name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வெள்ளி, டிசம்பர் 18, 2015

புதிய தமிழ்ச் சொல் (29) அளகை ( BANK)

புதுச்சொல் புனைவோம் !



BANK = அளகை

----------------------------------------------------------------------------------------------------

வங்கிக் கணக்கு இல்லாத மனிதனை, இப்போது காண்பது அரிது. நடுவணரசின் சில திட்டங்களால் வங்கிக் கணக்கு எண்ணிக்கையும் வங்கிகளின் செயல்பாடும் மிகுந்து விட்டன.

 

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், நிலவள வங்கிகள், தனியார் வங்கிகள், நாட்டுடைமை வங்கிகள், அயல் நாட்டு வங்கிகள் என வங்கிகளின் வகையும் எண்ணிக்கையும் பல்கிப் பெருகிவிட்டன. 

 

பேங்க்என்ற ஆங்கிலச் சொல் தமிழில் எவ்வாறெல்லாம் மொழி பெயர்க்கப் பட்டது தெரியுமா ? முதலில் ”BANK ” என்பதை பேங்க்என்றனர். 

 


 

பின்பு அது பாங்குஆயிற்று. இப்போது வங்கிஎன வழங்கப்படுகிறது .(வங்கி என்றால் கோணல் என்று பொருள்) 

 

இவை எதுவுமே பேங்க்என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் அன்று. மூளை முடக்கம் பெற்றவர்களின் மொழி பெயர்ப்பு இவை !

 

வங்கியின் பணிகள் யாவை ? சுருங்கச் சொன்னால், பணத்தைப் பெறுதல், தருதல், அவ்வளவே ! 

 

ஆதாயம் ஈட்டும் எண்ணத்துடன் இது ஒரு தொழிலாகச் செய்யப் படுகிறது. எனவே இது ஒரு வணிகம் தான்! என்ன வகையான வணிகம்? பண வணிகம் !

 

பணவணிகம்என்ற அடிப்படையில், வங்கியின் பணிகள் விரிவு அடைகின்றன !  ”நகைக் கடன்”, “வீட்டு அடைமானக் கடன்” ,”நில அடைமானக் கடன்” - இப்படி நிறைய உள்ளன ! 

 

கடனுக்கு ஆதாயமாக வட்டி பெறுவதனால், வங்கி ஒரு வணிக நிறுவனம்ஆகிறது. சேவை நிறுவனம்அல்ல !

 

தமிழகத்தில் ஒரு காலத்தில் பணவணிகம்செய்வதில் செட்டியார்கள்முன்னணியில் இருந்தனர். 

 

இவர்களுக்கு அளகையர்என்று பெயர். அளகையர்என்றால், ”செட்டியார்”, ”பணவணிகர்என்று பொருள் உரைக்கிறது கழகத் தமிழ் அகராதி”.

 

முன்பு செட்டியார்கள் செய்து வந்த பண வணிகத் தொழிலைத்தானே இப்போது வங்கிகள் செய்து வருகின்றன. அப்படி இருக்கையில் வங்கியை அளகைஎன்று சொல்வது பொருத்தம் தானே !

 

வேறொரு செய்தியையும் இந்த இடத்தில் இணைத்துப் பாருங்கள்.நிதிக் கடவுளான குபேரனின் தலை நகரின் பெயர் அளகைஎனப்படும் அளகாபுரி ! 

 

நிதி புழங்கும் இடமான வங்கிக்கு நாம் சூட்டும் பெயரும் அளகை” !. என்ன பொருத்தம் பாருங்கள் !

 

எனவே நாம் இனிமேல் வங்கிஎன்னும் பொருத்தமற்ற சொல்லைத் துறப்போம் ! 

 

பொருள் ஆழமும், சுருங்கிய வடிவும், ஒலி நயமும் உடைய அளகைஎன்னும் சொல்லைப் புழக்கத்தில் கொண்டு வருவோம் ! 

 

அளகைஎன்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் காண்போமா !

 

=========================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்முகநூல்.

{18-12-2015}

=====================================================

 

வியாழன், டிசம்பர் 17, 2015

புதிய தமிழ்ச் சொல் (28) சிலம்பு (SPANNER)

புதுச்சொல் புனைவோம் !



SPANNER =
சிலம்பு

---------------------------------------------------------------------------------------------


தமிழில் ஒவ்வொரு சொல்லும் ஏதாவது ஒரு வேர்ச் சொல்லில் இருந்து தான் உருவாகிறது. வேர்ச் சொல் என்பது வித்துப் போன்றது. 

 

வித்தில் இருந்து முளைவிட்டு, நீண்டு, வளர்ந்து, பரந்து, விரிந்து , தழைத்து செடிகளும் மரமும் உருவாவதைப் போல, வேர்ச் சொல்லில் இருந்து பல வடிவங்களில் புதுச் சொற்கள் உருவாகின்றன.

