ஊடலால் நோகடிக்கும் நூலிழையர் !
------------------------------------------------------------------------------------------------------------
விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக் கடிகை, கடைச்சங்க காலத்திய நூல். இதில் கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன ! இந்நூலிலிருந்து ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------------------------
பாடல்:எண்.(14).
------------------------------------------------------------------------------------------------------------
பல்லினான் நோய் செய்யும் பாம்பெலாங் – கொல்லேறு
கோட்டால் நோய்செய்யுங் குறித்தாரை
ஊடி
முகத்தான் நோய்செய்வர் மகளிர் முனிவர்
தவத்தால் தருகுவர்
நோய்.
------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------------------------
பல்லினால் நோய்செய்யும் பாம்புஎலாம்; – கொல் ஏறு
கோட்டால் நோய்செய்யும் குறித்தாரை; ஊடி
முகத்தால் நோய்செய்வர் மகளிர்; முனிவர்
தவத்தால் தருகுவர் நோய்.
------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
--------------
பாம்புகள் தம்
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால்
, பிற உயிர்களுக்குத் தம் நச்சுப் பற்களால் துன்பம்
தரும் !
சீண்டப் பெறும் காளை,
தான் குறி வைத்துவிட்டால், குறிப்பிட்ட
மனிதருக்குத் தன் கூரிய கொம்புகளால் துன்பம் தரும் !
பெண்மக்கள், ஊடல் கொண்டு பிணங்கி, தம்
முகக் குறிப்பினால் ஆடவர்க்குத் துன்பம் தருவர் !
அதுபோல், முனிவர்கள் சினம் கொண்டால், தம்மை
இகழ்ந்தவர்களுக்குத் தமது
தவ வலிமையால், துன்பம் தருவர் !
-------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------
நோய் செய்யும் = துன்பம் தரும்; கொல்
+ ஏறு = கொல்லேறு = குத்திக்
கொல்லும் குணம் படைத்த காளை
; கோட்டால் = தன் கொம்புகளால் ; குறித்தாரை = தான்
குறிவைப்பவரை ; ஊடி
= பிணக்குக் கொண்டு ; முகத்தால் = முகக்
குறிப்பால் ; தவத்தால்
= தவ வலிமையால்.
----------------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2052,கும்பம் (மாசி),20]
{04-03-2021}
---------------------------------------------------------------------------------------------------------------------