தண்ணீரின்றி எந்தப் பொருளையும் ஆக்க முடியாது !
----------------------------------------------------------------------------
நன்றி : திரு.ப. திருமலை, கட்டுரையாளர், தினமலர்.
------------------------------------------------------------------------------------------------------
செவ்வாய்க்கு இராக்கெட் அனுப்பும் நாடுகளுக்கு ஜட்டி
தயாரிக்கத் தெரியாதா ?
------------------------------------------------------------------------------------------------------
மழை நீர்
தெரியும்.
மறை நீர் தெரியுமா ? இன்றைக்கு நிலத்தடி நீர் குறித்துப்
பேசும் நேரத்தில் மறை நீர் குறித்தும் அறிந்திருக்க வேண்டியதும் பேச வேண்டியதும் அவசியம்
ஆகிறது !
அது என்ன
மறை நீர்
?
எந்த
ஒரு பொருளையும் தண்ணீர் இல்லாமல் / தண்ணீரின் உதவி இல்லாமல்
உற்பத்தி செய்யவோ / உருவாக்கவோ முடியாது. அப்படி
உற்பத்தி செய்வதற்கு செலவாகும் நீர் தான் மறை நீர் !
மறை நீர்
என்பது தண்ணீர் பொருளாதாரம். இதைக் கண்டு பிடித்தவர் இங்கிலாந்தைச்
சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன் !
”கோதுமையை விளைவிக்கத் தண்ணீர் தேவை. அது விளைந்தவுடன்,
அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால்
அந்த நீர் கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது. இதுவே மறைநீர் ” என்பது மறைநீருக்கு அவர் தரும் விளக்கம் !
எளிதாகச்
சொல்ல வேண்டுமானால், ஒரு கிலோ அரிசியை அதிகபட்சம் ரூ
60-க்கு வாங்குவோம். ஆனால் ஒரு கிலோ அரிசிக்குரிய
நெல் உற்பத்தி செய்ய 2500 முதல் 3000 லிட்டர்
நீர் தேவைப்படும் !
அதே நேரத்தில், அரிசியின் விலையுடன், அதை உருவாக்குவதற்குத் தேவைப்பட்ட
நீரின் விலை கணக்கிடப்படுவதில்லை. அப்படிக் கணக்கிட்டுப் பார்த்தால்,
ஒரு லிட்டர் நீர் ஒரு ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், ஒரு கிலோ அரிசி ரூ 2500-க்கு விற்க வேண்டும் !
இப்படி
ஒரு பொருள் உற்பத்திக்குள் சத்தமில்லாமல் செலவாகிக் கொண்டிருக்கிறது அல்லது சுரண்டப்படுகிறது
நீர் !
உலகின்
பல முக்கிய நாடுகளுக்கு தானியங்கி ஊர்திகளையும், அவற்றுக்கான
உதிரி உறுப்புகளையும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்கிறோம். தானியங்கள் ஏற்றுமதியியில் முதலிடத்தில்
இருக்கிறோம். துணி ஏற்றுமதியில் 63 % சந்தை
நம்மிடம் உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு 2016-17 -ஆம் நிதியாண்டில் 200 பில்லியன் டாலர்கள் ஆகும் !
ஏற்றுமதி.
ஏன் உலக
நாடுகள் இங்கிருந்து தானியங்கள், மகிழுந்துகள், துணிப் பொருள்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டும் ? அங்கெல்லாம் இல்லாத தொழில் நுட்பமா, அங்கு இல்லாத வளங்களா,
அங்கு இல்லாத இயந்திரங்களா ? யோசித்திருப்போமா
?
நிறுவன
விவகாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வணிகப் போட்டி ஆணைக்குழு , சில ஆண்டுகளில் ஏற்றுமதியில் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளும் என்கிறது.
நாம் மகிழ்கிறோம். இது முழுக்க முழுக்க மகிழ்ச்சிக்குரிய
செய்தி அல்ல !
நாம்
புத்திசாலிகளா ?
பன்னாட்டு
நிறுவனங்கள் சென்னையில் ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கில் மகிழுந்துகளைத் தயாரித்துக்
குவிக்கின்றன. அவர்கள் நாடுகளில் மகிழுந்துகளை உற்பத்தி செய்யப்
போதிய இடம், மின்சாரம் இருந்தும் நம் நாட்டில் ஏன் தொழிற்சாலைகளைத்
துவங்குகின்றன ?
இங்கு
மனித ஆற்றல் எளிதாக, குறைந்த விலையில் கிடைக்கிறது.
மேலும் வரைமுறையின்றி நீர் எடுத்துக் கொள்ளலாம். 1100 கிலோ எடை கொண்ட ஒரு மகிழுந்து உற்பத்திக்கான மறைநீர்த் தேவை 4 இலட்சம்
லிட்டர்கள். இவ்வளவு நீரை எந்த நாட்டுக்காரன் இலவசமாகக் கொடுப்பான்
? நம்மைத் தவிர !
திருப்பூரிலிருந்து
ஜட்டியும் பனியனும், பனியனுக்கான நூலும் வெளி நாடுகளுக்கு
டன் கணக்கில் ஏற்றுமதி ஆகின்றன. செவ்வாய்க்கு இராக்கெட் அனுப்பும்
வல்லரசுக்களுக்கு ஜட்டி தயாரிக்கத் தெரியாதா ? தெரியும்;
ஆனால் தயாரிக்க மாட்டார்கள் ! காரணம் ஒரு ஜட்டியைத்
தயாரிக்க தேவையான மறைநீர் 2700 லிட்டர். அது போல் ஒரு உரப்புத் துணிக் காற்சராய் (ஜீன்ஸ் பேண்ட்)
தயாரிக்கத் தேவைப்படும் மறைநீர் 10,000 லிட்டர்.
இதனால்தான், நிலத்தடி நீர் வரைமுறையின்றி உறிஞ்சப்பட்டு,
திருப்பூரில் நீர் பற்றாக் குறை இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அன்னியச் செலாவணி கிடைக்கிறது என நாம் பெருமைப்பட்டுக் கொள்வோம்
!
குளிர்பான
நிறுவனத்திற்குத் தாமிரபரணித் தண்ணீர் தாரை வார்க்கப்பட்டது. ஒரு லிட்டர் குளிர்பானம் உற்பத்தி
செய்யத் தேவையான மறைநீர் 56 லிட்டர். அதுபோல்
பன்னாட்டுக்காகித நிறுவனம் பவானி கரையோரத்தில். அங்கு ஒரு ஏ-4
காகித்த்தை உற்பத்தி செய்யத் தேவையான மறைநீர் 10 லிட்டர் !
,
இந்தியாவில்
இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருள்களில் 72 % வேலூர்
மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்திலிருந்து
ஆண்டுக்கு சராசரியாக 8,500 கோடிக்கு தோல் பொருள்கள் ஏற்றுமதி
ஆகின்றன !
ஒரு
எருமை மாட்டின் ஆயுள் கால மறைநீர்த் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ எடையுள்ள ஒரு
எருமையிலிருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும். ஒரு கிலோ தோலைப்
பதனிட்டு அதனை செருப்பாகவோ, கைப் பையாகவோ தயாரிக்க
17,000 லிட்டர் நீர் தேவை !
சுவீடன்
நாட்டில் சாயத் தொழிற்சாலைகளோ, தோல் பதனிடும்
தொழிற்சாலைகளோ கிடையாது. அங்கு எருமை மாடுகள் இல்லை என்றோ
தண்ணீர் கிடையாது என்றோ அர்த்தமல்ல !
நாமக்கல்லில்
ஒரு நாளைக்கு 3 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினமும் வளைகுடா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இதன்மூலம் 4.8 கோடி டாலர்கள் அன்னியச் செலாவணி கிடைக்கிறது. 60 கிராம் எடை கொண்ட ஒரு முட்டை
உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறைநீர் தேவை. ஆனால் முட்டை ஒன்றின் விலை 5 ரூபாய்க்கும் குறைவு !
மறைநீர்
ஓர் தத்துவம்
வளர்ந்த
நாடுகளில் இன்றைக்கு மறைநீர் வணிகம் என்பது ஒரு பொருளாதாரத் தத்துவம்
ஆகிவிட்டது. அதாவது
ஒரு மெட்ரிக் டன் கோதுமை இறக்குமதி செய்யும் போது, அந்த நாடு
1600 கன மீட்டர் அளவுக்கு தனது நாட்டின் நீரைச் சேமித்துக்
கொள்கிறது என்கிறார் பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன் !
சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள், நீரின்
தேவையையும், பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வு செய்து அதற்கு ஏற்ப
உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கைகளை
வகுக்கின்றன !
சீனாவின்
பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி
உற்பத்திக்கான நீர்த் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்குக் கெடுபிடிகள்
அதிகம். ஆனால்
தாராளமாக இறக்குமதி செய்து கொள்ளலாம் !
ஒரு
கிலோ ஆரஞ்சுக்கான மறைநீர்த் தேவை 560 லிட்டர். சொட்டு நீர்ப் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும்
ஏற்றுமதிக்கு எளிதாக அனுமதி கிடைப்பதில்லை !
சவுதி
அரேபியா
90-களின் தொடக்கத்தில் அன்னியச் செலாவணி ஈட்ட ஏராளமான கோதுமையை
ஏற்றுமதி செய்தது. இதனால்
10 ஆண்டுகளில் சவுதி 6 பில்லியன் கன மீட்டர் நீர் பற்றாக் குறை கொண்ட
நாடாகிவிட்டது. விழித்துக்
கொண்ட அந்த நாடு, இப்போது கோதுமையை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது !
அமெரிக்கா
உள்ளிட்ட வல்லரசு நாடுகள் எதற்காக மென்பொருள் நிறுவனங்களை இங்கே (இந்தியாவில்) வைத்து நம் ஆட்களுக்குச் சம்பளம்
கொடுத்து வருகின்றன ? இங்கே கூலி குறைவு என்பது மட்டுமல்ல,
சென்னையில் ஒரு நபருக்கு பி.பி.ஓ
(P.P.O) பணியைத் தருவதன் மூலம் அந்த நாடுகள் சேமித்துக் கொள்ளும்
மறை நீரின் அளவு நாளொன்றுக்கு 7,500 லிட்டர் !
இந்த
நாடுகளெல்லாம் ஒவ்வொரு பொருளுக்குமான மறைநீர்த் தேவையைக் கணக்கிட்டு, அதன் படி ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கைகளை வகுத்துக் கொண்டுள்ளன !
நம்
நிலை என்ன ?
மறைநீருக்கு
மதிப்புக் கொடுத்து இருந்தால் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய விவசாயி
என்றோ இடம் பிடித்திருப்பான். வருங்காலத்
தலைமுறையினருக்கு நன்னீரைப் பாதுகாத்து சேமித்து வைப்பதே நம்முன் நிற்கும் பெரும்
கடமை. அதற்கு மறைநீர் குறித்தான புரிதல் வேண்டும். மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் !
இன்றைய
நிலையில் இந்தியாவில் 20 கோடி மக்களுக்கு நல்ல
குடிநீர் கிடைக்க வில்லை. அடுத்த 25 ஆண்டுகளில்,
இப்போதைய அளவை விட 57 % நீர் கூடுதலாகத்
தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டு இருக்கிறது. நமது நீர் வளம்
சுரண்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் !
இப்படி
முட்டையில் தொடங்கி, மகிழுந்து வரைக்கும்
ஒவ்வொன்றுக்கும் கணக்குப் பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்ன ஆவது ? என நீங்கள் கோபப் படலாம். ஆனால் நம் விளை நிலங்களும்,
அதில் உள்ள நீரும் சுரண்டப்படுவதைப் பற்றியும், அவை கைவிட்டுப் போவதைப் பற்றியும் அக்கறை கொள்ளாமல் மகிழுந்து
(CAR) தொழிற்சாலைகளும்,
எழினி (MOBILE PHONE) தொழிற்சாலைகளும் துவங்குவது
தான் வளர்ச்சியா ? அவர்கள் நாம் வளத்தைச் சுரண்டிவிட்டு
வெளியேறிவிட்டால், பின்னர் ஏதுமில்லாது நிற்பது நீங்களும்
நானும் தான் !
உற்பத்தி
செய்ய வேண்டாம் எனச் சொல்லவில்லை; கண்ணை மூடிக் கொண்டு பொத்தாம்
பொதுவாக உற்பத்தியோ, ஏற்றுமதியோ செய்ய வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்.
”தேவையில்லாமல் ஏற்றுமதி இறக்குமதி செய்ய வேண்டாம்” என்கிறார்கள் மறைநீர்ப் பொருளாதார நிபுணர்கள் !
தமிழகம்
ஒரு நீர்ப் பற்றாக்குறை மாநிலம். அப்படி இருக்கையில்,
நாம் மறைநீர் மூலம் தண்ணீரை வீணாக்க வேண்டுமா ? ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன் ? ஆனால் அந்த ஆலை ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளும் நீரின் அளவு எவ்வளவு என்று
உங்களுக்குத் தெரியுமா ?
நெல்லையில்
உள்ள கொக்கோ கோலா குளிர்பான நிறுவனம் எத்தனைத் தமிழர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறது ? ஆனால் அது தாமிரபரணியிலிருந்து நாள்தோறும் எடுத்துக் கொள்ளும் நீர் எவ்வளவு
என்று உங்களுக்குத் தெரியுமா ?
மறை நீரின்றி
அமையாது உலகு என்பதுதான் தற்போதைய நிலை. எனவே மொத்தமாகத்
தவிர்க்க முடியாது. ஆனால்
தவிர்க்க வேண்டிய உற்பத்தியைத் தவிர்த்து நீர் இருப்பை அடுத்த தலைமுறைக்காகத் தக்க
வைக்கலாமே !
---------------------------------------------------------------------
ஒரு கிலோ
எடை பொருள்களின் மறைநீர்
--------------------------------------------------------------------
அரிசி......................................................2497
லிட்டர்
கரும்பு...................................................1782
லிட்டர்
உருளைக்கிழங்கு..............................287 லிட்டர்
அரத்தி (ஆப்பிள்)...............................822 லிட்டர்
ஆட்டுக்கறி.........................................5521
லிட்டர்
மாட்டுக்கறி......................................15415
லிட்டர்
கோழிக்கறி........................................4323
லிட்டர்
பன்றிக்கறி.........................................5988
லிட்டர்
சோளம்...............................................1220
லிட்டர்
கோதுமை...........................................1830
லிட்டர்
பாற்பொடி...........................................4745
லிட்டர்
வெண்ணெய்.....................................5553
லிட்டர்
நெய்......................................................3278
லிட்டர்
வாழைப்பழம்.....................................790 லிட்டர்
ஆரஞ்சு..................................................560
லிட்டர்
நிலக்கடலை.....................................2782
லிட்டர்
தக்காளி.................................................241
லிட்டர்
--------------------------------------------------------------------
ஒரு லிட்டர் பானம் தயாரிக்க மறைநீர்
--------------------------------------------------------------------
பால்.......................................................1020
லிட்டர்
தேநீர்.......................................................108
லிட்டர்
குளம்பி (COFFEE).............................
528 லிட்டர்
பீர்..............................................................296
லிட்டர்
ஒயின்......................................................436
லிட்டர்
-------------------------------------------------------------------------------------------------
ஒரு ஆப்பிள் விளைவிக்க..............70 லிட்டர்
ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க...6660 லிட்டர்
ஒரு பர்கர் தயாரிக்க .......................2400 லிட்டர்
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்,
{10-01-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .