உழைப்புச் சுரண்டல் !
தனியார் பொறியியல் கல்லூரிகள், பேராசிரியர்களிடம் வாங்கி வைத்திருக்கும் அனைத்து அசல் சான்றிதழ்களையும் அவர்களிடமே
திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் டிசம்பர் 4 – 2018 அன்று சுற்றறிக்கை அனுப்பியது !
இதை எதிர்த்து உயர்நீதி
மன்றத்தில் வழக்குத் தொடர்ந்த தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்
செயலாளர்,
நீதிமன்றத்தில் வழக்குரைஞர் மூலம் வாதிடுகையில் “அசல் சான்றிதழ்களைத் திரும்ப ஒப்படைத்தால், கல்வியாண்டின்
இடையில் ஆசிரியர்கள் வேறு கல்லூரிக்கு மாறிவிடக் கூடும். இதனால்,
மாணவர்களின் கல்வி பாதிக்கும்.” என்று முறையிட்டார் !
வழக்கை விசாரித்த உயர்நீதி
மன்றம் அண்ணா பல்கலைக் கழக உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. - பிப்ரவரி 07 - 2019 , நாளிதழ்ச் செய்தி !
தனியாரினால் நடத்தப்படும்
கலைக் கல்லூரியானாலும் சரி, பொறியியல் கல்லூரியானாலும் சரி, பேராசிரியர்களிடம் அவர்களது
கல்விச் சான்றுகளை ஏன் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் ?
அரசினர் கலைக் கல்லூரிகளிலோ, பொறியியற் கல்லூரிகளிலோ, அல்லது வேறு பயிலகங்களிலோ பணியில்
சேரும் பேராசிரியர் போன்றோரிடம், அவர்களது கல்விச் சான்றுகளை
வாங்கி வைத்துக் கொள்வது இல்லை !
அரசு அலுவலகங்களில் பணியில்
சேரும் எந்த அலுவலரிடமும், கல்விச் சான்றுகளை வாங்கி வைத்துக்
கொள்வது இல்லை. பயிற்சி முடித்துப் பணியில் சேரும் காவல் துறை
அலுவலர்களிடமோ, துணை ஆட்சியர், மாவட்டப்
பதிவாளர், கூட்டுறவுத் துணைப் பதிவாளர் போன்ற அலுவலர்களிடமோ கல்விச் சான்றுகளை வாங்கி வைத்துக்
கொள்வது இல்லை !
தனியார் கல்வி நிறுவனங்கள்
மட்டும் பேராசிரியர்களிடம் கல்விச் சான்றுகளை வாங்கி வைத்துக் கொள்வது ஏன் ? இந்தக் கேள்விக்கான விடை மிக எளிது தான் ! கொத்தடிமைகள்
வேறு எங்கும் இல்லை; தனியார் கல்வி நிறுவனங்களில் மட்டுமே இருக்கின்றனர்
!
ஒரு பேராசிரியருக்குத்
தனியார் பொறியியல் கல்லூரியில் தொகுப்பூதியமாக உருபா 10 ஆயிரம் தந்தால், அத்தொகை அவரது குடும்பத்தின் வாழ்க்கைச்
செலவுக்குப் போதுமா ? தனியார் கல்வி நிறுவனத்தில் ஞாயம் இல்லாத
சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, காலமெல்லாம் அங்கு ஊழியம் புரிய
வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன அறம் ? வேறு கல்லூரியில் உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைத்தால்
அங்கு செல்வது இயல்புதானே !
உருபா 10 ஆயிரம் அளவுக்குக் குறைந்த சம்பளம் தந்துவிட்டு அவரது கல்விச் சான்றுகளைத்
தங்களிடம் வாங்கி வைத்துக் கொள்வது கொத்தடிமைத் தனம் அன்றி வேறென்ன ? குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும்
பேராசிரியர், கல்வியாண்டின் இடையில் வேறு கல்லூரிக்குச் சென்றுவிட்டால்
தங்கள் கல்லூரி மாணவர்களின் படிப்புக் கெட்டுப் போகுமாம். மாணவர்கள்
மீது என்னே அக்கறை !
இந்திராகாந்தி இருந்தபோது
கொத்தடிமை மீட்பு புதிய கதிப்பில் நடந்தது. தமிழ்நாடெங்கும்
தனியார் கல்வி நிறுவனங்களில் குறைந்த சம்பளத்திற்குக் கொத்தடிமைகளாக வேலை பார்க்கும்
ஆசிரியர்களை மீட்பதற்கு இன்னொரு இந்திரா காந்தி எப்போது வரப் போகிறார் ?
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2050, சுறவம், 26.]
{09-02-2019)
----------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில்
வெளியிடப் பெற்ற
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .