name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வரலாறு பேசுகிறது (16) ந.மு.வேங்கடசாமி நாட்டார் !

வியாழன், ஜனவரி 09, 2020

வரலாறு பேசுகிறது (16) ந.மு.வேங்கடசாமி நாட்டார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


.மு.வேங்கடசாமி நாட்டார் !


தோற்றம்:

தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவிரி என்னும் சிற்றூரில் 1884 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் நாள் பிறந்தவர் வேங்கடசாமி நாட்டார். இளமையில் இவருக்கு இடப்பட்ட பெயர் சிவப்பிரகாசம். இப்பெயர் பிறகு வேங்கடசாமி என மாற்றிக் கொள்ளப்பட்டது இவரது தந்தையார் பெயர் முத்துச்சாமி நாட்டார். தாயார் தைலம்மாள். திருவையாறிலிருந்து திருக்காட்டுப் பள்ளி வழியாக கல்லணை செல்லும் வழியில் காவிரிக் கரை ஓரமாக அமைந்துள்ளது நடுக்காவிரி !

தொடக்கக் கல்வி:

அக்கால வழக்கப் படி நடுக்காவிரியில் இருந்த திண்ணைப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை வேங்கடசாமி படித்தார். பின்னர் தம் தந்தையார் மூலம் ஆத்திச் சூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, ஆகிய நூல்களையும் அந்தாதி, கலம்பகம் வகை நூல்களையும் படித்தார் ! சாவித்திரி வெண்பா என்னும் நூலை இயற்றிய ஐ.சாமிநாத முதலியாரின் தூண்டுதலால், ஆசிரியர் துணையின்றி, தானே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார் !

புலவர் படிப்பு:

மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஓர் உறுப்பான செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் நுழைவுத் தேர்வு” (1905), ”இளம் புலவர்தேர்வு (1906), ”புலவர் தேர்வு” (1907) ஆகியவற்றில் முதல் மாணாக்கராகத் தேர்வு பெற்றார் ! ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டிய இப்புலவர் படிப்பை மூன்றே ஆண்டுகளில் முடித்துச் சாதனை நிகழ்த்தியவர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் !

தமிழாசிரியர் பணி:

வேங்கடசாமி நாட்டார் தமது 24 ஆம் அகவையில் திருச்சி எசு.பி.சி. கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியில்  அமர்ந்தார். பின்பு கோவையில் தூய மைக்கேல் உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டு காலம் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இதை அடுத்து, திருச்சி பிசப் ஈபர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக 24 ஆண்டுகள் பணி புரிந்தார் !

பல்கலைக் கழகப் பேராசிரியர்:

திருச்சிக்குப் பின் சிதம்பரம் வந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக ஏழாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார் ! பணி ஓய்வுக்குப் பின் தஞ்சாவூர் கரந்தையில் உள்ள புலவர் கல்லூரியில்  (சம்பளம் பெறாமல்)  மதிப்பியல் முதல்வராக நான்கு ஆண்டுகள் பணியாற்றித் தமிழ்த் தொண்டாற்றினார் !

பாரதியார் சந்திப்பு:

வேங்கடசாமி நாட்டார் அவர்களின் 28 ஆவது அகவையில் (1912 ஆம் ஆண்டு) பாரதியார் அவர்கள் நாட்டாரின் வீட்டிற்கு வருகை தந்து, சிலப்பதிகாரக் காவியத்தின் சில பகுதிகள் குறித்து தனக்கிருந்த ஐயங்களைத் தெரிவித்து, விளக்கம் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பினார் ! தொல்காப்பியத்திலும் சில விளக்கங்களைக் கேட்டறிந்தார் !

சிறந்த நூலாசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்த வேங்கடசாமி நாட்டார், பெரும்புலவர் மு.இராகவையங்கார்  எழுதியவேளிர் வரலாறுஎன்னும் நூலில் இருந்த பிழைகளைச் சுட்டிக் காட்டித் தமிழறிஞர்களை ஏற்கச் செய்தார் !

படைப்புகள்:

வேளிர் வரலாறு, நக்கீரர், கபிலர், கள்ளர் சரித்திரம், கண்ணகி வரலாறும் -  கற்பும் மாண்பும், சோழர் சரித்திரம், கட்டுரைத் திரட்டு, காந்தியடிகள் நெஞ்சு விடு தூது ஆகிய நூல்களை வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ளார்.

உரை எழுதிய நூல்கள்:

எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான அகநானூறுக்கு  உரை எழுதியுள்ளார். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார்.  சிலப்பதிகாரம், மணிமேகலைக் காப்பியங்களுக்கு உரை எழுதியுள்ளார் !

வரலாற்று நூல்:

கள்ளர் சரித்திரம் என்பது ஒரு சமூகம் சார்ந்த நூலாகத் தோன்றினாலும், தமிழக மக்களைப் பற்றி விவரிக்கும் வரலாற்று நூல் என்பதே உண்மை ! இந்நூலைத் தமிழ்த் தாத்தா  .வே.சா அவர்கள் பாராட்டியதுடன், பல்கலைக் கழகங்களில் பாடநூலாக வைக்கத் தக்க தகுதி பெற்றது என்று பாராட்டி இருக்கிறார் !

பிற நூல்கள்:

அதிவீரராம பாண்டியன் இயற்றிய வெற்றிவேற்கை, ஔவையாரின் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி,  உலகநாதனார் இயற்றிய உலகநீதி, சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நன்னெறி ஆகிய நூல்களுக்கு சொற்பொருளும், பொழிப்புரையும் எழுதி தமிழ் மக்களுக்கு அறவழி காட்டி அருளியுள்ளார் !

நாவலர் பட்டம்:

வேங்கடசாமி நாட்டார் தமிழ்ச் சொற்பொழிவில் வல்லவர். அவரது சொற்பொழிவு ஆற்றல் கண்டு வியந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 1940 ஆம் ஆண்டு நடத்திய மாநாட்டில், அவருக்குநாவலர்என்னும் பட்டத்தை வழங்கிப் பெருமைபடுத்தியது !

தமிழ்ப் பல்கலைக் கழகக் கோரிக்கை:

தமிழ், தமிழர் வளர்ச்சி குறித்து, எண்பது ஆண்டுகளுக்கு முன்னரே, சிந்தித்த  வேங்கடசாமி நாட்டார், தமிழுக்கெனத் தனிப் பல்கலைக் கழகம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்துக் குரல் கொடுத்து வந்தார் !

மொழிக் கலப்பு விரும்பாதவர்:

வேற்று மொழிச் சொற்கள் தமிழில் கலப்பதை நாட்டார் அவர்கள் விரும்பியதில்லை. புதிய சொற்களைக் காலம்தோறும் படைத்து தமிழுக்கு வளம் சேர்க்க வேண்டும் என்பதை அவர் அழுத்தமாக வலியுறுத்தி வந்துள்ளார். தமிழுக்குப் பல்லாற்றானும் வளம் சேர்த்துத் தொண்டாற்றி வந்துள்ள நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்களுக்கு மணி விழா நடத்த தமிழன்பர்கள் ப்லர் ஒருங்கிணைந்து குழு அமைத்துச் செயலாற்றி வந்தனர்.

மறைவு:

1944 ஆம் ஆண்டு, மே மாதம் 8 ஆம் நாள் மணிவிழாவை நடத்துவதென்றும் முடிவு செய்திருந்தனர். ஆனால் நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் 40 நாள்கள் முன்னதாக 1944 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 ஆம் நாளன்று  அவரது  அறுபதாம் அகவையில்  தம் பூதவுடலை நீங்கிப் புகழுடம்பு எய்தினார் !

முடிவுரை:

தமிழ்த் தாய் தலைசிறந்த ஒரு தவப் புதல்வனை இழந்துவிட்டாள்; தமிழுலகம் ஒரு வரலாற்று அறிஞரை, ஆராய்ச்சி அறிஞரை இழந்து தவிக்கிறது ! தமிழர்கள் தம்மை வழிநடத்திச் செல்லத் தகுதிபெற்ற மனிதர்கள் இல்லாமல், மடிமைக்கு இடம் தந்து மயங்கிக் கிடக்கிறார்கள் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி..2050:சிலை (மார்கழி)22]
{07-01-2020}
------------------------------------------------------------------------------------------------------------
     
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளயிடப் பெற்ற 
கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .