கொத்து (01) மலர் (059)
-------------------------------------------------------------------------------------------------------
கடந்த 2015 டிசம்பர் திங்களில் சென்னையில்
ஏற்பட்ட
பெரு வெள்ளத்தினால்
மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை நினைத்து
தமிழ்ப் பணி மன்றம் முகநூலில் நான் எழுதிய கவிதை !
(9-12-2015)
(9-12-2015)
--------------------------------------------------------------------------------------------------------
எங்கள்
கண்களில் நீரில்லை !!
----------------------------------------------------------------------------------------------
மழையே ! மழையே ! மாமழையே ! – தமிழ்
மக்களை வாட்டிய மாமழையே !
அழையா விருந்தாய் ஏன்வந்தாய் ? – இங்கு
ஆத்திரம் உனக்கு யார்மீதோ ?
பிழைகள் செய்தோர் பெருநரிகள் – அவர்
பிருந்தா வனத்தில் உலவுகிறார் !
ஏழைகள் உடைமை உயிருடலை – கீண்டு
ஏன்தான் விழுங்கி மகிழ்ந்தாயோ ?
நீர்நிலை எல்லாம் வீடுகளாய் – இன்று
நிற்பதன் காரணம் ஏழைகளா ?
தூர்ந்து மறைந்தன நீர்வழிகள் ! – அதில்
தோன்றிய கட்டடம் யார்நிதியம் ?
சோர்ந்து மயங்கிய ஏழைகளை – இன்று
சுமைதாங் கிகளாய் மாற்றினையே !
போர்க்களம் போலவே ஆனதடி ! – நீ
புண்செய லாமோ தமிழ்நாட்டை ?
வீடுகள் சிறைபோல் ஆகினவே ! – நகர்
வீதிகள் ஆறாய் மாறினவே !
கூடுகள் இல்லாப் பறவைகளாய் – பலர்
குளிரில் தெருவில் குமுறுகிறார் !
ஈடிணை இல்லாப் பேரழிவால் – இன்று
எங்கள் தமிழினம் வாடுதுகாண் !
ஆடிய ஊழித் தாண்டவமே ! – இனி
அடங்கிடு ! போதும் ! போதுமடி !
மக்களை இனியும் வருத்தாதே ! – எமன்
மடியில் அவர்களை வீழ்த்தாதே !
தக்கார் தகவிலர் தெரியாதோ ? – உன்
தண்ணளி எங்கே போனதடி ?
பக்குவ மாகநீ விலகிவிடு ! – எமை
பங்கப் படுத்துதல் முறையில்லை !
இக்கண மேநீ விலகிவிடு ! – இனி
எங்கள் கண்களில் நீரில்லை !
------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
09-12-2015
-----------------------------------------------------------------------------------------------------