மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !
கரந்தை உமாமகேசுவரன் பிள்ளை
தோற்றம்:
தஞ்சை நகரின் ஒரு பகுதியாகத்
திகழும் கருந்திட்டைக்குடி என்னும் கரந்தையில் 1883 –ஆம் ஆண்டு
மே மாதம் 7 –ஆம் நாள் உமாமகேசுவரன் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் வேம்புப் பிள்ளை. தாயார் காமாட்சி
அம்மையார் ! இவர் தனது 12 –ஆம் அகவையில்
தாய், தந்தை இருவரையுமே இழந்து சிற்றன்னை பெரிய நாயகத்தம்மையார்
அரவணைப்பில் வளர்ந்து வந்தார் !
கல்வி:
தனது தொடக்கக் கல்வியைக்
கரந்தையிலும், உயர்கல்வியைத் தஞ்சையிலும் பெற்ற உமாமகேசுவரன்,
தஞ்சை தூய பேதுரு கல்லூரியில் கலையியல் வாலைப் படிப்பை (B.A)
நிறைவு செய்து பட்டம் பெற்றார். பின்னர் தஞ்சை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் (CLERK) பணியில் சேர்ந்தார்.
சில காலம் சென்றபின் சென்னை,
சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்று சட்டவியல் வாலைப் பட்டம்
(B.L) பெற்றார் !
வழக்குரைஞர்:
சட்டவியல் பட்டம் பெற்ற
பின் தஞ்சை, கே.சீனிவாசம் பிள்ளை என்னும்
புகழ் பெற்ற வழக்குரைஞரிடம் இளநிலை வழக்குரைஞராகச் சேர்ந்து (JUNIOR
ADVOCATE) பயிற்சி பெறலானார்.
சில ஆண்டுகளில் தனித்து, தொழில் செய்யத் தொடங்கினார்.
தஞ்சை மாவட்டம் முழுவதும் இவர் பெயர் பரவும் அளவுக்குப் புகழ் பெற்ற
வழக்குரைஞராகத் திகழலானார் ! ஏழைகளிடம் பணம் பெறாமல் வழக்கு நடத்தி
வெற்றி தேடித் தந்தார். இவரது திறமையைப் பார்த்து, அன்றைய அரசு இவரைக் ”கூடுதல் அரசு வழக்குரைஞராக”
அமர்வு செய்து பெருமைப்படுத்தியது !
திருமணம்:
1903 ஆம் ஆண்டு,
இவர் தனது 25 –ஆம் அகவையில் உலகநாயகி என்னும் அம்மையாரை
மணந்து கொண்டார். இவ்விணையருக்கு பஞ்சாபாகேசன், மாணிக்கவாசகம், சிங்காரவேலு என்னும் ஆண்மக்கள் மூவர்
பிறந்தனர் ! மூன்றாவது பிள்ளை பிறந்த பின்பு உலகநாயகி அம்மையார்
காலமானார் !
குமுகாயப் பணி:
தஞ்சை வட்டக் கழகத்தின்
தலைவராக
(TALUK BOARD PRESIDENT) இவர் 1920 –ஆம் ஆண்டு
பொறுப்பேற்று, பல ஊர்களுக்குச் சாலை வசதிகளை ஏற்படுத்தினார்.,
ஆற்றைக் கடந்து செல்லப் பாலங்கள் கட்டித் தந்தார். பல ஊர்களில்
பள்ளிக் கூட வசதிகளை ஏற்படுத்தினார். கூட்டுறவு நிலவள வங்கி ஒன்றையும்,
கூட்டுறவு அச்சகம் ஒன்றையும் 1926-27 ஆம் ஆண்டுகளில்
ஏற்படுத்தினார் !
