அன்றும் ! இன்றும் ! - ஓர் ஒப்பீடு !
அன்றைய நாளில் கால்நடையாக
.....அயலூர் சென்றோம்
நோயில்லை !
..........ஆதவன்
எழுமுன் துயிலெழச் செய்தோம்
...............அழகிய உடலில் நோயில்லை !
நன்றென எண்ணிக் காய்கறி
உண்டோம்
.....நலிவும் மெலிவும்
வரவில்லை !
............நாள்தொறும்
ஆற்றில் குளத்தில் குளித்து
..................நீச்சலடித்தோம் அயர்வில்லை !
இன்றைய நாளில் ஊர்தியில்
அன்றி
.....எங்கும் எதற்கும்
செலல் இல்லை !
............இரவில்
விழித்துப் பகலில் உறங்கும்
. .................இழிகுணம் இன்னும் விடவில்லை !
கண்டதை உண்டு வயிறும் வாழ்வும்
.....கனலாய் எரிவது
நினைவில்லை !
..........கால்கள்
அளைந்திட அறையில் குளியல்,
................நீச்சல் கற்கவும் வழியில்லை !
அன்றைய மாந்தன் நீராகாரம்
.....அருந்தி நலமுடன்
வாழ்ந்திட்டான் !
............அமுதாய்ப்
பழைய சோறும் தயிரும்
. ..................அளவாய் உண்டு மகிழ்ந்திட்டான் !
இன்னலம் நல்கும் எருவை இட்டான்;
.....எள்ளும் கொள்ளும்
விளைத்திட்டான் !
............எங்கணும்
கரும்பும் நெல்லும் விளைந்தது
..................இனிதாய் வாழ்வைக் கழித்திட்டான் !
இன்றைய மாந்தன் எழுந்ததும்
குளம்பியை
......இரைப்பைக்
குள்ளே ஊற்றுகிறான் !
............இட்டளி
சத்துணி இரண்டையும் மாந்தி
...................இருக்கும் வலுவையும் இழக்கின்றான் !
நன்மைகள் தாரா உரத்தை, மருந்தை
......நயந்தே வயலில் தெளிக்கின்றான் !
. ..........நலிவை
ஊட்டும் வேதிப் பொருள்களை
.................நாளும் உண்டு இளைக்கின்றான் !
அன்றைய மாந்தன் உண்மையைப்
பேசி
.....நன்மையைச்
செய்து வாழ்ந்திட்டான் !
..........இன்றைய
மாந்தன் பொய்களை விற்றுப்
..............பைகளைப்
வாங்கித் தாழ்ந்திட்டான் !
அன்றைய மாந்தன் நேரிய வழியில்
......ஈட்டிய பணத்தை
ஈந்திட்டான் !
............இன்றைய
மாந்தன் கொள்ளை அடித்துக்
.................குவிப்பதில் மிகவும் தேர்ந்திட்டான் !
அன்றைய மாந்தன் ஏய்த்துப்
பிழைத்தல்
......ஈனத் தொழில்
என வாழ்ந்திட்டான் !
............இன்றைய
மாந்தன் எதையும் செய்யும்
..................இழிகுணம் தன்னில் வீழ்ந்திட்டான் !
அன்றைய உலகம் அமைதியும்
வளமும்
......அரும்பிடச்
செழித்து இலங்கியது !
...........இன்றைய
உலகம் பித்தம் பிடித்தவர்
...............ஆள்கையில் நித்தமும் அழிகிறது !
கண்கள் இருந்தும் குருடாய்
வாழும்
......மாந்தரை நினைத்தால்
துயிலில்லை !
...........கவலை
மனதில் சடுகுடு ஆடும்
.................காட்சியை நினைத்தால் துயிலில்லை !
பெண்கள் இங்கே பாலியல்
துன்பம்
.....அடைதல் கண்டால்
துயிலில்லை !
............பேய்கள்
போல ஊர்தியில் பறக்கும்
...................பேதையை நினைத்தால் துயிலில்லை !
மன்பதை தன்னில் நீதியும்
நேர்மையும்
......மடிவதைக்
கண்டால் துயிலில்லை !
............மானம்
பெரிதென வாழ்ந்த தமிழினம்
....................மயங்குது மதுவில் துயிலில்லை !
அன்பும் அருளும் நலியுது
நாட்டில்
......அந்தோ தமிழா
! உணர்வாயா ?
............அன்னைத்
தமிழைக் கண்போல் காக்கும்
....................அறிவை நீயும் பெறுவாயா ?
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, சுறவம் (தை),29]
{12-02-2020}
-----------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப்
பெற்ற கவிதை !
------------------------------------------------------------------------------------------