புதுச்சொல் புனைவோம் !
TECHNOLOGY = நுட்பாண்மை
-----------------------------------------------------------------------------------------------
தொழில் நுட்பம் பெருகப்
பெருகத் தொழில்களும் பெருமளவில் வளர்ச்சி அடையும். இவை இரட்டைப் பிறவிகள்.
ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.
“டெக்னாலஜி” (TECHNOLOGY) என்பதை ”தொழில் நுணுக்கம்” என்று முன்பு மொழி
பெயர்த்திருந்தனர். இந்தச் சொல் பின்பு ”தொழில் நுட்பம்” என்று உரு மாறியது. “நுணுக்கம்” என்ற 5 எழுத்துச் சொல் “நுட்பம்” என்று 4 எழுத்துச் சொல்லாக மாறியதால் அச்சுப் பணியில் [Typing] பெரிய முன்னேற்றம்
ஏற்பட்டுவிடவில்லை.
“தொழில் நுட்பம்” என்ற சொல்லை அடிப்படையாக
வைத்து, கட்டுமானம், மருத்துவம், நீர்வளம், தொழில், நலவாழ்வு போன்ற அனைத்துத்
துறைகளிலும் புழக்கத்தில் இருந்த ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள்
உருவாக்குகையில், அவை வடிவத்தில் நீண்டு இருந்தனவே தவிர சிறியவையாக அமையவில்லை.
எடுத்துக்காட்டாக, “டெக்னீஷியன்” (TECHNICIAN) என்ற ஒற்றைச் சொல்லுக்கு “தொழில் நுட்பக் கலைஞர்” அல்லது “தொழில் நுட்ப அலுவலர்” என்று மூன்று சொற்கள்
அடங்கிய தமிழ்ப் பெயர் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
சுருங்கிய வடிவு இல்லாத
சொற்கள் அச்சுப் பணியிலும், கணினியில் உள்ளீட்டுப் பணியிலும் மிகுந்த இன்னல்களை ஏற்படுத்தும்
என்பது கண்கூடான உண்மை.
”டெக்னாலஜி” (TECHNOLOGY) என்பதில் “தொழில் சார்ந்த நுட்பம்” மட்டுமே அடக்கமல்ல.
தொழில் சாராத நுட்பங்களும் “டெக்னாலஜி” என்பதன் கீழ் தான் வரும். “கலை சார்ந்த நுட்பம்”, ”செயல் சார்ந்த நுட்பம்”, ”மதி சார்ந்த நுட்பம்” “இசை சார்ந்த நுட்பம்” “நிறம் சார்ந்த நுட்பம்” “ஒளி சார்ந்த நுட்பம்” என்று பல்வகை
நுட்பங்களையும் தன்னகத்தே அடக்கியது தான் “டெக்னாலஜி”.
எனவே “டெக்னாலஜி” என்பதை “நுட்பம்” என்று சொன்னாலே போதும். “தொழில்” என்ற முன்னொட்டு அங்குத்
தேவையில்லை.
”நுட்பம்” என்றால் “நுண்ணியது”, “மிகச் சிறியது” என்றும் பொருள் உண்டு.
அப்படி இருக்கையில் “டெக்னாலஜி” என்பதற்கும் “நுட்பம்” என்பதை எடுத்து வந்து ஒட்ட வைக்கிறீர்களே என்று கேட்கலாம்.
“படி”, “மலை”, “பூ”, “மாடு”, “மீன்”, போன்று எத்தனையோ
சொற்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் உள்ளன. அந்தப் பட்டியலில் “நுட்பம்” சேர்வதால் பிழையேதும்
நேர்ந்துவிடாது.
”நுட்பம்” என்ற சொல்லின்
அடிப்படையில் தோன்றும் தொடர்புடைய பிற சொற்களையும் பார்ப்போமா !
----------------------------------------------------------------------
TECHNOLOGY
|
= நுட்பாண்மை
|
TECHNIC
|
= நுட்பம்
|
TECHNICAL
|
= நுட்பவியல்
|
TECHNICALITY
|
= நுட்ப மரபு
|
TECHNICIAN
|
= நுட்பவியலர்
|
TECHNICAL EDUCATION
|
= நுட்பக் கல்வி
|
TECHNICAL TERMS
|
= நுட்பச் சொற்கள்
|
TECHNICAL INSTITUTE
|
= நுட்பப் பயிலகம்
|
TECHNICAL STUDY
|
= நுட்பாய்வு
|
TECHNICAL REPORT
|
= நுட்பறிக்கை
|
TECHNICAL ASPECTS
|
= நுட்பக் கூறு
|
TECHNICAL POINT
|
= நுட்பச் சுட்டு@
|
TECHNICAL FAULT
|
= நுட்பப் பிழை
|
----------------------------------------------------------------------
@சுட்டு = குறிப்பு, குறிப்பிடுகை, எண்ணம்
----------------------------------------------------------------------
=============================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
”தமிழ்ப் பணி மன்றம்’ முகநூல்.
(19-12-2015}
========================================================