ஊர்ப்
பெயர் அறிவோம் !
[பாவாணரின் சொல்லாராய்ச்சிக்
கட்டுரைகள் என்னும் நூலில் இருந்து ஒருபகுதி]
---------------------------------------------------------------------------------------------------------------------
மலையும் மலை சார்ந்த இடமுமாகிய
குறிஞ்சி நிலத்து ஊர்கள் குறிச்சி என்று அழைக்கப்பெற்றன. (எ-டு)
வேளாக்குறிச்சி, துவரங் குறிச்சி !
காடும் காடு சார்ந்த நிலமுமாகிய
முல்லை நிலத்து ஊர்கள் பாடி, சேரி என்று
அழைக்கப் பெற்றன. (எ-டு)
குறிஞ்சிப்பாடி, காட்டுப்பாடி (காட்பாடி); புதுச்சேரி, கூனஞ்சேரி
!
வயலும் வயல் சார்ந்த இடமுமான
மருத நிலத்தூர்கள் ஊர் என்று
அழைக்கப் பெற்றன. (எ-டு)
தஞ்சாவூர், வயலூர் !
கடலும் கடல் சார்ந்த இடமுமான
நெய்தல் நிலத்து ஊர்கள் பட்டினம். பாக்கம் என்று
அழைக்கப்பெற்றன. (எ-டு) காயல்பட்டினம், அதிராம்பட்டினம், முண்டியம்பாக்கம், ஊரப்பாக்கம் !
இந்த நால்வகை நிலங்களும்
தன் நிலையிலிருந்து திரியும் போது பாலை எனப்பட்டது. பாலை நிலத்து
ஊர்கள் பறந்தலை என்று அழைக்கப்
பெற்றன !
மக்கள் தொகை பல்கிப் பெருகித்
திணை மயக்கம் உண்டான
பின், இவ்வழக்கம் பெரும்பாலும் நின்று விட்டது !
இடைக்காலத்தில் வழங்கிய
சில ஊர்ப் பெயர்களும், ஊர்ப் பெயர் ஈறுகளும் வெவ்வேறு
காரணம் பற்றியவை !
ஆறை என்பது ஆற்றூர் (எ-டு) (பழையாறை). புத்தூர் என்பது புதிய
ஊர்; (எடுத்துக் காட்டு):- காட்டுப்புத்தூர்,
கோவன்புத்தூர் (கோயம்புத்தூர்) பட்டி என்பது கால்நடைத்
தொழுவம் உள்ள ஊர்; (எ.டு) கொண்டலாம் பட்டி, நேமத்தான் பட்டி !
பள்ளி என்பது பௌத்த, சமண
மடம் உள்ள ஊர். (எ-டு) திருச்சிராப்பள்ளி, தொரப்பள்ளி. பாளையம் என்பது படை இருக்கும் ஊர். (எ-டு) மேட்டுப் பாளையம்,
உத்தமபாளையம் !
பட்டு என்பது
பாளையத் தலைவரான சிற்றரசர்க்கு விடப்பட்ட சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி. (எ-டு) செங்கழுநீர்ப்பட்டு
(செங்கற்பட்டு), சேற்றுப்பட்டு (சேத்துப்பட்டு). மங்கலம் என்பது பார்ப்பனர்
இருக்கும் ஊர். சத்தியமங்கலம்,, நீடாமங்கலம்
!
நத்தம் என்பது பார்ப்பனர் அல்லாதார்
வாழும் ஊர். (எ-டு) புலவர் நத்தம், இடையர்நத்தம். குடி என்பது ஒரு குடும்பத்தாரே
அல்லது குலத்தாரே வசிக்கும் ஊர். (எ-டு)
காரைக்குடி, தூத்துக்குடி !
பேட்டை என்பது சந்தைகள் கூடும் ஊர். (எ-டு) முத்துப் பேட்டை,
புதுப்பேட்டை. புரம், புரி என்பன அரசர் தலைநகர். (எ-டு)
காஞ்சிபுரம், தருமபுரம், தருமபுரி, மருங்காபுரி !
மூதூர் என்பது பழைய ஊர்; பேரூர் என்பது மாநகர்;
பற்று
என்பது தனிப்பட்டவர்க்கு அல்லது ஒரு சாரார்க்கு உரிய சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி; வாடை என்பது வேட்டுவர் அல்லது இடையர் குடியிருக்கும்
ஊர் !
பண்டார வாடை என்பது
குடிகளுக்குரிய ஊர். அடங்காப்
பற்று என்பது அரசன் ஆணைக்கு அடங்காதவர் வசிக்கும் ஊர். குடிக்காடு
என்பது
குடிகள் வசிக்கும் காட்டூர்
!
குடியேற்றம் என்பது மக்கள் குடியேறிய ஊர். கல்லாங்குத்து என்பது கடின நிலத்து ஊர். முரம்பு என்பது கற்பாங்கான மேட்டு நிலத்து ஊர். எயில் என்பது மதில் சூழ்ந்த ஊர். விண்ணகரம் என்பது திருமால் கோயில் உள்ள ஊர் !
ஏரி, குளம்,
கோட்டை, கோயில் முதலிய ஈறுகளில் முடியும் பேர்களைக் கொண்ட ஊர்கள், அவ்வீறுகளாற் குறிக்கப்படும் இடத்தைக்
கொண்டவை. ஏரி என்று முடியும் பெயரைக் கொண்ட ஓரூரில் ஏரி இல்லாவிடின், அது ஒரு காலத்தில் இருந்து பின்னர்த்
தூர்ந்து போனது என்று அறிதல் வேண்டும்.இங்ஙனமே பிறவும்
!
புறம், பட்டு முதலிய சில பெயர்களும், இக்காலத்தில் சிறப்புப் பெயர் இழந்து
பொதுப் பெயராக வழங்கி வருகின்றன. இக்காலப் புத்தூர்ப் பெயர்கள்
வரலாற்றுச் செய்தியொன்றும் உணர்த்தா என்பதை அறிக !
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050:மடங்கல்
(ஆவணி),26]
{12-09-2019}
----------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்”
முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------