 

அம்”, “அர்”, “இல்”, “இள்’, “உல்”, “உள்’, “ஒல்”,”கல்”, “குல்”, என்பது போன்ற வேர்ச் சொற்கள் தமிழில் பல உள்ளன. அவற்றுள் சுல்என்பதும் ஒன்று. 



'சுல்என்னும் வேர்ச் சொல் வளைதற் கருத்தை உணர்த்தும். வளைதல் என்பது சாய்வு, வளைவு, கோணல், வட்டம், உருண்டை, முட்டை, உருளை முதலிய பல கருத்தைத் தழுவும். (ஆதாரம் : தேவநேயப் பாவாணரின் வேர்ச்சொற் கட்டுரைகள் )

 

சுல்  >  சுலவு   > சுலவுதல் = சுற்றுதல்

 

சுல்  >  சுலாவு   > சுலாவுதல் = சூழ்தல்

 

சுல்  > சில்  > சில்லு  > வட்டமான துண்டு

 

சுல்   > சில்  > சிலை = வளைந்த வடிவமுள்ள வில்

 

சுல்  > சில்  >  சிலை = வளைவு நெளிவான கற் சிலை

 

சுல்   > சில்   > சிலை   > சிலம்பு = வட்டமான கால் அணி.

 

சுல் >  சில்  > சிலை >சிலந்தி = வட்டமான நூல் வலை

 

............................................................அமைக்கும் பூச்சி.

 

சுல்  > சில்   > சிலை  >  சிலம்பம் = வட்டமாகச் சுழற்றி

 

...........................................................ஆடப்படும் குச்சி விளையாட்டு. 

 

 

பணி மனைகளில் (Engineering Work shops) அல்லது ஊர்திச் சீரகங்களில் (Automobile Work Shops) ஸ்பானர் என்னும் கருவியைப் பார்த்திருப்பீர்கள். 

 

 

ஊன்றாணியின் ( Bolt ) தலைப் பகுதியை அல்லது சுரையின் ( Nut ) வெளிச் சுற்றுப் பகுதியை இறுகக் கவ்விப் பிடிக்கச் செய்து வட்டமாகச் சுழற்றி இயக்கப் படுவதே ஸ்பானர் ஆகும். 

 

 

ஸ்பானர் வட்டமான திசையில் வலஞ்சுற்றாக (Clock-wise) இயக்கப் பட்டால் ஊன்றாணி முடுக்கப் பட்டு இறுக்கப்படும். இடஞ்சுற்றாக (Anti Clock-wise) இயக்கப் பட்டால் ஊன்றாணியின் இறுக்கம் தளர்ச்சி அடையும். 

 

 

ஸ்பானரின் இயக்கம் நேர்த் திசையிலோ, அல்லது எதிர்த் திசையிலோ வட்டமாக அமையும் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். 

 

 

இவ்வாறு வட்டமாகச் சுழற்றி இயக்கப்படும் ஸ்பானரை சிலம்பு என்று அழைத்தால் பொருத்தமாக இருக்கும் அல்லவா ? (சிலம்பு=வட்டமாக இயக்கப்படுவது) 

 

 

சிலம்பு என்னும் காலணி கண்ணகி காலத்துடன் மறைந்து விட்டது. காப்பியத்தில் தான் சிலம்பு உயிர் வாழ்கிறது. சிலம்பு என்னும் இந்த அழகிய சொல்லைப் புழக்கத்தில் விடுவோமே ! 

 

 

இன்னும் எத்துணைக் காலத்திற்குத் தான் நாம் ஸ்பானர் என்ற சொல்லை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பது ?

 

 

ஸ்பானர் என்ற சொல்லைப் பரண் மீது வைத்திடுவோம் ! .சிலம்பு என்ற சொல்லைப் புழக்கத்திற்குக் கொண்டு வருவோம் ! தமிழின் பிள்ளைகளாகிய நாம் நமது அன்னை மொழிக்குப் புதுப் புதுச் சொற்கள் என்னும் அணிகலன்களைப் பூட்டி மகிழ்வோமே !

 

 

சிலம்பு என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பாருங்களேன் !!!



=======================================================



SPANNER



=
சிலம்பு

SINGLE ENDED SPANNER

= ஒரு முனைச் சிலம்பு

DOUBLE ENDED SPANNER

= இரு முனைச் சிலம்பு

MULTI SPANNER

= பன்முனைச் சிலம்பு

ADJUSTABLE SPANNER

= சீரமை சிலம்பு

WRENCH SPANNER

= திருகுச் சிலம்பு

BOX SPANNER

= குதைச் சிலம்பு

RING SPANNER

= பூண் சிலம்பு

MONKEY SPANNER

= கவிச் சிலம்பு

SOCKET SPANNER

= குழிச் சிலம்பு

PEG SPANNER

= முளைச் சிலம்பு

ALLEN SPANNER

= அளை சிலம்பு

“ C “SPANNER

= பிறைச் சிலம்பு

 

 

=======================================================

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்பணி மன்றம்முகநூல்.

{17-12-2015}

 

=======================================================