name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வெள்ளி, அக்டோபர் 15, 2021

நான்மணிக்கடிகை (33) புகைவித்தாப் பொங்கழல் தோன்றும் !

 

பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்த  நான்மணிக் கடிகை விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவரால் படைக்கப் பெற்ற நூல். கி.பி. 2-ஆம் நூற்றாண்டில்  தோன்றியதாக்க் கருதப்படும்  இந்நூலில் 106 வெண்பாக்கள் உள்ளன.  ஒவ்வொரு வெண்பாவும் அரிய கருத்துகளை நமக்கு எடுத்துரைக்கின்றன. அதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------------

 பாடல் எண் :(33)

-------------------------

 

புகைவித்தாப்  பொங்கழல்  தோன்றுஞ்   சிறந்த

நகைவித்தாத்  தோன்றும்  உவகைபகையொருவன்

முன்னம்வித்  தாக முளைக்கும்  முளைத்தபின்

இன்னாவித்  தாகி  விடும்.

 

--------------------------------------------------------------------------------------------------------

 சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------

 

புகைவித்தாப்  பொங்கு  அழல்  தோன்றும்  சிறந்த

நகைவித்தாத்   தோன்றும் உவகைபகையொருவன்

முன்னம் வித்தாக முளைக்கும்  முளைத்த பின்

இன்னா  வித்து  ஆகிவிடும்.

 

-------------------------------------------------------------------------------------------------------

 பொருளுரை:

-----------------------

 

ஓர் இடத்தில் புகை  எழுகிறது என்றால், அதற்கு அங்கு எரியும் நெருப்பு  தான் வித்தாக (காரணமாக ) இருக்கும் !

 

ஒருவன்  முகமலர்ச்சியுடன் காணப்படுகிறான் என்றால், அதற்கு  அவனது மன மகிழ்ச்சியே  வித்தாக (காரணமாக)  இருக்கும்   !

 

ஒருவன் உள்ளத்தில்  உள்ள பகையுணர்வு, வெளியே தெரிய அவனது குறிப்பான செயல்களே வித்தாக (காரணமாக)  இருக்கும் !

 

அதுபோல், அவனது பகைமை உணர்வுகளே   அவனுக்கு வரக்கூடிய  எல்லாத் துன்பங்களுக்கும் வித்தாக (காரணமாக) இருக்கும்  !

--------------------------------------------------------------------------------------------------------

 அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

 

புகை வித்து ஆ = புகை எழுவதற்கு வித்தாக ; பொங்கு அழல் = எரியும் நெருப்பு ; தோன்றும் = காண்பவர்களுக்குத் தோன்றும் ; சிறந்த நகை வித்து ஆ = மேலான முக மலர்ச்சிக்கு வித்தாக ;  உவகை தோன்றும் =   மனதில் மகிழ்ச்சி தோன்றும் ; பகை = உள்ளத்தின் பகைமை ; ஒருவன் = ஒருவனது ; முன்னம் வித்தாக = குறிப்புச் செயல்கள் காணமாக ; முளைக்கும் = வெளியே தெரியும் ; முளைத்த பின் = தெரிந்தபின் ; இன்னா = வரும் துன்பங்களுக்கு ; வித்து ஆகிவிடும் = அதுவே காரணமாகிவிடும்.

----------------------------------------------------------------------------------------------------------

 சுருக்கக் கருத்து:

----------------------------

 

புகை எழுகையில் அதற்குக்  காரணமாக அங்கு நெருப்பு இருப்பது விளங்கும்;  முகமலர்ச்சிக்குக் காரணம்  மனமகிழ்ச்சியே என்பது  விளங்கும்; குறிப்பு, சொல், செயல்களின் வாயிலாக  ஒருவர் நம்மீது கொண்டுள்ள  பகைமை விளங்கும் ; தெரிந்த பின் அப் பகைமையே  அவரது துன்பங்களுக்குக் காரணம் என்பதும் விளங்கும் !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல்(ஆவணி),31]

{17-09-2019}

--------------------------------------------------------------------------------------------------------