வாழ்நாள் எனும் நாட்காட்டிச் சீட்டு கதிரவனால் அன்றாடம் கிழிக்கப்படுகிறது !
சமண முனிவர்கள் பலரால் இயற்றப்பட்ட நாலடியார், நானூறு வெண்பாக்களைக் கொண்ட ஒர் அறநூல். கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியதாகக் கருதப்படும் இந்நூல் பதினெண் கீழ்க் கணக்கு என்னும் வகைப்பாட்டின் கீழ் வருகிறது. திருக்குறளைப் போல அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று இயல்களைக் கொண்டது. இதிலிருந்து ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (22)
--------------------------
வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ தெழுதலால் வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின் யாரும்
நிலவார் நிலமிசை மேல்.
------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------
வாழ்நாட்கு அலகா வயங்கு ஒளி மண்டிலம்,
வீழ்நாள் படாஅது எழுதலால், வாழ்நாள்
உலவா முன் ஒப்புரவு ஆற்றுமின் ! யாரும்
நிலவார் நிலமிசை மேல்.
------------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-------------------
மனிதன் வாழும் நாள்களைக் கணிக்கும் அளவு கோல் போல, ஒளி மண்டிலமாகிய சூரியன் அன்றாடம் எழுந்து, மறைந்து அவனது வாழும் நாள்களைக் கழித்துக் கொண்டிருக்கிறது !
ஆகையால், உங்கள் வாழ்நாள் குறைந்து போவதற்கு முன், உங்களிடமுள்ள செல்வத்தைப் பிறருக்கும் பகிர்ந்தளித்துக் கூடி வாழும் ஒப்புரவு
வாழ்க்கையைக் கடைப்பிடியுங்கள்
!
கூடி வாழாமல் தனித்து, இவ்வுலகில் யாரும் நிலையாக வாழ்ந்தது இல்லை என்ற உண்மையை உணருங்கள் !
-------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------
வாழ்நாட்கு = மனிதன் உயிரோடிருக்கும் காலத்தினை ; அலகு ஆய் = கணிக்கும் அளவு கோல் போல; வயங்கு ஒளி மண்டிலம் = விளங்குகிற ஒளி மிக்க சூரியன்; வீழ்நாள் படாது = பயனில்லாத காலம் என எதையும் கழிக்காமல்; எழுதலால் = அன்றாடம் கிழக்கே எழுந்து மேற்கே மறைவதால் ; வாழ்நாள் உலவா முன் – உங்கள் வாணாள் முடிவதற்கு முன்; ஒப்புரவு ஆற்றுமின் = அறச் செயல்களைச் செய்து ஒற்றுமையாகக் கூடி வாழுங்கள் ; யாரும் = (ஏனெனில்) எப்படிப்பட்டவரும்; நிலமிசைமேல் = இந்தப் பூமியின் மேல்; நிலவார் = நிலையாக வாழ்வது கிடையாது !
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம்
& இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.பி:2052, சுறவம் (தை) 11]
(24-01-2021)
-------------------------------------------------------------------------------------------------------------