பாதுகாப்பான வாழ்க்கைக்கு அறச் செயல்களே அரணாகும் !
---------------------------------------------------------------------------------------------------------
நாகனார் என்னும் பெரும்புலவர் விளம்பி என்னு ஊரைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இதனால் விளம்பி நாகனார் என அவர் அழைக்கப்படுகிறார் ! இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயற்றிய நான்மணிக்கடிகை என்னும் நூல் பல அரிய கருத்துகளை நமக்கு எடுத்துரைக்கிறது ! அதிலிருந்து ஒரு பாடல் !
----------------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்:
(17)
-----------------------
இன்னாமை வேண்டின் இரவெழுக;
இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக; - தன்னோடு
செல்வது வேண்டின் அறஞ்செய்க; வெல்வது
வேண்டின் வெகுளி
விடல்.
----------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
-------------
இழிவானவன் என்னும் பெயரைத் தேடிக் கொள்ள எவனொருவன் விரும்புகிறானோ அவன் தன்னிடம் போதுமான
செல்வம் இருந்தும் கூட பேராசை மீக்கூரப் பிச்சை எடுக்கும் தொழிலை மேற்கொள்ளலாம் !
இந்த உலகத்தில் என்றென்றும் நிலைபெற்று விளங்குதலை எவனொருவன் விரும்புகிறானோ, அவன்
புகழ் விளைக்கும் செயல்களை
மேற்கொள்ளலாம் !
தான் செல்லுமிடமெல்லாம் தனக்குத் துணையாக ஒரு பாதுகாப்புக் கவசம் தேவை என்று
எவனொருவன் விரும்புகிறானோ,
அவன் அறச் செயல்களில் ஈடுபடுவதை மேற்கொள்ளலாம் !
அதுபோல், பிறரை வெற்றி கொண்டு தன்பால் ஈர்த்துக் கொள்ள எவனொருவன் விரும்புகிறானோ, அவன்
சினம் (கோபம்)
கொள்வதை முற்றிலுமாக
விட்டுவிடல் வேண்டும் !
-----------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------
இன்னாமை வேண்டின்
= இழிவை ஒருவன் விரும்பினால் ; இரவு
எழுக = இரந்து
(பிச்சை எடுத்து) உண்பதை
மேற்கொள்க ; இந்நிலத்து = இவ்வுலகில் ;மன்னுதல்
வேண்டின் = நிலையான பெயர் பெற்று விளங்க விரும்பினால் ; இசை
நடுக = புகழ் தரும் செயல்களில் ஈடுபடுக ; தன்னோடு
செல்வது வேண்டின் = தன்னுடன் துணையாகச் செல்வதொன்றை விரும்பினால் ; அறம் செய்க = அறச் செயல்களை மேற்கொள்க ; வெல்வது வேண்டின் = பிறரை
வெல்ல விரும்பினால் ; வெகுளி விடல் = சினம் (கோபம்) கொள்வதை
விட்டுவிடுக.
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2052,கும்பம் (மாசி),21]
{05-03-2021}
---------------------------------------------------------------------------------------------------------