சங்க கால இலக்கியமான நாண்மணிக் கடிகையில் கடவுள் வாழ்த்து உள்பட 106 வெண்பாக்கள்
உள்ளன. கடவுள்
வாழ்த்து நீங்கிய பிறபாடல்கள் ஒவ்வொன்றிலும் நந்நான்கு கருத்துகள் எடுத்துரைக்கபடுகின்றன. இதிலிருந்து
ஒரு பாடல் இதோ !
---------------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்:
(34)
--------------------------
பிணியன்னர் பின் நோக்காப் பெண்டிர் உலகிற்கு
அணியன்னர் அன்புடை மாக்கள் – பிணிபயிரின்
புல்லன்னர் புல்லறிவின்
ஆடவர் – கல்லன்னர்
வல்லென்ற நெஞ்சத் தவர்.
---------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------
வரவுக்கு மேல் செலவு செய்து தன் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கருதிப்
பார்க்காத மனைவி, கணவனுக்கு நோய்க்கு ஒப்பானவள் !
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி அவற்றை நேசிக்கும்
நன்மக்கள் இந்த உலகத்திற்கு மதிப்பு மிக்க அணிகலனுக்கு ஒப்பாவர் !
அறியாமை நிறைந்த ஆண்மக்கள், வளரும்
பயிரினைச் சூழ்ந்து கொண்டு அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும் களைகளுக்கு ஒப்பாவர் !
அதுபோல், பரிவுணர்வு இல்லாத வன்மையான நெஞ்சத்தை உடையவர், இளக்கமற்ற
கொடிய கல்லுக்கு ஒப்பாவர்
!
---------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருளுரை:
---------------------------------
பின் = பின் வருவது பற்றி ; நோக்காப்
பெண்டிர் = கருதிப் பார்க்காத மனைவி ; பிணி
அன்னர் = அவள் கணவனுக்கு நோய்க்கு ஒப்பாவாள் ; அன்பு உடை மாக்கள் = எல்லா
உயிர்களிடத்திலும் அன்புடைய நன்மக்கள் ; உலகிற்கு = உலகத்திற்கு ; அணி
அன்னர் = அணிகலனுக்கு ஒப்பானவர் ; புல் அறிவின் = சிற்றறிவுடைய ; ஆடவர் = ஆண்மக்கள் ; பயிரின் = வளரும்
பயிரினைச் சூழ்ந்த ; பிணி புல் அன்னர் = வளர்ச்சியைத்
தடுக்கும் களைப் புல்லுக்கு ஒப்பானவர் ; வல் என்ற = வன்மையான ; நெஞ்சத்தவர் = நெஞ்சத்தை
உடையவர் ; கல் அன்னர் = கல்லுக்கு ஒப்பாவார்.
----------------------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
---------------------------
வருவதறியா பெண்டிர்,
நோய்க்கு ஒப்பாவர்; அன்புடை
மக்கள் அணிகலனுக்கு நிகராவர்;
புல்லறிவை உடைய ஆடவர்கள் புல்லுக்கு நேராவர்; வன்னெஞ்சமுடையவர்
கல்லுக்கு இணையாவர்.
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,மடங்கல்(ஆவணி),31]
{17-09-2019}
----------------------------------------------------------------------------------------------------------