அருளிற் பிறக்கும் அறநெறி !
----------------------------------------------------------------------------------------------------------
விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் இயற்றிய நான்மணிக் கடிகை என்னும் நூல் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இலக்கியம். பதினெண் கீழ்க் கணக்கு என்னும் நூற் பிரிவைச் சார்ந்தது இந்நூல். இதிலிருந்து ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்: எண் (07).
----------------------------------------------------------------------------------------------------------
கல்லிற் பிறக்குங் கதிர்மணி;
காதலி
சொல்லிற் பிறக்கும் உயர்மதம் – மெல்லென்று
அருளிற் பிறக்கும் அறநெறி;
எல்லாம்
பொருளிற் பிறந்து விடும்.
-----------------------------------------------------------------------------------------------------------
கண்களைப் பறிக்கும் ஒளிமிகுந்த
மணிகள் எல்லாம் கற்களில்
(கல் வடிவில்) பிறக்கின்றன !
ஆடவனுக்கு எழுச்சி தரும் வீரம்
அவனால் விரும்பப்படும் காதலியின் சொல்லில் பிறக்கிறது !
மனதில் ஊறும் மென்மையான அருளுணர்வில் பிறக்கின்றன அறம் பொருந்திய நல்வழிகள் !
ஆனால், அவ்வறத்தோடு
இன்பம் முதலிய எல்லாப் நற்பேறுகளும் செல்வத்தினாற் கூடப் பிறக்கின்றன !
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------
கல்லில் = கல் வடிவில்; கதிர்மணிகள் = ஒளி
பொருந்திய வைரம் முதலிய கற்கள்;
உயர்மதம்
= எழுச்சி மிக்க வீர உணர்வு; மெல்லென்று = மென்மையான ; அறநெறி = அறம்
பொருந்திய நல்வழிகள்; பொருளில் = செல்வத்தினால் .
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2052, கும்பம்(மாசி),07]
{19-02-2021}
-----------------------------------------------------------------------------------------------------------------------