name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வரலாறு பேசுகிறது (27) க.ப.அறவாணன் !

சனி, பிப்ரவரி 15, 2020

வரலாறு பேசுகிறது (27) க.ப.அறவாணன் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


..அறவாணன்


தோற்றம்:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கடலங்குடி என்னும் ஊரில் 1941 –ஆம் ஆண்டு, ஆகத்து, 09 –ஆம் நாள் பிறந்தவர் அறவாணன். தந்தையார் பெயர் பழநியப்பன். தாயார் தங்கபாப்பு அம்மையார். இளமையில் பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் கிருட்டிணமூர்த்தி. சிலர் இவரை அருணாச்சலம் என்றும் அழைத்தனர். பின்னாளில், இவர் தன் இயற்பெயரை அறவாணன் என்று மாற்றி அமைத்துக் கொண்டார் !

கல்வி:

கடலங்குடியில் 5 ஆம் வகுப்பு வரைப் பயின்ற அறவாணன், பின்பு விட்டுணுபுரம் என்னும் ஊரில் பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்துத் தேர்ச்சி பெற்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டப் படிப்பில் சேர்ந்த அறவாணன் 1959 –ஆம் ஆண்டு புலவர் பட்டப் படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றார். அங்கேயே மேற்படிப்பை மேற்கொண்டு 1963 –ஆம் ஆண்டு கீழைமொழியியல் வாலை (B.O.L) பட்டமும் பெற்றார் ! கலையியல் மேதை (M.A) பட்டத்தினைக் கேரளப் பல்கலைகத்தின் வாயிலாகப் பெற்றார் ! பின்பு சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார் !

திருமணம்:

அறவாணன் 21-04-1969 அன்று தாயம்மாள் அவர்களை மணந்து கொண்டார். தாயம்மாள் பின்னாளில் பேராசிரியராகப் பணி புரிந்து ஓய்வுபெற்ற தமிழறிஞராகத் திகழ்ந்தார்.  இவ்விணையருக்கு அறிவாளன், அருட்செங்கோர் என இரு ஆண் மகவினர் பிறந்தனர் 1

ஆசிரியப் பணி:

பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரியில், அறவாணன் தமிழ் விரிவுரையாளாராகப் பணியில் சேர்ந்தார். சிலகாலம் இங்கு பணிபுரிந்த பின், நெல்லை மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வராகப் பணியேற்றார். இதையடுத்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1970 –ஆம் ஆண்டு பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார் !

அயல்நாட்டுப் பணி :

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக 7 ஆண்டுகள் பணி புரிந்த அறவாணன், பின்னர் ஆப்பிரிக்கப் பெருநிலத்தில்செனகல்நாட்டில் உள்ளதக்கார்பல்கலைக் கழகத்தில் மானிடவியல் ஆய்வாளராக 1977 முதல் 1982 வரை ஐந்தாண்டுகள் பணிபுரிந்து தாய்நாடு திரும்பினார் !

மீண்டும் தமிழ்ப் பணி:

ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்த பின் சென்னையில் உள்ள இலயோலா (LAYOLA) கல்லூரியில் 1982 –இல் பணியில் சேர்ந்த அறவாணன், அங்கு 1987 வரைப் பேராசிரியராகப் பணி புரிந்தார். அடுத்து 1987 முதல் புதுவைப் பல்கலைக் கழகத்தில் தனது பணியைத் தொடர்ந்தார்.

துணைவேந்தர்:

அறவாணன் அவர்களின் தமிழ்ப் புலமையையும், ஆளுமைத் திறனையும் கண்ட திரு.மு..அரசு, அவரை நெல்லை மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணை வேந்தராக 1998 –ஆம் ஆண்டு  பணியில் அமர்த்தியது. மூன்றாண்டுகள் இப்பதவியில் திறம்படப் பணியாற்றிய அறவாணன், 2001 –ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் !

பிற பணிகள்:

இவர் துணைவேந்தராகப் பணியாற்றிய காலத்தில், சமுதாயவியல் கல்லூரிகளை நிறுவி, அடித்தட்டு நிலையில் உள்ள மாணவர்கள் வாழ்வில் ஒளிபெறச் செய்தார். இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் என்ற அமைப்பு தளர்ச்சியுற்றிருந்த நிலையில் அதனை மிகப் பெரிய நிலைக்கு உயர்த்தி தமிழாய்வுகள் சிறக்க வழி செய்தார் ! அறிவியல் தமிழியம், தேடல், முடியும், கொங்கு உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார் !

தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினராக இருந்த  இவர்  சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு, படைப்பு இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளுக்குத் தன்னுடைய  வளமான பங்களிப்பினை நல்கியும் வந்திருக்கிறார் !

படைப்புகள்:

தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்”, “சைனர்களின் (JAINS) தமிழிலக்கண நன்கொடை”, “தொல்காப்பியக் களஞ்சியம்”, “கவிதை - கிழக்கும் மேற்கும்”, “அற்றைய நாள் காதலும் வீரமும்”, “தமிழரின் தாயகம்”, “தமிழ்ச் சமுதாய வரலாறு”, “தமிழ் மக்கள் வரலாறு” “அற இலக்கியக் களஞ்சியம் என்பன இவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்க நூல்களாகும். இவரின் படைப்புகளில் "அவள் அவன் அது", "தென்னைமரத் தீவுகளும் தீவோர மனிதர்களும்", "செதுக்காத சிற்பங்கள்", "சொல்ல முடிந்த சோகங்கள்", ”நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள்”, ”கண்ணீரில் மிதக்கும் கதைகள்”, ஆகியவை அனைவரது கருத்தையும் கவர்ந்த பிற நூல்களாகும் ! இவ்வாறு அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் படைத்து நமக்கு அளித்துள்ளார் !

விருது:

தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, சிறந்த பேராசிரியருக்கான விருது (1986), ஆகியவற்றைப் பெற்றுள்ள இவர் சி.பா.ஆதித்தனாரின் இலக்கியப்  பரிசையும் வென்றுள்ளார் !

மறைவு:

சிறந்த தமிழறிஞராகவும், ஆளுமை மிக்கத் துணைவேந்தராகவும் இலங்கி, தமிழ் கூறும் நல்லுலகிற்கு மதிப்பு மிக்க நூல்களையும் காணிக்கையாக அளித்துள்ள கடலங்குடி பழநியப்பன் அறவாணன் அவர்கள் 2018 –ஆம் ஆண்டு, திசம்பர்த் திங்கள் 23 –ஆம் நாள் தமிழன்னையின் மலரடிகளில் அடைக்கலமானார். அவரது பூதவுடல் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், புகழுடல் தமிழர் நெஞ்சங்களை விட்டு என்றும் மறையாது !

முடிவுரை:

19 –ஆம் நூற்றாண்டும், 20 –ஆம் நூற்றாண்டும் ஆற்றல் மிக்கத் தமிழறிஞர்கள் நூற்றுக் கணக்கானோரை உருவாக்கித் தமிழகத்திற்கு அளித்திருந்தது. அவர்கள் அனைவருமே கோபுர விளக்குகளாகத் திகழ்ந்து வந்தார்கள். இந்த விளக்குகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அணைந்து  விட்டன. அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இக்காலத் தமிழறிஞர்களுக்குச் சற்றும்  மனமில்லை. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தங்கள் கடமை முடிந்து விட்டது என்று சாய்வு நாற்காலியில் ஓய்வெடுத்து வருகிறர்கள். தமிழன்னையின் துன்பக் கண்ணீரைத் துடைக்க முன்வருவார் யாருமில்லை !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, சுறவம் (தை),29]
{12-02-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
            
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .