name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புதிய தமிழ்ச் சொல் (20) பயின் ( RUBBER )

செவ்வாய், டிசம்பர் 15, 2015

புதிய தமிழ்ச் சொல் (20) பயின் ( RUBBER )

புதுச் சொல் புனைவோம் !


பயின் = RUBBER.
---------------------------------------------------------------------------------------------------------

ஆலமரம், அத்தி மரம், கருவேல மரம், முருங்கை மரம் போன்ற மரங்களிலிருந்து பால் அல்லது சாறு வடியும் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பால் உலர்ந்து கெட்டியாகி “பிசின்” கிடைக்கிறது ! 

அது போலவே இரப்பர் மரத்தின் பட்டையிலிருந்து வடியும் பால், உலர்ந்தால் கெட்டியாகி ”பிசின்” ஆகிறது !

தோட்டங்களில் வளரும் இரப்பர் மரங்களிலிருந்து இரப்பர் பால், குடுவைகளில் சேகரிக்கப் பெற்று, ஆலைகளுக்கு அனுப்பப் பெற்று, சில வேதிப் பொருள்கள் சேர்க்கப்பட்டு, கெட்டியான இரப்பர் பாளங்கள் தயாரிக்கப்படுகின்றன !

இந்தப் பாளங்களை மூலப் பொருளாகக் கொண்டு பலவிதமான பயன்பாட்டுப் பொருள்கள் பல்வேறு ஆலைகளில் உருவாக்குகிறார்கள் !


இரப்பர் பால் பிசு பிசுப்பான ஒரு நீர்மம்  (திரவம்). எனவே இதுவும் “பிசின்” தான். ”பிசின்” என்பதைக் குறிக்கும் “பயின்” என்னும் சொல் முன்பு பயன்பாட்டில் இருந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது வழக்கொழிந்த சொல்லாக ஆகிவிட்டது !

 இரப்பர் என்பதைத் தமிழில் எவ்வாறு அழைப்பது ?

“ரப்பர்” என்ற ஆங்கிலச் சொல்லை, சில மொழி பெயர்ப்பாளர்கள் “இரப்பர்” ஆக்கினர். பின்பு “தேய்ப்பான்” “அழிப்பான்” என்றெல்லாம் உரு மாறிற்று. தமிழ் அறிஞர்கள் சிலர் அதை “இழுவை” “தொய்வை” என்றனர் !

இரப்பரின் ”இழுவை” “தொய்வு”த் தன்மைகள் நீக்கப் பெற்று கற்பாறை போல் “தொய்வு” அடையாத, நீட்சி அடையாத பொருள்கள் கூட இக்காலத்தில் தயாரிக்கப்படுகின்றன. எனவே “தொய்வை” என்ற சொல்லுக்கு மாற்றாக வேறு சொல் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும் !

இரப்பர் என்பது, அடிப்படையில், இரப்பர் மரப்பாலில் இருந்து உருவாகும் ”பிசின்” தானே. ”பிசின்” என்பதற்கு இன்னொரு பெயர் தான் “பயின்” “. “பயின்” என்ற தமிழ்ச் சொல்லை இரப்பருக்கு ஏன் சூட்டக்கூடாது. ? 

”பயின்” என்ற சொல் சுருங்கிய வடிவினதாகவும், பொருள் பொதிந்ததாகவும், ஒலி நயம் உடையதாகவும் உள்ளது .எனவே இரப்பர் என்பதை இனி “பயின்” என்றே அழைப்போமே !

“பயின்” என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் காண்போமா !


=============================================================

RUBBER = பயின்
RUBBER MAT = பயின் பாய்
RUBBER MATERIALS = பயின் சரக்குகள்
RUBBER TUBE = பயின் குழல்
RUBBER GOODS = பயின் பொருள்கள்
RUBBER FACTORY = பயினாலை
RUBBER ESTATE = பயின் தோட்டம்
RUBBER BELT = பயின் நாடா
RUBBER SHEET = பயின் தகடு
RUBBER STAMP = பயினச்சு
RUBBER BAND = பயின் வளையம்

=============================================================

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

==============================================================







4 கருத்துகள்:

  1. ஆகா மிக சிறப்பான சொல்.

    இதுபோன்ற புதுமையான சொற்கள் தான் வழக்கத்தில் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான ஆய்வுரை ! மிக்க நன்றி ! நிழற்படம் இணைந்த தங்கள் மின்னஞ்சல் முகவரியுடன், கருத்துரையை அனுப்பி வையுங்கள் ! எனது வலைப் பூவில் தாங்களும் உறுப்பினர் ஆகிட இவை தேவை !

      நீக்கு
  2. அருமை ! அருமை ! இது போன்ற புதுச் சொற்கள் நிரம்ப வரவேண்டும் ! தொடர்க தங்கள் அரிய பணி !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .