ.பொ.மீ.புனைந்த புதுச் சொற்கள்:
ஆளுமை (PERSONALITY), எதிர்நிலைத் தலைவன் (VILLAIN), உயர்தானிச் செம்மை (CLASSICAL), நனவோடை (STREAM OF CONSCIOUSNESS), இருப்பு நிலைக் கொள்கை (EXISTENTIALISM) செய்யுணிலை அறம்(POETIC JUSTICE) நாடகக் கீழறைப் பொருள் (DRAMATIC IRONY) முதலிய சொல்லாக்கங்களைப் படைத்த பெருமை அவாருக்கு உண்டு.
மறைவு:
இத்தகைய ஆற்றல்கள் பல மிக்க பேரறிஞரான தெ.பொ.மீ அவர்கள் 27-08-1980 அன்று, தமது 79 ஆம் அகவையில் பூதவுடலை நீத்துப் புகழுடம்பு எய்தினார்பன்மொழிப் புலவர்கள் என்ற வரிசையில் தெ.பொ.மீ தான் ஈற்றாய் நின்ற மனிதர் போலும் !
முடிவுரை:
தமிழ் மீது பற்றுக் கொண்ட முந்தைய தலைமுறையினர், தமிழை உயர்நிலைக்குக் கொண்டு சென்றார்கள்; தாமும் உலகம் போற்றும் மாமனிதர்களாக   வாழ்க்கையில் உயர்ந்து நின்றார்கள்; அவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டு தெ.பொ.மீ. இப்போதைய தலைமுறையினர், பொருள் புரியாத ஒற்றை வரியை மடக்கி மடக்கி எழுதிப்புதுக் கவிதைஎன்றும்ஐக்கூ கவிதைஎன்றும் வெளியிட்டு, தனக்குத் தானே கவிஞர் பட்டம் சூட்டிக் கொள்ளும் மனப் பாங்கினை நினைத்துப் பார்த்தால், தமிழுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என்று நம்மால் நம்ப முடியவில்லை !
------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)24]

{07-02-2020}
--------------------------------------------------------------------------------------------------------------







 

 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற


 கட்டுரை !














-------------------------------------------------------------------------------------------------------------




















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .