name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: தமிழ் (25) தமிழில் உரையாடுதல் தமிழர்களின் கடமை !

வியாழன், ஜனவரி 09, 2020

தமிழ் (25) தமிழில் உரையாடுதல் தமிழர்களின் கடமை !

அன்னைத் தமிழிருக்க அயல்மொழி நமக்கெதற்கு ?


எழிலரசி: மலர் ! வா ! வா ! நலமாக இருக்கிறாயா ? கடைத் தெருவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன் .என்னுடன் வருகிறாயா ? ஒருதுயிலி” (NIGHTY) வாங்கி வர வேண்டும் ! எனதுபேடுருளியிலேயே (MPOED) சென்று வரலாம் !

மலர்மதி: சரி எழிலரசி ! வருகிறேன் ! ”பேடுருளிஎதற்கு? எனது பாவையூர்தியில் (SCOOTY) சென்று வரலாமே ?

எழிலரசி: சரி ! அப்படியே செய்வோம் ! வண்டிக்குக் காப்புறுதிச் சான்று (INSURANCE CERTIFICATE) கைவயம் வைத்திருக்கிறாயா ? நீ உகையுரிமம் (DRIVING LICENCE) வைத்திருக்கிறாயா ?

மலர்மதி: இரண்டுமே இருக்கின்றன ! கவலைப் படாதே ! தலைச் சீரா (HELMET) மட்டும் உங்கள் வீட்டிலிருந்து இரண்டு எடுத்துக் கொள் !

எழிலரசியின் அப்பா: எழில் ! திரும்பி வரும்போது கபிலர் தெருவுக்குச் சென்று தாங்குதளம் கட்டுநரைப் (CENTERING FITTER) பார்த்து, நாளை வந்து என்னைப் பார்க்கச் சொல் !

எழிலரசி: சரி அப்பா ! நாங்கள் சென்று வருகிறோம் !

மலர்மதி: எழில் ! உன் தந்தை தாங்கு தளம் கட்டுநர் என்றாரே  ! அப்படியென்றால் யார் அவர் ?

எழிலரசி: மலர் ! புதிதாக  வீடு கட்டும் போது, கற்காரைக் கலவையைக் கொட்டிக் கூரை அமைப்பதற்கு வாய்ப்பாகப் பலகைகளையும், முட்டுக் கம்புகளையும் கொண்டு கிடைமட்டத் தளம் அமைக்கிறாரே அவர் தான் தாங்குதளக் கட்டுநர் (CENTERING FITTER). ஆங்கிலத்தில் CENTERING என்றால் தமிழில் தாங்குதளம் என்று பொருள் !

மலர்மதி: நல்ல தமிழ்ச் சொல்லாக இருக்கிறதே ! உங்கள் வீட்டில் தமிழ்ச் சொற்கள் நிரம்பவும் புழங்குமோ ?

எழிலரசி: ஆமாம் ! என் பெயர் உனக்குத் தெரியும் ! தந்தையின் பெயர் அருள்நம்பி ! தாயார் இளம்பிறை ! தம்பி இளமுருகு ! எங்கள் வீட்டில் ஆங்கிலச் சொல் ஒன்று கூடப் புழங்கக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டுள்ளோம் !

மலர்மதி: நல்ல முடிவு ! இங்கிலாந்து மக்களோ, அமெரிக்க மக்களோ தமிழில் பேசுவதில்லை ? தமிழக மக்கள் தான் சுரணை கெட்டுப் போய், ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் ! தெரிந்த தமிழ்ச் சொற்களைக் கூடத் தவிர்த்துவிட்டு ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள் !

எழிலரசி: ஆமாம் மலர் ! “இன்று மாலை வருகிறேன் என்பதை விடுத்து இன்னிக்கு ஈவ்னிங் வர்ரேன்என்பது என்ன ஞாயம் ? இந்த அழகில்தமிழ் தான் எனக்கு மதர் டங்என்று பீற்றல் வேறு !

மலர்மதி: சரி விடு எழில் ! உங்கள் வீட்டுக்குளிர்ப்பேழையில் (REFRIGERATOR) பனிக்கட்டி நீக்கமைப்பு (DEFROST CONTROL) இருக்கிறதா ? எங்கள் பேழையில் அஃது இல்லை !

எழிலரசி: அப்படியா ! வேறு பேழை வாங்குவது தானே !

மலர்மதி: வாங்க வேண்டும் ! எந்த நிறுவனத்தின்  வனைவை (MAKE) வாங்கலாம் ?

எழிலரசி: குறிஞ்சி நிறுவன வனைவை (MAKE) வாங்குங்கள் ! நன்றாக இருக்கும் !

மலர்மதி: சரி எழில் ! பேசிக்கொண்டே கடைத் தெருவுக்கு வந்துவிட்டோம் ! எந்தத் துணிக் கடைக்குச் செல்லலாம் ?

எழிலரசி: அழகேசன்  அணிய ஆடையகத்திற்குச் (READY MADE STORE) செல்வோம் ! அங்கு துயிலிமட்டுமே விற்கப்படுகிறது ! ஞாயமான விலையில் தரமான துயிலிகள் கிடைக்கின்றன !

[இருவரும் கடைக்குள் செல்கின்றனர்]

மலர்மதி: ஐயா ! எனக்குத் துயிலி (NIGHTY) ஒன்று வேண்டும் ! நான்கைந்து துயிலிகளை எடுத்துப் போடுங்கள் !

அழகேசன்: தருகிறேன் அம்மணி ! தம்பி ! ஆதவனிடம் சென்று இரண்டு செவ்விளநீர் சீவி விரைவாக வாங்கி வா !

எழிலரசி: நான் தான் துயிலி வாங்க வந்தேன் ! நீயும் வாங்கப் போகிறாயா ?

மலர்மதி: ஆமாம் எழில் ! ”துயிலிஎன்ற பெயரைக் கேட்டவுடனேயே, ஏதோவொரு இனம்புரியாத உந்துதல் என்னுள் எழுந்து விட்டது ! அழகிய தமிழ்ச் சொல் துயிலி !

[”துயிலிகளைப் பார்வையிட்டு எதைத் தேர்வு செய்யலாம் என்று சில நிமிடங்கள் குழம்பி நிற்கின்றனர்]

அழகேசன்: தம்பி ! இளநீர் வாங்கி வந்து விட்டாயா ? உறிஞ்சு குழலைப் (STRAW) போட்டு அம்மணிகளிடம் கொடு !

மலர்மதி: ஐயா ! அணிய ஆடையகத்தில் பல்லவி (PRESSURE COOKER), வறுகலன் (FRYING PAN), உண்கலம் (MEALS PLATE), நீர்க்குவளை (TUMBLER), சேமச் செப்பு (THERMOS FLASK), எல்லாம் வைத்திருக்கிறீர்களே ? அவை எதற்கு ?

அழகேசன்: அம்மணி ! ஒளியுருக்கில் (STAINLESS STEEL) செய்த இன்னும் பல அடுகலன்களும் (UTENSILS) உள்ளே இருக்கின்றன ! எங்களிடம்துயிலிவாங்கும் ஒவ்வொருவருடைய பெயரையும் பதிவு செய்து கொள்வோம். மாத இறுதியில் குலுக்கல் முறையில் 10 பேரைத் தேர்வு செய்து இந்தப் பொருள்களைப் பரிசாக வழங்குவோம் !

எழிலரசி: ஐயா ! இப்படிப் பரிசு தருவதற்கு உங்களுக்குக் கட்டுப்படி ஆகிறதா ?

அழகேசன்: அம்மணி ! அழகிய தமிழில்துயிலிஎன்று கேட்டு வாங்குவோருக்கு அளிக்கும் இந்தப் பரிசு, அவர்களுக்கு அளிக்கும் பரிசு அன்று ! தமிழுக்கு அளிக்கும் பரிசு  ! தமிழனாகப் பிறந்து, தமிழையே பேசி, வாழ்ந்து வரும் நான் என் அன்னைத் தமிழுக்கு இதைக் கூடச் செய்யவில்லை எனில், நான் தமிழன் என்று சொல்லிக் கொள்ளத் தகுதி இல்லாதவன் !

[எழிலரசி, மலர்மதி இருவரும் திகைத்து நிற்கின்றனர். சுரணையுள்ள தமிழர்கள் இன்னும் இருக்கவே செய்கின்றனர்]

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.;2050,நளி (கார்த்திகை) 27]
{13-12-2019}

---------------------------------------------------------------------------------------------------------
   
  தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற 
கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .