சேற்றில் தான் செந்தாமரை பிறக்கிறது !
----------------------------------------------------------------------------------------------------------
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நான்மணிக் கடிகை கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்களைக் கொண்டது.. இதை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர். இதிலிருந்து ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்: எண். (06)
-----------------------------------------------------------------------------------------------------------
கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்; மான் வயிற்றில்
ஒள்ளரி தாரம் பிறக்கும்; பெருங்கடலுள்
பல்விலைய முத்தம் பிறக்கும்;
அறிவார்யார்
நல்லாள் பிறக்குங் குடி.
-----------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
----------------
காட்டில், தானாகவே தோன்றி வளர்வது கள்ளிச் செடி. எந்த உயிரினத்திற்கும் எவ்வித பயனுமில்லாத இந்தக் கள்ளிச் செடிகளுக்கு நடுவில்தான் பெருமதிப்புடைய அகில் தோன்றி வளர்கிறது !
கானகத்தே திரிந்து வாழ்கிறது
மான். உண்பவர்க்கு அல்லால், பிறருக்கு எவ்வகையிலும் பயன்படாத இந்த
மானின் வயிற்றில் தான்
ஒப்பனைக் கலைக்குப் பெரிதும் உதவுகின்ற
அரிதாரம் தோன்றுகிறது !
தாகம் ஏற்படுகையில், உண்பதற்கு ஒரு துளியும்
தகுதியில்லாதது உவர்நீர். இத்தகைய
உவர்நீர் நிறைந்திருக்கும் பெருங்கடலில்
தான் விலைமதிக்க முடியாத
முத்து பிறக்கிறது !
இப்படி ஒவ்வொன்றின் பிறப்பையும் அறியமுடிகிற மனிதனால் நல்லொழுக்கம் மிக்க
சான்றோர் எந்தக் குடியில் பிறக்கிறார்கள் என்பதை மட்டும்
அறிய
முடிவதில்லை ! ஏன் ? இதுதான் இயற்கையின் திருவிளையாடலோ ?
----------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------
கள்ளி = கள்ளிச்செடி; அகில் = நெருப்பில்
இட்டுப் புகைத்தால் நறுமணம் தரக் கூடிய அகில் என்னும் செடி; ஒள்ளரிதாரம் = மேன்மை
மிக்க அரிதாரம்; பல்விலைய
= பெருமதிப்புடைய ; முத்தம் = சிப்பியில்
விளையும் முத்துகள்; அறிவார் யார் = அறிந்தவர் யாரோ; நல்லாள்
(நல்ல + ஆள்) = நல்லொழுக்கமும்
நற்குணமும் நற்பண்புகளும் மிக்க ஆள்; பிறக்கும் குடி = பிறக்கும்
மக்கள் குலம்.
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2052,கும்பம்(மாசி),07]
{19-02-2021}
-----------------------------------------------------------------------------------------------------------