தமிழ்ச் சங்கம்:
1911 –ஆம் ஆண்டு
மே மாதம் 14 –ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன்
தலைவராகப் பொறுப்பேற்றார். இன்று ஆயிரக் கணக்கான நூல்களைப் பெற்று
விளங்கும் கரந்தைத் தமிழ்ச் சங்க நூல் நிலையம் அவர் முயற்சியால் உருவான அறிவுக் கருவூலம்
ஆகும். அன்றே தொழிற்கல்வியின் தேவையை உணர்ந்த உமாமகேசுவரனார்,
தமிழ்ச் சங்கம் சார்பில், 6-10-1916 அன்று செந்தமிழ்க்
கைத் தொழிற் கல்லூரியைத் தொடங்கினார்.
சங்கத்தின் சார்பில் 1928-29 ஆம் ஆண்டுகளில்
கட்டணமில்லா மருத்துவமனை தொடங்கப்பட்டது. கரந்தைத் தமிழ்ச் சங்கம்
தொடங்கப் பெற்ற நான்காவது ஆண்டிலேயே “தமிழ்ப் பொழில்”
என்னும் திங்களிதழ் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பல அரிய தமிழ் நூல்கள் பதிப்பித்து வெளியிடப்பட்டன
!
தமிழ்ப் பொழில் திங்களிதழ்:
மதுரைத்
தமிழ்ச் சாங்கம் சார்பில் “செந்தமிழ்” என்னும் திங்களிதழும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
சார்பில் “செந்தமிழ்ச் செல்வி” என்னும்
திங்களிதழும் நடத்தப் பெற்று வந்த நிலையில், கரந்தைத் தமிழ்ச் சங்கம் சார்பில்
“தமிழ்ப் பொழில்” திங்களிதழும் தொடங்கப்
பெற்றிருந்தது. இவ்விதழைச் செம்மையாக நடத்திட, உமாமகேசுவரனார் சிறப்பு முயற்சிகளை எடுத்துக் கொண்டார் !
தமிழ்ப்பொழில் இதழின் அட்டைப்படம், உள்ளடக்கம் இவ்விரண்டும்
மிகச் சிறப்பாக உமா மகேசுவரனார் அவர்களால் உருவாக்கப்பட்டது. தூய தமிழ்ச் சொற்களை
அவ்விதழில் பயன்படுத்தினார். இதழாசிரியர் என்பதை "பொழிற்றொண்டர்"
என்றும், தனியிதழ் "மலர்" என்றும், பன்னிரு மலர்கள் கொண்ட ஓராண்டுத் தொகுப்பை "துணர்" (பூங்கொத்து)
என்றும், உறுப்பினர் கட்டணம் என்பதை கையொப்பத் தொகை என்றும்,
விலாசம் என்பதை உறையுள் என்றும் ஆங்கிலத்தில் வி.பி.பி. என்பதை ‘விலை கொளும் அஞ்சல்’ என்றும் அச்சிட்டு வெளியிட்டார்
!
அந்த இதழில் தமிழறிஞர் சதாசிவ பண்டாரத் தாருக்கு ஊக்கமளிக்கும் வகையில்
அவர் எழுதிய தமிழ் மன்னர்கள் வரலாறு மற்றும் தமிழ் கல்வெட்டுச் சான்று
குறித்து கட்டுரைகள் பலவற்றையும் வெளியிட்டார் !
தமிழ்த் தொண்டுகள்:
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
தலைவராக உமாமகேசுவரனார் பொறுப்பேற்ற பின் அவர் பல பணிகளை நிறைவேற்றியிருக்கிறார். அவற்றுள் ஒரு சில வருமாறு:-
(01) நீராருங்
கடலுடுத்த என்னும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாக
அறிமுகப் படுத்தினார்.
(02) வடமொழி
மட்டுமே கற்பிக்கப் பட்டு வந்த திருவையாற்றுக் கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்து, கல்லூரியின் பெயரையும் அரசர் கல்லூரி என மாற்றச் செய்தார்.
(03) தமிழ்
மொழியினைச் செம்மொழியாக (CLASSICAL LANGUAGE) அறிவிக்க வேண்டும்
என்று 1919 –ஆம் ஆண்டிலேயே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தீர்மானம்
நிறைவேற்றினார்.
(04) தமிழுக்குத்
தனியாக ஒரு பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1922 –ஆம் ஆண்டில்
தமிழ்ச் சங்கத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
(05) சென்னை
அரசு,
பள்ளிகளில் இந்தியைச் சொல்லித் தரவேண்டும் என்று 1937 –ஆம் ஆண்டில் உத்தரவிட்டபோது அதை ஏற்க மறுத்து, தமிழ்ச்
சங்கத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதோடு, களத்தில் இந்தி
எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினார்.
(06) ஸ்ரீமான், ஸ்ரீமதி என்னும் வடசொற்களுக்கு மாற்றாகத் திருமகன், திருவாட்டி
என்னும் சொற்களை அறிமுகப்படுத்திப் பரப்புரை செய்தார்.
(07) யாழ்நூல், நக்கீரர், கபிலர், தொல்காப்பியம்
போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.
அரசியல் பணி:
நீதிக் கட்சியில் (JUSTICE
PARTY) இணைந்து, தஞ்சை மாட்டம் முழுதும்,
கட்சிப் பணி ஆற்றினார். ஏழை எளிய மக்களுக்காக பள்ளிகளைத்
தொடங்கச் செய்தார். ஊர்ப்புற மேம்பாட்டுக்காக, அரசின் மூலம் பல திட்டங்களை நிறைவேற்றச் செய்தார் ! காந்தியடிகள்
தஞ்சை வந்தபோது “உக்கடை மாளிகை” என்னும்
வளமனையில் தங்கியிருந்தார். அவரை உமாமகேசுவரனார் சந்தித்து பார்ப்பனர்கள்,
பார்ப்பனர் அல்லாதோருக்கு இழைத்து வரும் தீங்குகள் குறித்து விரிவாகச்
சொல்லி முறையிட்டார் !
தமிழவேள்:
கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழா 15-4-1938 அன்று நடைபெற்றது. இந்த விழாவின் போது தான் உமா மகேசுவரனாருக்கு 'தமிழ வேள்' என்னும் பட்டத்தை நாவலர் சோமசுந்தர
பாரதியார் வழங்கினார். அது முதல் 'தமிழவேள்' உமா மகேசு வரனார் என்றே அனைவரும் அன்போடு அழைக்கத் தொடங்கினர் !
மறைவு:
கல்கத்தாவில் இரவீந்திரநாத் தாகூர் நடத்திவரும் சாந்தி நிகேதனைப் போல்
கரந்தை தமிழ்ச்சங்கம் மாற வேண்டுமென்று உமா மகேசுவரனார் விரும்பினார். அதனைப்
பார்வையிட்டுக் கல்கத்தாவை விட்டு திரும்புகையில் உடல்நலம் குன்றியே காணப்பட்டார்.
பிறகு அயோத்தி நகர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள்
கைவிட்ட நிலையில் 9.5.1941 அன்று உமாமகேசுவரனார்
தமது 58 –ஆம் அகவையில் இவ்வுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு
எய்தினார் !
முடிவுரை:
மதுரை நகரில் நான்காம் தமிழ்ச் சங்கத்தினை 1901 –ஆம்
ஆண்டு உருவாக்கினார், பாண்டித்துரைத் தேவர். கரந்தை நகரில் 5 –ஆம் தமிழ்ச்
சங்கத்தை 1911 -ஆம் ஆண்டு உருவாக்கினார் உமா மகேசுவரன்
பிள்ளை, தன் தமையனார் இராதாகிருட்டிண பிள்ளையுடன் சேர்ந்து !
இந்தத் தமிழ்ச் சங்கக் கல்லூரி பின்னாளில் ஔவை துரைசாமியார்,
வெள்ளை வாரணனார் போன்ற பல தமிழறிஞர்களை உருவாக்கிய கல்விக்
கோயிலாகத் திகழ்ந்தது என்பது வரலாற்று உண்மை !
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:
2051, சுறவம் (தை),28]
{11-02-2020}
------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .